மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த கி.பி 798க்குச் சற்று முன் பிறந்தவர். நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

பெயர்க்காரணம்

சிறுவயதிலிருந்தே செவிக்கினிய செந்தமிழில் நற்கவிதைகளைப் பாடிய காரணம் பற்றி இவருக்கு இச்சிறப்புப் பெயர் வந்தது.

கால நிர்ணயம்[1]

ஆதாரம் மதுரகவிகளின் காலம்
முனைவர் மா. இராசமாணிக்கனார் 9ம் நூற்றாண்டின் பிற்பகுதி
சாமி சிதம்பரனார் 9ம் நூற்றாண்டு
பூர்ணலிங்கம் பிள்ளை 9ம் நூற்றாண்டு
கலைக்களஞ்சியம் 7ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை

இடைக்காலம்

இளமைக்காலம்

இவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்றார். ஒரு காலகட்டத்தில் உலக விஷயங்களில் பற்று நீங்கி அயோத்தி, மதுரா, முதலிய வடநாட்டு திவ்ய தேசங்களை சேவிக்கச் சென்றார்.

ஆசார்யனைக் கண்டுகொள்ளல்

அயோத்தியில் தங்கியிருந்தபோது ஒரு நாளிரவில் வெளியே வந்தபோது தெற்கே ஒரு பேரொளியைக் காணுற்று வியப்படைந்தார். மறுநாளிரவிலும் அதே ஒளி அவ்வாறே தோன்றிற்று. உடனே மதுரகவிகள் 'தெற்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது; அதைச் சென்று காணவேண்டும்' என்று தீர்மானித்து தெற்கு நோக்கிப் புறப்பட்டார். அவ்வொளி தோன்றிய இடமாகிய திருக்குருகூரை அடைந்தார். புளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த அவ்வொளியாகிய நம்மாழ்வாரை சமாதியிலிருக்கக் கண்டார். முதலில் ஒரு பெரிய கல்லை கீழே போட்டு அந்தசத்தத்தினால் அவர் சமாதியைக் கலைத்தார். மேலும் அவர் நிலையை அறிய விரும்பி

"செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?"

என்று வினவினார்.

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"

என்று விடை வந்தது. இந்த வினா, விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது. 'சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்வு எப்படி இருக்கும்?' என்பது கேள்வி. 'தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்' என்பதே விடை.

மதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.

திருமந்திரம்

ஒம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். அதில் ஒம் என்பது முதல் பதம். நமோ என்பது மையப்பதம். நாராயணாய என்பது மூன்றாவது பதம். இதில் ஒம் என்பது பகவானுக்கு அடிமைப் பட்டிருப்பதைச் சொல்கிறது. இரண்டாவது பதம் ஆச்சாரியனுக்கு தொண்டு செய்வதை வலியுறுத்துகிறது. மதுரகவியின் பாசுரங்கள் திருமந்திரத்தின் மத்திய பதமாக எண்ணி அதை பிரபந்ததின் நடுவே வைத்துள்ளார்கள்.

கண்ணி நுண் சிறுத்தாம்பு

நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தினுள் மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்தது கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற ஒரே பதிகம் தான். அதனிலுள்ள பதினொன்று பாடல்களும் திருக்குருகூர் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப்பாடுவதே. அதனில் இரண்டாவது பாடல்:

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;
தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே.

குறிப்புகள்

  1. நாலாயிர திவ்யப் பிரபந்தம். நயவுரை: டாக்டர் ஜெகத்ரட்சகன். ஆழ்வார்கள் ஆய்வு மையம். சென்னை 17. இரண்டாம் பதிப்பு. 1997

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.