பிரசின உபநிடதம்

பிரச்ன உபநிடதம் :- ‘பிரச்ன’ எனும் சமற்கிருத சொல்லுக்கு ‘கேள்வி’ என்று பொருள். இவ்வுபநிடதம் அதர்வண வேதத்தைச் சார்ந்தது. அறிவை அடைய விரும்பும் அறுவர் பிப்பிலாத முனிவரை அணுகி ஆறு கேள்விகள் கேட்டனர். எனவே இவ்வுபநிடதத்திற்கு பிரச்ன உபநிடதம் என்று பெயர் வழங்கலாயிற்று. இறையுணர்வில் நிலை பெற்ற ஆறு மாணவர்களான சுகேசன், சத்ய காமன், கார்க்கியன், கௌசல்யன், பார்க்கவன் மற்றும் கபந்தி ஆகியோர், வேள்விக்கான விறகுகளுடன், உலக உற்பத்தி, மனிதனை இயக்கும் சக்திகள், பிராணன் எவ்வாறு செயல்படுகிறது, ஓங்கார தியானம், ஆன்மா எங்குள்ளது என்பது பற்றி பிப்பிலாத முனிவரை அணுகி கேட்ட கேள்விகளால், இவ்வுபநிடதம் ஆறு அத்தியாயங்களாக உள்ளது. இவ்வுபநிடதம் பிரம்ம(ஆத்மவித்யா) மற்றும் ஓங்கார தியானத்தைப் பற்றியும் விரிவாக கூறுகிறது. [1]

இவ்வுபநிடத சாந்தி மந்திரமும் விளக்கமும்

அதர்வண வேதத்தில் இந்த உபநிடதம் இருப்பதால், அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரமே இவ்வுபநிடதத்திற்கும் பொருந்துகிறது. “பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா:|..........எனத் தொடங்கும், சாந்தி மந்திரத்தின் பொருள், தேவர்களே, செவிகளால் நல்லதைக் கேட்போமாக, கண்களால் நல்லதைப் பார்ப்போமாக, உறுதியான உறுப்புக்களுடன் வேதங்களால் உங்களை நாங்கள் புகழ்ந்து கொண்டு எவ்வளவு ஆயுள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோ அதை அனுபவிப்போமாக. ஓங்கிய புகழையடைந்த இந்திரன் எங்களுக்கு நன்மையை அருளட்டும். அனைத்தையும் அறிகின்ற சூர்ய தேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும். தடையின்றிச் செல்லும் கருடதேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும். பேரறிவுடைய பிரகசுபதி எங்களுக்கு நன்மையை அருளட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. (இங்கு சாந்தி என்ற சொல்லிற்கு தடைகள் நீங்கட்டும் என்று பொருள். இயற்கை, சூழ்நிலை, உடல் முதலிய மூன்று இடங்களிருந்து நமக்கு வரும் தடைகள் அமைதி அடைய வேண்டும். அதாவது நீங்கவேண்டும் என்று மும்முறை கூறப்படுகிறது).

உள்ளடக்கம்

முதல் கேள்வியும் அதற்கான பதிலும்: உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின? பதில்: உயிரினங்களைப் படைக்கக் கடவுள் விரும்பினார். அதற்காகத் தவத்தில் ஈடுபட்டார். அதன்பின் வானத்தையும் பிராணனையும் படைத்து இந்த அனைத்து உலகங்களையும் அதனில் பொருத்தினார். உயிர்களை உற்பத்திச் செய்வதற்காக காற்று, நெருப்பு, நீர், பூமி படைத்தார்.

இரண்டாம் கேள்வியும் பதிலும்: மனிதனை இயக்குபவர்கள் யார் யார்? பதில்:வானம், காற்று, நெருப்பு, நீர், பூமி, பேச்சு, மனம், பார்வை, கேட்கும் திறன் ஆகிய தேவதைகளே மனிதனை இயக்குகின்றது.

மூன்றாம் கேள்வியும் பதிலும்: பிராணன் எவ்வாறு செயல்படுகிறது? பதில்; பிராணன் ஆன்மாவிலிருந்து தோண்றுகிறது. மனிதனும் அவனுடைய நிழல் போல ஆன்மாவில் பிராணன் பரவியுள்ளது. மனதின் செயல்பாடுகளால் அது இந்த உடலில் வருகிறது.

நான்காவதான கேள்வியில் ஐந்து துணைக் கேள்விகளும் அதற்கான பதில்களும் : மனிதன் எத்தனை நிலைகளில் இருக்கிறான் அதன் தன்மைகள் என்ன? பதில்: ஒரு மனிதன் மூன்று நிலைகளில் வாழ்கிறான். அவைகள் 1.உறக்க நிலை 2. விழிப்பு நிலை 3.கனவு நிலை.

