நசிகேதன்

நசிகேதன் (சமசுகிருதம்: नचिकेता), யசூர் வேதத்தில் அமைந்துள்ள கடோபநிடதக் கதையில் கூறப்படும் சிறுவன் ஆவான். நசிகேதன், யமனிடம் மோட்சம் எனும் ஆத்ம தத்துவத்தை அறிந்தவன்.[1]

நசிகேதனுக்கு எமதர்மராசன், பிரம்ம வித்தையை உபதேசித்தல்

வேத காலக் குறிப்புகள்

ரிக் வேதத்தின் 10.135 ஆம் பகுதிகள் யமன் மற்றும் ஒரு சிறுவனைப் குறிப்பிடுகிறது.[2] அச்சிறுவன் நசிகேதனை குறிப்பதாக கருதப்படுகிறது.[3] தைத்திரிய பிராமணத்தின் 3.1.8ஆம் பகுதிகளில் நசிகேதனைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.[3] மகாபாரத காவியத்தின் சபா பருவத்தின், பகுதி நான்கில், தருமரின் அவையில் இருந்த முனிவர்களில் நசிகேத முனிவரும் காணப்பட்டதாக உள்ளது.[4] மேலும் மகாபாரதத்தின் அனுசாசன பருவம், அத்தியாயம் 106இல் நசிகேதனின் வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது.[3]). கடோபநிடதத்தில் எமதர்மராஜன் – நசிகேதனுக்கும் நடந்த உரையாடல்களும்; நசிகேதனுக்கு எமதர்மராசன் ஆத்ம வித்தையை கற்றுத் தரும் கதை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

கடோபநிடதத்தில் நசிகேதன் வரலாறு

நசிகேதனின் தந்தை வாசஸ்சிரவ முனிவர், சொர்க்க லோகம் வேண்டி, விஸ்வஜித் எனும் பெரும் யாகம் செய்தார். விஸ்வஜித் யாகத்தின் படி, யாகத்தின் முடிவில், யாகம் செய்பவர் தனது செல்வங்கள் அனைத்தும் தானமாக வழங்கிட வேண்டும் என்பது விதியாகும்.

அவ்வாறு யாகம் முடிந்து தானம் வழங்கும் போது, வாசஸ்சிரவன், தனது கறவை நின்ற பசுக்களை மட்டும் தானமாக தருவதை [5] கவனித்த நசிகேதன், தன்னை யாருக்கு தானமாக கொடுப்பீர்கள் என அடிக்கடி தனது தந்தை வாசஸ்சிரவனைக் நோக்கி கேட்க, வாசஸ்சிரவன் எரிச்சலுடன் உன்னை எமனுக்கு தானமாக கொடுக்கிறேன் என்று கூறிவிட, உடனே நசிகேதன் எமலோகத்திற்கு சென்று, மூன்று நாட்கள் காத்திருந்து யமதேவரை சந்திக்கின்றான்.

யமலோகத்திற்கு விருந்தாளியாக வந்த நசிகேதனை காக்க வைத்த காரணத்தால் யமன், நசிகேதனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். முதல் வரத்தின் மூலம் தனது தந்தை மனஅமைதி அடைந்து தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறான். எந்த ஒரு யாகத்தை செய்தால் மக்கள் சுவர்க்க லோகம் அடையமுடியும் என்பதை இரண்டாம் வரத்தின் மூலம் நசிகேதன் தெரிந்து கொள்கிறான். மூன்றாவது வரத்தின் மூலமாக, உடல் அழிந்த பின்னும் அழியாது இருக்கின்ற ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவை உபதேசிக்கும் படி வேண்டுகிறான்.

முதல் இரண்டு வரங்களை நசிகேதனுக்கு உடனே வழங்கிய யமன், மூன்றாவது வரத்தை தருவதற்கு முன் அதற்கான தகுதி நசிகேதனுக்கு உள்ளதா என யமதேவர் சோதிக்கிறார். சுவர்க்கலோகம், பிரம்மலோகம் செல்வதற்கு வழி சொல்கிறேன் என்று யமதேவர் கூறியும், நிலையற்ற அந்த லோகங்கள் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி, தனக்கு நிலையான ஆத்ம ஞானம் எனும் பிரம்ம தத்துவம் ஒன்றே போதும் என்று நசிகேதன் உறுதியாக கூறி விடுகிறான்.

இறுதியில் யமதர்மராசன் வைத்த அனைத்துச் சோதனைகளிலும் வெற்றி பெற்ற நசிகேதனுக்கு ஆத்ம தத்துவத்தை விளக்கமாக யமதேவர் எடுத்து கூறினார். இந்த ஆத்மதத்துவம் எனும் பிரம்ம தத்துவத்தை அறிந்தவர்கள் உயிருடன் இருக்கும் போதே சீவ முக்தி (மனநிறைவு) அடைந்து பின்பு மரணத்திற்குப்பின் விதேக முக்தி எனும் பிறப்பில்லாத பேரின்பப் பெருவாழ்வு அடைகிறார்கள் என்று யமதேவர் கூறினார்.

சட உடல் தான் அழிகிறது; ஆன்மா என்றும் அழிவதில்லை என்ற பிரம்ம ஞானத்தை அறிந்த நசிகேதன், சீவ முக்தனாக வாழ்ந்தான்.

மேற்கோள்கள்

  1. தத்துவ விசாரம்: நசிகேதன் ஆகலாம்
  2. "The Rig Veda, Hymn 10.135". Free media library (2005-09-19). பார்த்த நாள் 2014-04-06.
  3. Radhakrishnan, S. (1994). The Principal Upanishads, New Delhi: HarperCollins Publishers India. ISBN 81-7223-124-5 p. 593.
  4. Mahabharata, Book 2, Sabha Parva Mahabharata, Book 2, Section IV, sacred-texts.com. p. 7.
  5. Swami Prabhavananda and Frederick Manchester, Breath of the Eternal http://www.atmajyoti.org/up_katha_upanishad_text.asp

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.