தேவ உலகம்

இந்து தொன்மவியல் அடிப்படையில் தேவ உலகம் என்பது பதினான்கு உலகங்களில் ஒன்றாகும். இது தேவர்கள் வாழ்கின்ற உலகம் என்பதால் தேவ உலகம் என்று அழைக்கப்பெறுகிறது.[1] இந்திரன் ஆள்வதால் இந்திர லோகம் அல்லது இந்திர புரி என்றும் வழங்கப்பெறுகிறது. மேலும் தேவ லோகம் , சொர்க்க லோகம் , சொர்க்க புரி என பல்வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

பூமியில் இறைவழிபாடு, மற்ற உயிர்களுக்கு உதவுதல் போன்றவற்றைச் செய்யும் மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.


இந்திரப் பதவி

இந்திரப் பதவி என்று அழைக்கப்பெறும் தேவ உலகை ஆளுகின்ற பதவியை மிகவும் பெருமையான ஒன்றாகவும், மிகவும் உயர்வான ஒன்றாகவும் நினைக்கப்பெறுகிறது.[2] இப்பதவியை கைப்பற்ற அரக்கர்கள் முயலும் போது, சிவபெருமான், திருமால் போன்ற கடவுள்கள் அரக்கர்களை அழித்து தேவ லோகத்தினை மீண்டும் தேவர்களுக்கே மீட்டு தருவதாக புராணங்கள் கூறுகின்றன.

தேவர்கள்

இந்த உலகத்தில் கந்தவர்கள் என்று அழைக்கப்பெறுகின்ற தேவர்கள் வசிக்கின்றார்கள். சூரியன், சந்திரன், சனி, ராகு, கேது போன்ற நவ கிரகங்களின் அதிபதிகளும், அக்னி, வருணன், வாயு போன்ற பஞ்ச பூதங்களின் அதிபதிகளும் இந்த உலகில் இருக்கின்றார்கள்.

தேவ கன்னிகள்

இந்த உலகத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்துமை போன்ற தேவ கன்னிகள் இருக்கிறார்கள். இவர்கள் நடனக்கலையில் சிறந்தவர்களாகவும். அதீத அழகுடையவர்களாகவும் வர்ணனை செய்யப்படுகிறார்கள்.[3] தேவர்களின் அரசான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் இவர்களின் நடனங்களைக் கண்டு களிப்பதாகக் கூறப்படுகிறது.

தேவ உயிரினங்கள்

இத்துடன் காமதேனு, கற்பக விருட்சம் என்ற கேட்டதைத் தருகின்ற தேவ உயிரினங்களும், இவர்கள் பருகுவதற்கு அமுதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.

காண்க

இந்து சமயம்

மேற்கோள்கள்

  1. இந்திர லோகம் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா -திருப்புகழ் - பாடல் 468
  2. இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -திருமாலை 2
  3. மகாபாரதம் - ஆதிபர்வத்தில் சுந்தோபசுந்தோ பாக்கியானம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.