1. உறக்க நிலையில் மனிதனின் புலன்கள் அனைத்தும் மனதில் ஒடுங்கிவிடுகிறது. அப்போது அவன் கேட்பதில்லை, பார்பதில்லை, முகர்வதில்லை, உணர்வதில்லை, சுவைப்பதில்லை, பேசுவதில்லை(அதாவது நினைவுடன்), மகிழ்வதில்லை. உறக்க நிலையில் பிராணசக்தியாகிய மூச்சுக்காற்று மட்டும் விழித்திருக்கின்றது.

2. கனவு நிலையில் ஒரு மனிதன் தன் பெருமையை தானே அனுபவிக்கிறான். விழிப்பு நிலையில் பார்த்தவைகள், கேட்டவைகள், அனுபவித்தவைகளை கனவு நிலையில் சில நேரங்களில் அனுபவிக்கிறான். கனவு நிலையில் காண்கின்ற மனிதர்களையும், மற்றவைகளையும் உண்மையில் இல்லை. மனமே அனைத்துமாகி மீண்டும் அவற்றை அனுபவிக்கிறது.

3. உறக்க நிலையில் இன்பத்தை அனுபவிப்பது யார் எனில், ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மனமே இந்த இன்பத்தை அனுபவிக்கிறது.

4. ஒளியால் அடக்கப்படுகின்ற மனம் என்பது என்ன, என்பதற்கு உறக்க நிலையில் புலன்கள், மனம் ஆழ்மனம் ஆகியவைகள் ஒடுங்கி விடுவதால், இங்கே வெளி உலக அனுபவங்கள் மற்றும் மனவுலக அனுபவங்களான கனவுகளும் இல்லை. மேலும் புத்தி சித்தம் கூட ஒடுங்கி விடுகிறது. ஆனால் “நான்” என்ற உணர்வு மட்டும் விழித்து இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்ததும் ஆனந்தமாகக் உறங்கினேன் என்கிறான். இங்கு மனம் உணர்வுத் திரளில், உணர்வுக் குவியலில் ஒடுங்கி விடுகிறது என்று பொருள்.

5. அனைத்திற்கும் ஆன்மா ஆதாரமாக எவ்வாறு செயல்படுகிறது என்ற கேள்விக்கு, பிப்பலாத முனிவர் கூறுகிறார்: கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், அறிவு, சித்தம், “நான்” என்ற உணர்வு, பிராணன் ஆகிய அனைத்தும் ஆன்மாவில் அடங்கி விடுகிறது.

6. ஐந்தாவது கேள்வியை சத்யகாமன் என்ற மாணவன், ஓங்காரத்தின் பெருமை மற்றும் ஓங்கார மந்திரத்தை ஆழ்ந்து தியானிப்பவன் அடையும் நிலைப் பற்றி கேட்கிறான். பிப்பலாத முனிவரின் பதில்: இறைவனை குறிக்க ஒரு சொல் இருக்குமானால் அது ஓம் என்ற ஒலியே என்று பதஞ்சலி முனிவர் குறிப்பிடுகிறார். இறைவனை உருவ வடிவில் தியானிப்பவன் சாதாரண நிலையில் இருப்பவன். உயர்நிலையில் இருப்பவன் இறைவனை உருவமற்ற நிலையில் தியானிப்பவன். ஓங்கார மந்திரம் ’அ’ ‘உ’ ‘ம’ என்ற எழத்துக்களின் சேர்கையால் உருவானது. இதுதான் முதன்முதலாகப் படைக்கப்பட்ட மந்திரம். இந்த மந்திரத்தின் விரிவே காயத்திரி மந்திரம். ஓங்கார மந்திரத்தை தியானிப்பதால் உணர்வில் ஒளி பெறுகிறான், மனம் பலம் பெறுகிறது, இறுதியாக பிரம்மத்தில் ஐக்கியம் அடைகிறான்.

7. ஆறாவதாக பரத்துவாசரின் மகன் சுகேசன், பிப்பிலாத முனிவரிடம் ’ஆத்மா’ வைப் பற்றி கேட்டதற்கு, ஆத்மா என்பது பிரம்மத்தின் பிரதிபிம்பமாக நம் இருதய குகையில் உள்ளது. ஆத்மாவிடமிருந்து உடலில் கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம், அகங்காரம், பிராணன், உயிர் என்ற 16 அம்சங்கள் தோண்றின. இந்த 16 அம்சங்களால் உருவான சட உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை. எனவே ஆத்மாவை அறிந்து மரணத்தை வெல்லுங்கள் என்று கூறி முடிக்கிறார் பிப்பிலாத முனிவர்.

ஆதார நூல்கள்

மேற்கோள்கள்

  1. https://archive.org/details/PrasnaUpanishad

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.