பிரம்ம சூத்திரம்

பிரம்ம சூத்திரம் :- சூத்திரம் என்றாலே சுருங்கக்கூறுவது. மிகப்பெரிய உண்மைகளை மிகச் சில சொற்களால் சொல்கிறது பிரம்ம சூத்திரம். எது உபநிடதங்களில் உள்ளதோ, எதுவெல்லாம் கீதையில் பேசப்பட்டதோ அதுவெல்லாம் பிரம்ம சூத்திரத்தில் அடக்கம். அண்டத்தில் உள்ளதை அணுவாக்கித் தந்திருக்கிறார் வியாசர். உபநிடதங்களில் சொல்லப்படுபவற்றை ஒழுங்கமைத்துச் சுருக்கி விளங்கவைக்கும் முயற்சியில் இயற்றப்பட்ட நூல். இதன் ஆசிரியர் வியாசர் எனும் பாதராயணர் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. பகவத்கீதையில் பிரம்ம சூத்திரம் தொடர்பான குறிப்புகள் வருவதால் இது கீதைக்கும் முற்பட்டதெனத் தெளிவாகிறது.

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்களில், பிரம்ம சூத்திரமும் ஒன்றாகும்.

பிரம்ம சூத்திரம் பெயர்க் காரணம்

இந்து தத்துவங்களின்படி பரம்பொருளை விளக்குவதற்காகச் சூத்திரங்கள் எனப்படும் நூற்பாக்களால் ஆனதால் இந்நூலுக்குப் பிரம்ம சூத்திரம் என்னும் பெயர் உண்டாயிற்று. வேதத்தின் இறுதிப் பகுதியாக அதாவது வேதத்தின் அந்தமாகக் கருதப்படும் உபநிடதங்களில் சாரமாக அமைந்திருப்பதன் காரணமாக இது வேதாந்த சூத்திரம் எனவும், பிரம்ம மீமாம்சை, வேதாந்த தர்சனம், என்கிற பெயர்களால் இது அறியப்படுகிறது. மீமாம்சம் என்றால் ஆழமாக சிந்திப்பது, ஆராய்வது, விவாதிப்பது என்று பொருள். வேதாந்தம் என்றால் வேதத்தின் முடிவு பகுதியான, உத்தர மீமாம்சை என்று அழைக்கப்படும் உபநிடதங்கள். வேதாந்த தரிசனம் என்பதில் தரிசனம் என்ற சொல்லுக்கு ‘பார்த்து அறிதல்’ என்று பொருள். பார்த்ததை மட்டும் அறிவதல்ல, பார்த்ததின் உட்பொருளையும் அறிவதாகும்.

பிரம்ம சூத்திரத்தின் அமைப்பு

555 சூத்திரங்களை கொண்ட பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்கள், ஒவ்வொரு பாதத்திலும் அதிகரணங்கள் (தலைப்புகள்) என்று சூத்திரங்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 1.1.1 என்றால் முதல் அத்தியாயம், முதல் பாதம், முதல் சூத்திரம் ஆகும். முதலாவது சமன்வய அத்தியாயம், இது சமன்படுத்துகிறது. இரண்டாவதான அவிரோதா அத்தியாயம், முரண்பாடுகளை களைகிறது. மூன்றாவதான சாதனா அத்தியாயம், வீடுபேறுக்கான வழிகளைப் பயில்வது. நான்காவது பலன் அத்தியாயம் வீடுபேற்றை விவரிப்பது.

