ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (16 அக்டோபர் 1700 - 1765) 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கருநாடக இசைக் கலைஞராவார்.

இளமைக் காலம்

திருவாரூர் மாவட்டத்தில் தக்ஷண துவாரகை என்னும் மன்னார்குடியில் பிறந்தார். இவர் வளர்ந்த க்ஷேத்திரம் தேனுஜவாசபுரம் என அழைக்கப்படும் ஊத்துக்காடாகும்.இந்த ஊர் திருவாருர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்காவில் கும்பகோணத்திலிருந்து திருக்கருகாவூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இவரின் தந்தையார் ராமச்சந்திர வாதுளர். இவரது தாயார் கமலநாராயணி. அவதார காலம் ஆவணி மாத மக நட்சத்திரம். இவரது காலம் தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்பன் காலம். இவரது சன்மார்க்க குரு கிருஷ்ண பரமாத்மா. வெங்கட சுப்பையருக்கு இளமையிலேயே இசையில் ஆர்வம் காணப்பட்டது. நீடா மங்கலத்தில் வாழ்ந்து வந்த நடேச ரத்தின பாகவதரிடம் இவர் இசை பயின்றார். மிக விரைவிலேயே பயிற்சி முடிவுற்றது. எனக்குத் தெரிந்தவையெல்லாம் சொல்லித் தந்துவிட்டேன், வேறு ஆசிரியரிடம் மேலும் கற்றுக் கொள் என குரு சொல்லி விட்டதும் வேறு ஆசிரியரைத் தேடினார். வேறு குரு கிடைக்காத நிலையில் தாயின் சொற்படி சிறீ கிருஷ்ணனையே குருவாகக் கொண்டு கலையைப் பயின்றார். நாளுக்கு நாள் தெய்வத் தன்மை தோய்ந்து தெய்வத்தன்மையான பாடல்களைப் புனைந்தார்.

இசைப்பணி

கண்ணனின் திருவிளையாடல்களைப் புனைந்து எண்ணற்ற பாடல்களை இயற்றத் தொடங்கினார். சில காலத்தின் பின்னர் தாயார் இறந்ததும் உலக வாழ்வில் பற்றற்று இறுதி வரை துறவியாகவே வாழ்ந்தவர். பல காலத்தின் பின் தற்போது பெரிய இசைக்கலைஞர்கள் முதல் இளங்கலைஞர்கள் வரை அனைவரும் இவரது பாடல்களைப் பயின்று மேடைகளிலும் பாடி வருகின்றனர்.

1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது 266வது ஜயந்தி கொண்டாடப்பட்டது. இவரது ஒரே மாணவர் ருத்திர பசுபதி நாயனக்காரர். மற்ற மாணவர்கள் குடும்பத்திலுள்ள சகோதரர், புத்திரிகள். இவரது சகோதரர் காட்டுக் கிருஷ்ணய்யருடைய பெண் வழியே 6வது தலைமுறையில் வந்த நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர், வெங்கட சுப்பையரின் பாடல்களைப் பாடியும், தொகுத்தும், வெளியிட்டும் பணியாற்றி வருகிறார்.

காட்டுக் கிருஷ்ணய்யர் பெண் வழியே இன்னொரு கிளையிலே தோன்றிய கல்யாணசுந்தரம், இராஜகோபாலன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவரும் கூடி ஊத்துக்காடு சோதரர் என்ற பெயரில் வெங்கட சுப்பையரின் பாடல்களைப் பிரபல்யப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.

இயற்றிய பாடல்களின் பட்டியல்

எண் பாடல் இராகம் தாளம்
1 தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதிர்த்த ... ஹம்சத்வனி ஆதி
2 புல்லாய் பிறவி...
3 காயம்பூ வண்ணனே...
4 ராஸவிலாஸ...
5 பிருந்தாவன நிலையே...
6 அலைபாயுதே.. கண்ணா... கானடா ஆதி
7 பால்வடியும் முகம்...
8 பார்வை ஒன்றெ போதுமே...
9 எந்த விதமாகிலும்...
10 ஆடாது அசங்காது வா கண்ணா... மத்யமாவதி ஆதி
11 ஸ்ரீ விக்ன ராஜம் பஜே...
12 ஸ்வாகதம் கிருஷ்ணா...
13 மரகத மணி மாய...
14 நீரத சமனிய...

இவரது பாடல்களில் ஓங்காரசித்கைய காலிங்க நர்த்தனா என்று தொடங்கும் பாடல் ஊத்துக்காட்டில் உள்ள இறைவனைக் குறிக்கும்.[1]

மேற்கோள்கள்

உசாத்துணை

பக்கம் எண்:577 & 578, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.