வார்த்தாமாலை

'வார்த்தை', 'மாலை' என்னும் இரண்டு சொற்கள் இணைந்து வார்த்தாமாலை ஆயிற்று. [1] வைணவ சமயத் தொடர்பான 456 வார்த்தைகளுக்கு இந்த நூலில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நாதமுனிகள் வார்த்தையிலிருந்து தொடங்கி, வடக்குத் திருவீதிப்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளையோடு முடிவடைகிறது. பொரியவாச்சான்பிள்ளை காலம் 13 ஆம் நூற்றாண்டு. எனவே இந்த நூல் 13 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது.

'பின்பழகிய பெருமாள் சேர்தருளிய வார்த்தாமாலை' என்னும் தொடரைக் கொண்டு [2] இதன் தொகுப்பாசிரியர் பின்பழகிய பெருமாள் எனக் கொள்ளப்படுகிறது. இவர் சிலவற்றைச் சேர்த்தவர் எனவும், நூலை உருவாக்கியவர் அல்லர் எனவும் மு. அருணாசலம் குறிப்பிடுகிறார். இந்த நூல் 'பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம்' என்னும் தொடர் கொண்டு முடிகிறது.

"ஸ்ரீ வைஷ்ணவர்கள் அவசியம் அறியவேண்டும் அர்த்தங்களையும் அணுஷ்டானங்களையும் பெண்களும் பேதைகளும் எளிதாக அறிந்து உஜஜீவிக்கும்படி ஸ்ரீமத் நாதமுனிகள் தொடக்கமானவர் அருளிச்செய்த வார்த்தாமாலை" - என என்பது இந்நூலின் முகப்பு ஏடு குறிப்பிடுகிறது.

ஆசாரியர் மாணாக்கர்களுக்குச் சொன்ன விடைகள் என்னும் பாங்கில் சொற்களின் விளக்கங்கள் உள்ளன. விளக்கங்கள் ஒரு சொல் வடிவிலும், மூன்று பக்கம் வரையிலான செய்தி வடிவிலும் உள்ளன. 441 ஆம் வார்த்தைக்கான விளக்கம் ஏழு பக்க அளவில் விரிவாக உள்ளது.

வார்த்தை விளக்கம் - எடுத்துக்காட்டு

  • அகங்காரமாவது ஒரு சர்ப்பம். [3] மமதையாகிறது அதனுடைய உடல். ராகத் துவேஷங்கள் அதனுடைய பற்கள். இப் பற்களை முறிக்கத் தீரும். [4]
  • பற்றிற்று எல்லாம் பற்றி அவனையும் பற்றுகை பக்தி. விடுவதெல்லாம் விட்டுத் தன்னையும் விடுதல் ப்ரபக்தி. [5]
  • எம்பெருமானை அபேட்சிக்கை வார்த்தாமாத்திரம். ஸ்ரீ வைணவர்களை அபேட்சிக்கை கையைப் பிடிக்கை. ஆசாரியனை அபேட்சிக்கை காலைப் பிடித்தல் [6]
  • எல்லா ஆசாரியர்களுடைய அபிப்பிராயமும், எல்லா ஆழ்வார்கள் திருவுள்ளக் கருத்தும், எல்லா வேதங்களுடைய கதியும், எல்லாச் சாத்திரங்களுடைய நினைவும், நிரூபித்த அளவில், ஆசாரியருடைய கைங்கரியமே[7] பரம பிரயோஜனம்[8] - என்று நஞ்சீயர் பிள்ளைக்கு அருளிச்செய்தார் என்று வடக்குத் திருவீதிப்பிள்ளை அருளிச்செய்வர். [9]
  • ஆசாரிய கைங்கரியம் தனக்குப் பசி விளைந்து உண்கை. பாகவத கைங்கரியம் தாய்க்குச் சோறு இடுகை. பகவத் கைங்கரியம் ஒண்பூண் உண்மையும் மூப்புக்குச் சோறு இடுகையும் - என்று வடுகநம்பி அருளிச்செய்வர். [10]
  • பிணச்சோறும், மணச்சோறும், விலைச்சோறும், புகழ்ச்சோறும், பொருட்சோறும், எச்சில்-சோறும் - இவை ஆறும் தியாஜ்யம். மற்றைச் சோறே வைணவன் உண்ணும் சோறு. - என்று தீர்த்தங்குடி சீயர் அருளிச்செய்வர். [11]
  • துறை அறிந்து இழிந்து, முகம் அறிந்து கொடுத்து, வினை இறிந்து பரிமாறி, நினைவு அறிந்து அடிமை செய்யவேண்டும். 405 ஆம் வார்த்தை

இந்த நூல் 13 ஆம் நூற்றாண்டு உரைநடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 288.
  2. சித்திரகூடம் கந்தாடை திருவேங்கடாச்சாரியார் அச்சிட்ட இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானத்தில் (1859 பதிப்பு) காணப்படும் விளம்பரக் குறிப்பு
  3. பாம்பு
  4. 11 ஆம் வார்த்தை
  5. 67 ஆம் வார்த்தை
  6. 191 ஆம் வார்த்தை
  7. தொண்டே
  8. பெரிதும் பயனுடையது
  9. 220 ஆம் வார்த்தை
  10. 221 ஆம் வார்த்தை
  11. 292 ஆம் வார்த்தை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.