பிரம்ம சூத்திரத்தின் சிறப்பம்சம்

இவை வேதாந்த தத்துவத்தை விளக்குபவையாக கருதப்படுகின்றன. “வேதங்கள் என்கிற மரத்தில் பூத்திருக்கிற உபநிடதப்பூக்களைத் தொடுத்திருக்கிற ஞானமாலையே பிரம்ம சூத்திரம்” என்கிறார் ஆதிசங்கரர். ”நாம், இந்த உலகம், இதற்கு காரணமான மூலப்பொருளான ஈஸ்வரன்” ஆகிய மூன்று தத்துவங்களை விவாதிக்கிறது. அண்டத்தில் உள்ளதை அணுவாக்கி தந்திருக்கிறார் வியாசர். பிரம்ம சூத்திரம் கைக்குள் அகப்படுத்தப்பட்ட கடல். உலக உயிர்கள் அனைத்தும் பிரம்மத்துடன் தொடர்புடையவைதாம். அந்தத் தொடர்பை அறிய பிரம்மத்தை அறிய ஆத்ம ஞானம், பிரம்ம சிந்தனை, பிரம்ம தியானம் தேவை என்கிறார் ஆதிசங்கரர்.

பணம், புகழ், பதவி, உலகியல் இன்பம் ஆகியவைகளைத் தாண்டி ஆராய்பவர்களுக்கு பிரம்ம சூத்திரம் ஒருவழிகாட்டி. மேலும் பிரம்ம சூத்திரம் மதசார்பற்றது. எந்தக் கடவுளைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்பதுதான். மிகப்பெரிய உண்மைகள் சூத்திரங்களாக வடித்தெடுக்கப்பட்டுள்ளன. சூத்திரம் என்றாலே விதி, இரகசியம், தீர்ப்பு, உபாயம் என்ற பல பொருள்களும் பிரம்ம சூத்திரத்திற்கு பொருந்தும்.

இது பிரபஞ்சத்தின் தோற்றம், பிரம்மம், மனிதப்பிறவி, மரணம், வீடுபேறு ஆகியவை பற்றி விவரிக்கிறது. பிரம்ம சூத்திரம் தர்க்க நூல் வகையைச் சார்ந்தது. பிரம்ம சூத்திரம் ஆராய்ச்சி பூர்வமான சிந்தனையைத் தூண்டுவது. இது வேத உபநிடதங்களை ஆராய்கிறது. விசயங்களை விவாதிக்கிறது. முரண்பாடானவைகளை மறுத்து, தகுதியானவற்றை உறுதிப்படுத்துகிறது.

பிரம்ம சூத்திரத்தின் அவசியம்

இந்து சமயத்துக்கு அடிப்படையாக விளங்குவன வேதங்கள். வேதங்களின் இறுதிப்பகுதியாகவும், அவற்றின் சாரமாகவும் கருதப்படுபவை உபநிடதங்களாகும். நூற்றுக்கு மேற்பட்டனவாக உள்ள இந்த உபநிடதங்கள் பல்வேறு காலப்பகுதிகளில் உருவானதாலும், பலரால் இயற்றப்பட்டதாலும் இவற்றிலுள்ள தகவல்கள் ஒழுங்கின்றியும், சிதறிய நிலையிலும், பல சமயங்களில் ஒன்றுக்கொன்று முரணாகவும் தோன்றுவதால், இவற்றை வாசித்து விளங்கிக் கொள்வது மிகக் கடினமானது. ஆகவே பிரம்ம சூத்திரங்கள் இயற்றப்பட்டது

பிரம்ம சூத்திரத்தின் உரையாசிரியர்கள்

உபநிடதங்களுக்கு விளக்கங்கள் இந்த நூலும், அதன் சுருக்கம் காரணமாக அதன் உள்ளடக்கத்தைப் பல்வேறு விதமாகப் புரிந்து கொள்வதற்கு இடமளித்ததாகக் கூறப்படுகின்றது. இந்நூலுக்கு விளக்கமாக விரிவுரைகளை எழுதிய சங்கரர், இராமானுஜர், மத்வர், ஸ்ரீகண்டர், போன்றோர் இந்நூலின் உள்ளடக்கங்களுக்குத் தாங்கள் உணர்ந்துகொண்டபடி, வெவ்வேறு விதமான விளக்கங்களை அளித்ததன் மூலம், வேதாந்தம் - அத்வைதம், துவைதம் மற்றும் விசிஷ்ட அத்வைதம் என்று மூன்று பிரபல பிரிவுகள் அடைந்தன.

இதனையும் காண்க

ஆதாரநூல்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.