இந்து தொன்மவியல்

இந்து தொன்மவியல் என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பெற்ற வேதங்களையும், புராணங்களையும் அடிப்படையாக கொண்டதாகும். இதில் உலகம் தோன்றிய விதம், கடவுள்களின் தோற்றம், காலக்கணக்கீடு, வழிபாட்டு முறை என பலவகையான செய்திகளை கொண்டுள்ளது.

அடிப்படை நூல்கள்

வேதங்கள்

வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வன என்ற நான்கு வேதங்கள் சதுர் வேதங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்து தொன்மவியல் இந்த நான்கு வேதங்களை அடிப்படையாக கொண்டதாகும்.

உபநிடதங்கள்

உபநிடதங்கள் (Upanaishads) பண்டைய இந்திய வேதாந்த இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன.

புராணங்கள்

புராணங்கள் என்பது வேதங்களையும், உபநிடதங்களையும் எளிமையாக விளக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதாகும். வேத வியாசர் என்பவரால் தொகுக்கப்பெற்ற பதினெண் புராணங்கள் புகழ்பெற்றதாகும். இந்தப் பேரண்டப் படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும் வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் என ஐந்தையும் விளக்குகின்ற புராணங்கள் மகாபுராணங்கள் என்றும், இவைகளில் ஒன்றோ அல்லது இரண்டோ குறைவாக விளக்கும் புராணங்கள் உபபுராணங்கள் என்றும் அழைக்கப்பெறுகின்றன.

ஆகமங்கள்

ஆகமம் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களின் கொள்கை விளக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும் கூறும் நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஆத்ம ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.

இதிகாசங்கள்

இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும். இராமாயணமும், மகாபாரதமும் இருபெரும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன. திருமாலின் அவதாரமான இராமனின் வரலாற்றினை இராமாயணம் எடுத்துரைக்கின்றது, அதற்கு அடுத்த அவதாரமான கிருஷ்ண அவதாரம், பகவத் கீதை மற்றும் குருச்சேத்திரப் போரினையும் மகாபாரதம் எடுத்துரைக்கின்றது. அத்துடன் இவை இரண்டிலும் ஏராளமான கிளைக்கதைகளும் அடங்கியுள்ளன.

இந்துக் காலக் கணிப்பு முறை

இந்துக் காலக் கணிப்பு முறை சூரிய மானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி அமைந்துள்ளது. சூரிய மானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும்.

கருவி

காண்க

ஆதாரம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.