கடோபநிடதம்

கடோபநிடதம் கிருஷ்ண யசூர் வேதத்தில் அமைந்துள்ளது. இதற்கு ஆதிசங்கரர், மத்வர் ஆகியவர்கள் உரை எழுதி உள்ளனர். 119 மந்திரங்களைக் கொண்ட இந்த உபநிடதம் இரண்டு அத்தியாயங்களாகவும் ஒவ்வொரு அத்தியாயமும் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு பகுதிகளை வல்லிகள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த உபநிடதம் கதை வடிவில் அமைந்துள்ளதால் இதை கடோபநிடதம் என்பர்.[1][2][3]

இது சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிரியமான உபநிடதம்.தமது சீடரிடம், ’உபநிடதங்களில் அதைப்போல அவ்வளவு அழகியது வேறு எதுவும் இல்லை. நீங்கள் எல்லோரும் அதை மனப்பாடம் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வெறுமனே படிப்பதால் என்ன பயன்? அதில் வரும் நசிகேதனின் நம்பிக்கை, தைரியம், விவேகம், துறவு முதலியவற்றை வாழ்வில் கடைபிடிக்க முயற்சி செய்’ என்று கூறியுள்ளார். [4]

இவ்வுபநிடதத்தின் சாந்தி மந்திரம் & விளக்கம்

ஸ ஹ நாவவது | ஸ நெள புநக்து | ஸஹ வீர்யம் கரவாவஹை |
தேஜஸ்விநாவதீதமஸ்து மா வித்விஷாவஹை |
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

அந்த இறைவன் குரு சீடர்களாகிய எங்கள் இருவரையும் காப்பாற்றட்டும். அந்த இறைவன் எங்கள் இருவரையும் காப்பாற்றட்டும். எங்களுக்குரிய முயற்சியை நாங்கள் இருவரும் சேர்ந்து செய்வோமாக. எங்கள் கல்வி ஒளி மிகுந்ததாக இருக்கட்டும். நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக.ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

உபநிடதத்தின் மையக்கருத்து

நசிகேதனுக்கு யமன் ஆத்ம தத்துவத்தை கூறுதல்

விச்வஜித் என்ற யாகத்தை செய்த ஒருவன் யாக முடிவில் தனது அனைத்து செல்வங்களையும் தானமாக தர வேண்டும் என்பது அந்த யாக விதி. ஆனால் அந்த யாகத்தை செய்த வாஜச்ரவசு என்பவன், தனது கறவை நின்ற பசுக்களை மட்டும் தானமாக தருவதை கண்ட அவர் மகன் நசிகேதன் தன்னை யாருக்கு தானமாக கொடுப்பீர்கள் என அடிக்கடி தனது தந்தையை நோக்கி கேட்க, தந்தையும் எரிச்சலுடன் உன்னை எமனுக்கு தானமாக கொடுக்கிறேன் என்று கூறிவிட, உடனே நசிகேதன் எமலோகத்திற்கு சென்று, மூன்று பகல் இரவுகள் பசியுடன் காத்திருந்து யமதேவரை சந்திக்கின்றான்.

யமலோகத்திற்கு விருந்தாளியாக வந்த நசிகேதனை காக்க வைத்த காரணத்தால் யமன், நசிகேதனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். முதல் வரத்தின் மூலம் தனது தந்தை மனஅமைதி அடைந்து தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறான். எந்த ஒரு யாகத்தை செய்தால் மக்கள் சுவர்க்க லோகம் அடையமுடியும் என்பதை இரண்டாம் வரத்தின் மூலம் நசிகேதன் தெரிந்து கொள்கிறான். மூன்றாவது வரத்தின் மூலமாக, உடல் அழிந்த பின்னும் அழியாது இருக்கின்ற ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவை உபதேசிக்கும் படி வேண்டுகிறான்.

முதல் இரண்டு வரங்களை நசிகேதனுக்கு உடனே வழங்கிய யமன், மூன்றாவது வரத்தை தருவதற்கு முன் அதற்கான தகுதி நசிகேதனுக்கு உள்ளதா என யமதேவர் சோதிக்கிறார். சுவர்க்கலோகம், பிரம்மலோகம் செல்வதற்கு வழி சொல்கிறேன் என்று யமதேவர் கூறியும், நிலையற்ற அந்த லோகங்கள் வேண்டாம் என்று ஒதுக்கித்தள்ளி தனக்கு நிலையான ஆத்ம ஞானம் எனும் பிரம்ம தத்துவம் ஒன்றே போதும் என்று நசிகேதன் உறுதியாக கூறி விடுகிறான்.

இறுதியில் யமதர்மராசன் வைத்த அனைத்துச் சோதனைகளிலும் வெற்றி பெற்ற நசிகேதனுக்கு ஆத்ம தத்துவத்தை விளக்கமாக யமதேவர் எடுத்து கூறினார். இந்த ஆத்மதத்துவம் எனும் பிரம்ம தத்துவத்தை அறிந்தவர்கள் உயிருடன் இருக்கும் போதே சீவ முக்தி (மனநிறைவு) அடைந்து பின்பு மரணத்திற்குப்பின் விதேக முக்தி எனும் பிறப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வு அடைகிறார்கள் என்று யமதேவர் கூறினார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. கடோபநிடதம்
  2. https://archive.org/details/KathaUpanishad
  3. கடோபநிடத நூல்
  4. எழுந்திரு! விழித்திரு! ; பகுதி 6; சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 15

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.