கருடன், புராணம்

கருடன் (Garuda), காசிபர் - வினதை தம்பதியர்க்கு பிறந்த பறவை இனங்களின் அரசன். சூரியனின் தேரை ஓட்டும் அருணன் இவரின் தம்பி. காசிபர்கத்ரு தம்பதியர்க்கு பிறந்த நாகர்கள், கருடனின் எதிரிகள். திருமாலின் வாகனமாக அமைந்தவர் கருடன். சமஸ்கிருத மொழியில் கருடன் என்பதற்கு பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள்.[1][2]

கருடன்
கருடன்
அதிபதிபறவைகளின் அரசன்
தேவநாகரிगरुड़
சமசுகிருதம்கருடா
வகைபருந்து
இடம்வைகுந்தம், திருபாற்கடல்
துணைசுகீர்த்தி மற்றும் ருத்திரை

வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். வைணவ சமயத்தின் பெருமாள் கோயிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.கருடன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்

கருடனின் பிறப்பு

வாலகில்ய முனிவர்களின் தவ ஆற்றால் பிறந்தவர் வினதாவிற்கு பிறந்தவர் கருடன். கருடன் முதலில் இந்திரனுக்கு எதிரியாகவும், பின்னர் நண்பராகவும் விளங்குவார் என வாலகில்ய முனிவர்கள் கூறினர்.

புராண வரலாறு

கருடனை வாகனமாகக் கொண்ட திருமால்

சுகீர்த்தி மற்றும் ருத்திரை, கருடனின் மனைவியர். பெருமாள் கோயில் கொடிமரங்களில் கருடனின் திருஉருவம் காணப்படும். ஒருவர் உடலில் ஏறிய பாம்பின் விஷத்தை கருட வித்தியா மந்திரங்கள் செபிப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. கருடன் பெயரில் கருட புராணம் உள்ளது. அமிர்தத்தை, தேவ லோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்தவர். விஷ்ணுவின் வாகனமாக கருடன் இருப்பதால், வைணவர்கள் இவரைப் பெரிய திருவடி என்பர். (சிறிய திருவடி – அனுமார்)

தாய் அடிமை ஆதல்

ஒரு முறை வானத்தில் சென்று கொண்டிருந்த இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையின் நிறம் குறித்து, கத்ரு கேட்டதற்கு, அதன் நிறம் வெண்மை என வினதை கூற, கத்ரு அதன் நிறம் கருமை எனக் கூறியதால், குதிரையின் சரியான நிறம் குறித்த போட்டியில் தோற்றவர், வென்றவர்க்கு அடிமை என ஒப்பந்தமாயிற்று.

கத்ரு போட்டியில் வெல்ல வேண்டி தன் மக்களான ஆயிரக்கணக்கான கருநாகங்களை அழைத்து, உச்சைச்சிரவம் எனும் இந்திரனின் தேவலோக குதிரையின் உடலைச் சுற்றிக் கொள்ளுங்கள் என ஆணையிட, அவ்வாறே கருநாகங்கள் உச்சைச்சிரவம் என்ற வெண் குதிரைச் சுற்றிக் கொள்ள, குதிரை பார்ப்பதற்கு கருநிறமாக மாறியது. கத்ரு உடனே வினதையை அழைத்துக் கொண்டு கருமையாக இருந்த உச்சைச்சிரவம் எனும் குதிரையைக் காட்டினாள். வினதையும் குதிரையின் நிறம் கருமை என ஏற்றுக் கொண்டு, வினதை தன் குழந்தைகளான கருடன் மற்றும் அருணன் உடன் நாகர்களின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள்.

அடிமைத் தனத்திலிருந்து விடுதலை

கருடன், கத்ருவிடம் தனது தாயையும் தங்களையும் விடுவிக்குமாறு வேண்டினான். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வந்து தர வேண்டும் என்றதற்கு, கருடனும் தேவலோகத்திலிருந்து அமிர்த கலசத்தைக் கொண்டு வந்து நாகர்கள் முன்பு தர்ப்பைப்புல் மீது வைத்தார். உடன் வினதா, கருடன் மற்றும் அருணன் நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலையானர்கள். நாகர்கள் கடலில் குளித்துவிட்டுக் கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், இந்திரன் அமிர்த கலசத்தைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்ப்பைப்புல்லைத் தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன.

ஒரு முறை கருடன் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தவத்தில் இருந்த வாலகில்ய முனிவர்களை காப்பாற்றியதால், எதையும் எளிதில் சுமப்பவன் என்ற பொருளில் கருடன் எனப் பெயர் சூட்டினர் .[3]

கருடனின் அணிகலன்கள்

நவ நாகங்களில், ஆதிசேசனை இடது கால் நகத்திலும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும், வாசுகியை பூணூலாகவும், தட்சகனை இடுப்பிலும், கார்க்கோடனை கழுத்து மாலையாகவும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும், சங்கசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார் கருடன்.

கருடச் சின்னங்கள்

பல நாட்டுக் கொடிகளில் கருட உருவம் காணப்படுகிறது. இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளின் தேசிய சின்னமாக கருடன் உள்ளது. இந்தோனேசியா நாட்டின் பயணிகள் விமான நிறுவனத்தின் பெயர் கருடா ஆகும்.[4]

படக்காட்சியகம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.