கூடற்புராணம்

கூடற் புராணம் [1] என்னும் நூல் மதுரையை அடுத்த இருந்தையூர் கோயிலில் உள்ள பெருமாள்மீது பாடப்பட்டது. இதனை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. எனினும் 16ஆம் நூற்றாண்டு புரூரவ சரிதை நூலிலுள்ள சில புதிய கதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருத்தலையும், நூலிலுள்ள பாடல் நடையையும் கருத்தில் கொண்டு இந்தக் கூடற்புராணம் 16ஆம் நூற்றாண்டு நூல் எனக் கொள்ளப்பட்டுள்ளது.

புலவர்
  • இவரது முதல் பாடல் வெண்ணீறு அணிந்த சங்கர நாராயணனைப் போற்றுகிறது. இதனால் இவர் சமயக் காழ்ப்புணர்வு இல்லாதவர் எனத் தெரிகிறது.
நூலமைதி
  • ஐந்து காண்டங்களைக் கொண்டது. முதல் காண்டம் பாயிரம். ஏனைய நான்கும் கிரேத காண்டம், திரேத காண்டம், துவாபர காண்டம், கலி காண்டம் என்று யுகங்களின் பெயரைக் கொண்டுள்ளன.
  • 757 விருத்தம்
  • 10 அவதாரம், 12 ஆழ்வார்கள் போற்றப்படுகின்றனர்.
  • ஆற்றுப்படைப் படலம், நாட்டுப்படலம் முதலான பல படலப் பிரிவுகளும் இதில் உள்ளன.
நூலிலுள்ள சில புதிய செய்திகள்
  • நம்மாழ்வார் 17 அடி கொண்ட ஆசிரியப்பா ஒன்றை மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கு அனுப்பினார். அதன் பொருளைக் காணமுடியாமல் சங்கத்தார் திகைத்தனர். நம்மாழ்வார் விளக்கினார்.
  • காசிபனுக்கு மக்கள் வரம் தந்த திருமால் அவனுக்கு ‘அலைவின்மை’ வரமும் அருளினார்

எடுத்துக்காட்டுப் பாடல்கள்

1
கண்ணன் கீர்த்தியும் கண்ணுதல் சீர்த்தியும்
விண்ணின் மீனமும் தேவரும் மேதினிக்கு
எண்ணர் எண்ணும் என்றிட்ட உரைகள் போல்
தண்ணெனும் மழைத் தாரைகள் வீழுமால்
2
பதின்மர் பாடலுக்கு முற்பதிகமாகவே
புதுவையாசிரியனார் புகல் பல்லாண்டு தான்
மதுரைமா நகர்தனில் பிறந்த வாய்மையால்
இதனை நேர் தலம் நிலத்து இயம்ப வல்லதோ
3
ஆக மாக வளாகம் கலக்குமே
யாக மாக வளாகம் கலக்குமே
நாக நாகமை நாகம் புரையுமேல்
நாக நாகமை நாகம் புரையுமே

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. மதுரைத் தமிழ்ச் சங்கம் பதிப்பு, செந்தமிழ்ப் பிரசுரம், 1929, தி. கி. இராமானுச ஐயங்கார் பரிசோதித்தது
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.