மாண்டூக்கிய உபநிடதம்

மாண்டூக்ய உபநிடதம் 108 உபநிடதங்களுள் ஒன்று. ”மாண்டூகம்” என்பதற்கு சமற்கிருத மொழியில் தவளை என்று பொருள். இந்த உபநிடதம் சொல்ல வந்த பொருளை நேரடியாக சொல்லாமல், தவளை போல இங்கும் அங்கும் தாவித் தாவி செல்வது போன்று சொல்வதால், இதற்கு மாண்டூக்ய உபநிடதம் என்று பெயர் பெற்றது. [1][2]

ஆதிசங்கரரின் குருவான கோவிந்த பகவத்பாதர் என்பாரின் குருவான கௌடபாதர் இந்த உபநிடதத்திற்கு 215 செய்யுட்களில் மாண்டூக்ய காரிகை எனும் விளக்க உரை எழுதியுள்ளார்.[3] இந்த உபநிடதத்திற்கு ஆதிசங்கரர் மற்றும் மத்வர் உரை எழுதியுள்ளனர். இந்த உபநிடதம் 12 மந்திரங்களைக் கொண்டது. இது அதர்வண வேதத்தில் அமைந்துள்ளது. அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரமே இந்த உபநிடத்திற்கும் சாந்தி மந்திரமாக உள்ளது.

உபநிடதத்தின் சாந்தி மந்திர விளக்கம்

வணக்கத்திற்குரிய தேவர்களே, நாங்கள் செவிகளால் நல்லதை கேட்போமாக. கண்களால் நல்லதை பார்ப்போமாக. உறுதியான உடல் உறுப்புக்களுடன் வேதங்களால் உங்களை நாங்கள் புகழ்ந்து கொண்டு எங்களுக்கு எவ்வளவு வாழ்நாள் இறைவனால் வழங்கப்பட்டுள்ளதோ அவ்வளவு காலம் வரை அதை அனுபவிப்போமாக. இந்திரதேவர், சூரியதேவர், கருடதேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும். பேரறிவுடைய தேவகுரு பிரகசுபதி எங்களுக்கு நன்மையை வழங்கட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

மையக்கருத்து

ஓம்” என்ற எழுத்து நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதில் ஒலி வடிவாக மூன்று பகுதிகளும், ஒலி அற்றதாக ஒரு பகுதியும் உள்ளது. ஒலி வடிவான மூன்று பகுதிகள் முறையே காரம், காரம், காரம் அதாவது அ, உ, ம, என்ற மூன்ரெழுத்தின் வடிவே ”ஓம்”. ஒலியற்ற நான்காவது நிலையே ”துரீயம்” எனப்படும் பரம்பொருள். ஆத்மாவே பிரம்மம். இந்த ஆத்மா நான்கு நிலைகளாக பிரிக்கப்படுகிறது. ஆத்மா சட உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை ”விஸ்வன்” என்ற பெயருடன் விழிப்பு நிலையில் உள்ளது. இது முதல் நிலை. அதே ஆத்மாவானது சூக்கும உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை ”தைசசன்” என்ற பெயருடன் கனவு நிலையை அடைகிறது. இது ஆத்மாவின் இரண்டாம் பகுதியாகும். அதே ஆத்மா காரண உடலுடன் சம்பந்தம் வைக்கும் போது அதை ”பிராக்ஞன்” என்ற பெயருடன் அறியாமையையும் ஆனந்தத்தை மட்டுமே அனுபவிக்கிறது. இது மூன்றாம் நிலை. ஆத்மாவின் நான்காம் நிலையின் பெயர் ”துரீயம்” எனப்படும். துரீயம் எனில் நான்காவது என்பர். இந்த துரீயம் அறிவு வடிவமானது. எந்த உடலுடனும் சம்பந்தப்படாதது. ஓங்காரத்தின் ஒலி அற்ற நிலையே ”துரீயம்”. ஆத்மவின் மற்ற மூன்று அம்சங்களான விச்வன், தைசசன், பிராக்ஞன் நிலையற்றதாக உள்ளது. ஆனால் ஆத்மாவின் துரீய அம்சம் நிலையானது.

மேற்கோள்கள்

  1. https://archive.org/details/MandukyaUpanishad
  2. https://ia600704.us.archive.org/14/items/UpanishadsTamil/08_Mandukya_Upanishad.pdf
  3. https://archive.org/details/EssenceOfKarika

துணை நூல்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.