நாதமுனிகள்

வைணவ பெரியோர்கள் (ஆசாரியர்கள் பரம்பரை) வரிசையில் முதன்மையானவரான நாதமுனிகள் கிபி 824ம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீரநாராயணபுரம் எனும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் அந்தணக்குடும்பம் ஒன்றில் ரங்கநாதன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர்.

நாதமுனிகள்

ஒரு முறை ‌கன்னட நாட்டிலிருந்து வந்த வைணவர்கள் குருகூர்ச் சடகோபன் (நம்மாழ்வார்) பாடிய ஆயிரம் பாடல்களுள் தாமறிந்த பத்துப்பாடல்களை வீரநாராயணபுரம் பெருமாள் முன்பு பாடியது கேட்டது முதல் மொத்தப் பாடல்களையும் அறிந்து கொள்ள அவாவுற்று நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரிக்கு வந்தார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற ஆழ்வார்கள் ‌அனைவரும் பாடிய 3776 பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்தார்.

3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார். பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி இப்பாடல்கள் காலத்தால் அழியாது இருக்கும் பொருட்டு இப்பாடல்களை பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்கு கற்பித்தார். இவ்விருவரே மேலை அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவர்களின் வழி வந்தோரே இன்றைய அரையர்கள்.

நாதமுனிகள் தொகுத்த இத்திவ்யப் பிரபந்தமே உலகின் அனைத்து மொழி பேசும் வைணவர்களுக்கும் ஆதாரமாகவும் தினப்படி வழிபாட்டிற்கும் விளங்குகிறது.

இவர் பெரியாழ்வார், மதுரகவியாழ்வார் ஆகியோர் பாடல்களுக்குத் தனியன்கள் பாடியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

கருவிநூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம்,

வெளியிணைப்பு

தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.