திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்

திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி. [1]

சௌமியநாராயணன் கோயில்
பெயர்
பெயர்:சௌமியநாராயணப் பெருமாள் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவு:திருகோஷ்டியூர்
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, மாசி தெப்பத் திருவிழா மற்றும் நவராத்திரி.
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக் கலை

போக்குவரத்து

மதுரையிலிருந்து 65 கி. மீ தொலைவிலும், சிவகங்கைதிருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

கருவறை

கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். மகாலெட்சுமி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.

அஷ்டாங்க விமானம்

ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.

மகாமக கிணறு

புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூவன். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை "மகாமக கிணறு' என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.

ராமானுஜருக்கு உபதேசம்

திருக்கோஷ்டியூர் நம்பியிடம் எட்டழுத்து திருமந்திர உபதேசம் பெற ராமானுஜர் வந்த போது, யார் எனக் கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி வீட்டிற்குள்ளிருந்தவாறே, "நான் செத்து வா!' என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். அவரை அழைத்த நம்பி, ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார்.

தல வரலாறு

இரணியகசிபை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தல் விஷ்ணு எழுந்தருளினார். தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.

கோபுர விமானத்தின் சிறப்பம்சம்

மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் ஓரு சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளது.

விளக்கு நேர்த்திக்கடன்

மகப்பேறு கிடைக்க, திருமகள் தாயாருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் அப்பேறு கிடைப்பதாக தொன் நம்பிக்கை.

பொதுவான தகவல்

கோயில் பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் உள்ளது. அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மருக்கு அருகில் ராகு, கேது உள்ளனர்.

மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள்

  1. பெரியாழ்வார்
  2. திருமங்கையாழ்வார்
  3. திருமழிசையாழ்வார்
  4. பூதத்தாழ்வார்
  5. பேயாழ்வார்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. அருள்மிகு சவுமியநாராயணர் திருக்கோயில்

வெளி இணைப்புகள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.