ஆழ்வார்கள்

வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர்.

தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.

அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.

இவர்கள் 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.

சொற்பொருள்

மரபுப்படி இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொற்பொருள் கூறுவர். ஆயினும் இந்தச் சொல் ஆள்வார் என்றும் வழங்கினதாகவும் பிறகு ஆழ்வார் என்று ஆயினதாகவும் S. பழனியப்பன் என்ற இந்தியவியல்/மொழியியல் ஆய்வாளர் பதிப்பித்துள்ளார்[1].

வரலாறு

கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய ~4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் திவ்விய பிரபந்தம் (அ) அருளிச்செயல் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார்.

பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது. நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தமிழ் வேதம்/ திராவிட வேதம் என்றும் போற்றப்படுகின்றது. திருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய்மொழிக்கும் உருகார் என்ற சிறப்பும் உண்டு.

பன்னிரு ஆழ்வார்கள்

  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. மதுரகவி ஆழ்வார்
  7. குலசேகர ஆழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கையாழ்வார்

12 ஆழ்வார்களின் காலநிரல் [2]

நூற்றாண்டுஆழ்வார்கள்எண்ணிக்கை
6முதல் ஆழ்வார் மூவர்: பொய்கை, பூதன், பேயன்3
7திருப்பாணாழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார்3
8குலசேகராழ்வார், பெரியாழ்வார், கோதை ஆண்டாள், திருமங்கையாழ்வார்4
9நம்மாழ்வார், மதுரகவியாழ்வார்2

வழிமுறை

நூற்றாண்டுவழிமுறையினர்
9நாதமுனிகள்
10ஆளவந்தார்
11இராமானுசர்
12பராசர பட்டர்
14மணவாள மாமுனிகள்

ஆழ்வார்களின் வரிசை அடுக்கு

ஆழ்வார்களை வரிசைப்படுத்துவதில் 12,13,14,15 ஆம் நூற்றாண்டுகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. இவை ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தோடு தொடர்புடையன அல்ல.

ஆழ்வார்திருவரங்கத்தமுதனார் 'இராமானுச நூற்றந்தாதி' [3]பின்பழகிய பெருமாள் சீயர் 'குருபரம்பரை' [4]வேதாந்த 'பிரபந்த சாரம்' [5]மணவாள மாமுனிகள் 'உபதேச ரத்தின மாலை' [6]
முதலாழ்வார் மூவர்1, 2, 31, 2, 31, 2, 31, 2, 3
திருப்பாணாழ்வார்491110
திருமழிசை5444
தொண்டரடிப்பொடி68109
குலசேகரர்7576
பெரியாழ்வார்8687
ஆண்டாள்9798 (தனித் தொகுப்பு)
திருமங்கை10101211
நம்மாழ்வார்111155
மதுரகவி1212612 (தனித் தொகுப்பு)

'திருமுடி அடைவு' என்னும் முறைமை மணவாள மாமுனிகள் வரிசையைப் பின்பற்றுகிறது.

மேலும் காண்க

அடிக்குறிப்பு

  1. http://www.academia.edu/9668394/%C4%80%E1%B8%BBv%C4%81r_or_N%C4%81ya%E1%B9%89%C4%81r_The_Role_of_Sound_Variation_Hypercorrection_and_Folk_Etymology_in_Interpreting_the_Nature_of_Vai%E1%B9%A3%E1%B9%87ava_Saint-Poets
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 198.
  3. 12ஆம் நூற்றாண்டு நூல்
  4. 13ஆம் மூற்றாண்டு நூல்
  5. 14ஆம் நூற்றாண்டு நூல்
  6. 15ஆம் நூற்றாண்டு நூல்

வெளி இணைப்புகள்

  • திராவிட வேதா தளம் ( Dravida Veda website) - ஆழ்வார்கள், அவர்களின் வரலாறு, மற்றும் அவர்களின் பாடல்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த இணையதளத்தை பார்க்கவும்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.