பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.

பூதத்தாழ்வார்
பிறப்புமாமல்லபுரம், தமிழ்நாடு
பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்துக்கு அண்மையில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில். இது குறித்து அறிவித்தல் பலகையில் எழுதப்பட்டிருப்பதைக் காண்க.

அவதாரத்தலம்

மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. இக் கோயிலின் வெளிச் சுவரிலே அதனைப் பூதத்தாழ்வாரின் அவதாரத்தலம் எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

கௌமோதகி அம்சம்

திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவம் நம்புகின்றது. திருமாலின் மீது இவர் கொண்ட பக்தியைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது.

முதலாழ்வார்கள்

இவர் பொய்கையாழ்வார், பேயாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.

கால நிர்ணயம்[1]

ஆதாரம் முதலாழ்வார்களின் காலம்
முனைவர் மா. இராசமாணிக்கனார் 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
சாமி சிதம்பரனார் 7ஆம் நூற்றாண்டு
பூர்ணலிங்கம் பிள்ளை 7ஆம் நூற்றாண்டு
கலைக்களஞ்சியம் 5ஆம், 6ஆம் நூற்றாண்டின் பின்பகுதி
மு. இராகவ அய்யங்கார் 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் 7ஆம்

நூற்றாண்டின் தொடக்கம் வரை

இறைவனின் நாடகம்

இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்க கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில் ஒருங்கிணைத்தான். எவ்வாறெனில், தனித்தனியாக தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்கு சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன்.

நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல் விளக்கு) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல் விளக்கு) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.இவ்வரலாற்றின் உட்பொருள் யாதெனில் பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது. அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம். ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் என்பதாம்.

மூன்று திருவந்தாதிகள்

அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது), மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.

Notes

  1. நாலாயிர திவ்யப் பிரபந்தம். நயவுரை: டாக்டர் ஜெகத்ரட்சகன். ஆழ்வார்கள் ஆய்வு மையம். சென்னை 17. இரண்டாம் பதிப்பு. 1997
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.