காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்

திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.[1] இக்கோயிலில் பாஞ்சராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் தோற்றம்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
காஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் தோற்றம்
பெயர்
புராண பெயர்(கள்):பெருமாள் கோயில், திருக்கச்சி. ஹஸ்திகிரி, வேழமலை. அத்திகிரி
பெயர்:காஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தேவராஜப் பெருமாள்
உற்சவர்:பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)
தாயார்:பெருந்தேவி தாயார்
உற்சவர் தாயார்:பெருந்தேவி தயார்
தீர்த்தம்:வேகவதி நதி, அனந்த சரஸ், சேஷ, வராக, பத்மா, அக்னி, குசேல, பிரம்ம தீர்த்தம்.
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:பூதத்தாழ்வார் (2), பேயாழ்வார் (1), திருமங்கை ஆழ்வார்(4).
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:புண்யகோடி விமானம்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

வரலாறும் சிற்பக்கலையும்

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி

கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

கோயில் அமைப்பும் உட்சன்னதிகளும்

மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலத்துடன் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்ப்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோயிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றிருக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருபத்தி நான்கு படிகள் ஏறிச்சென்று வணங்கி வெளியே வரும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசித்தம். மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரத்தாழ்வர் சன்னிதி உள்ளது. கோயில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹ பெருமாள், சன்னதிகளும், கரி மாணிக்க வரதர், அனந்தசரஸ் குளத்தில் மேற்கு புறத்தில் ரங்கநாதர், ஶ்ரீனிவாசர் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள்ஆச்சாரியர்கள் சன்னதிகளும் அழகுற அமைந்துள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

அத்தி வரதர்

அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.[2] 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார். இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்கு பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.

பாடல்கள்

மங்களாசாசனம், திருமங்கையாழ்வார்

என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-

வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-

ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-

ஆழியான் அத்தியூரான்.

அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-

துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ-

மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்

இறையாவான் எங்கள் பிரான்.

திருவிழாக்கள்

வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.

போக்குவரத்து

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரயில்களும் உள்ளன.

உசாத்துணை

  1. "அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்". dinamalar.com. மூல முகவரியிலிருந்து 30-12-2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24-02-2017.
  2. "அத்தி வரதர் பின் உள்ள அறிவியல்". பார்த்த நாள் 17 July 2019.

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.