நம்மாழ்வார் (ஆழ்வார்)

நம்மாழ்வார் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். இவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்படுகிறார். கம்பர் இயற்றிய "சடகோபர் அந்தாதி" எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார்.[1]

நம்மாழ்வார்

வரலாறு

நம்மாழ்வார்

திருநெல்வேலிச் சீமையில் தாமிரபரணிக்கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் வசித்த காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் கலி பிறந்த 43 ஆவது நாளில் அவதரித்தார். இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியனவற்றைச் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.

பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்தபோது தெற்குத் திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தென்திசை நோக்கிப் பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு. மாறன் கண்விழித்த உடன் மதுரகவி ஆழ்வார் கேட்ட "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" கேள்விக்கு "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அளித்தார் நம்மாழ்வார். [2]

நூல்கள்

நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி திருவாய்மொழி இவை ரிக், யசுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாக பெரியோர்கள் சொல்வார்கள். இந்த திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 8 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார்.

பிறபெயர்கள்

கீழ்கண்ட 34 பெயர்கள் அனைத்தும் நம்மாழ்வாரின் பிறபெயர்களாகும்


  1. சடகோபன்
  2. மாறன்
  3. காரிமாறன்
  4. பராங்குசன்
  5. வேதம் தமிழ் செய்த மாறன்
  6. வகுளாபரணன்
  7. குருகைப்பிரான்
  8. குருகூர் நம்பி
  9. திருவாய்மொழி பெருமாள்
  10. பெருநல்துறைவன்
  11. குமரி துறைவன்
  12. பவரோக பண்டிதன்
  13. முனி வேந்து
  14. பரப்ரம்ம யோகி
  15. நாவலன் பெருமாள்
  16. ஞான தேசிகன்
  17. ஞான பிரான்
  18. தொண்டர் பிரான்
  19. நாவீரர்
  20. திருநாவீறு உடையபிரான்
  21. உதய பாஸ்கரர்
  22. வகுள பூஷண பாஸ்கரர்
  23. ஞானத் தமிழுக்கு அரசு
  24. ஞானத் தமிழ் கடல்
  25. மெய் ஞானக் கவி
  26. தெய்வ ஞானக் கவி
  27. தெய்வ ஞான செம்மல்
  28. நாவலர் பெருமாள்
  29. பாவலர் தம்பிரான்
  30. வினவாது உணர்ந்த விரகர்
  31. குழந்தை முனி
  32. ஸ்ரீவைணவக் குலபதி
  33. பிரபன்ன ஜன கூடஸ்தர்
  34. மணிவல்லி
  35. பெரியன்

கண்ணிநுண்சிறுத்தாம்பு

கண்ணிநுண்சிறுத்தாம்பு, வைணவ சமயத்தில் நம்மாழ்வாரைப் போற்றி மதுரகவியாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். இந்நூல் 11 தனியன்களைக் கொண்டது. மதுரகவியாழ்வாரால் நம்மாழ்வாரை வணங்கி பாடப்பட்ட இந்நூல் நாலாயிர திவ்யபிரபந்தம் தொகுப்பில் முதாலாயிரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது[3].

மேற்கோள்கள்

  1. Nammalvar
  2. நம்மாழ்வார், அ.சீனுவாச ராகவன், சாகித்திய அக்கதமி
  3. நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.