தைத்திரீய உபநிடதம்

தைத்திரீய உபநிடதம் கிருட்டிண யசூர்வேதத்தில் அமைந்துள்ளது. இந்த உபநிடதம் 31 மந்திரங்கள் கொண்டது. இது மூன்று அத்தியாயங்கள் (வல்லிகள்) கொண்டது. வல்லிகள் பல பகுதிகளை கொண்டது. பகுதிகளுக்கு அனுவாகம் என்பர். இவ்வுபநிடதத்திற்கு ஆதிசங்கரர் மற்றும் மத்வர் ஆகியவர்கள் விளக்கவுரை எழுதியுள்ளனர்.[1][2]

சாந்தி மந்திர விளக்கம்

மித்திர தேவர், வருண தேவர், அர்யமா தேவர், இந்திர தேவர், பிரகசுபதி தேவர், நீண்ட கால்களுடைய விட்ணு தேவர் எங்களுக்கு மங்களத்தை கொடுப்பவர்களாக இருக்கட்டும். நேரில் காணக்கூடிய பிரம்மமாகவும், அறிவு வடிவாகவும், சத்ய வடிவாகவும் உள்ள இரண்யகர்ப்பதேவருக்கு எங்கள் வணக்கங்கள் உரித்தாகட்டும். அந்த இரண்யகர்ப்ப தத்துவம் என்னையும் என் குருவையும் காப்பாற்றட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

உபநிடத சாரம்

முதல் வல்லியில்

இருபத்திநான்கு தேவதைகளை தியானம் அல்லது உபாசனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இறைவனை ஓங்காரரூபமாக வர்ணித்து, ஓங்காரத்திடம் வேண்டுதல் விடுக்கப்படுகிறது. ஆரோக்கியமான உடல், நல்வாக்கு, ஞாபகசக்தி, குரு பரம்பரை காக்க நல்ல சீடர்கள் வேண்டப்பட்டு இறுதியில் இறைவனுடன் ஒன்றாக கலந்து விடவேண்டும் என்று வேண்டப்படுகிறது. ஓங்கார உபாசனம், சம்ஹிதா உபாசனம், வியாக்கிருதி உபாசனம், இரண்யகர்பர் உபாசனம், பாங்காத்த உபாசனம் விளக்கப்படுகிறது.

இரண்டாவது வல்லியில்

பிரம்மத்தை விளக்குகிறது. எது சத்தியமாகவும், ஞானமாகவும், எல்லையற்றதாகவும் இருக்கிறதோ அதுவே பிரம்மம். அந்த பிரம்மத்தை மனதுக்குள் அறிய வேண்டும். அந்த பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மாகவே இருந்து அனைத்தையும் அடைகிறான். பிரம்மத்தை ‘அத்யாரோபம் அபவாத நியாயம்’ தத்துவம் மூலம் விளக்கப்படுகிறது.

பிரபஞ்சமும், சீவராசிகளும் பிரம்மத்திலிருந்து தோண்றியது என்று பிரம்மத்தைக் காட்டி, இப்படைப்பை காரியமாக காட்டுதல் ’அத்யாரோபம்’ ஆகும். பிறகு கார்யமான இந்த உலகம் காரணத்திலிருந்து வேறாக இல்லை என்று காரியத்தை நீக்குதல் ’அபவாதம்’ ஆகும். ஒரு சீவனின் அனாத்மாவாக இருக்கின்ற உடல் ஐந்து கோசங்களாக பிரிக்க்ப்படுகிறது. அவை 1 அன்னமய கோசம் 2 பிராணமய கோசம் 3 மனோமய கோசம் 4 விஞ்ஞானமய கோசம் 5 ஆனந்தமய கோசம். ஒவ்வொரு கோசத்தை நீக்கும்பொழுது அந்த கோசத்துடன் சேர்ந்து இவ்வுலகமும் நீக்கப்படுகிறது. உதாரணமாக அன்னமய கோசமான இந்த சட உடல் ஆத்மா அல்ல என்று அன்னமய கோசத்தை நீக்கும்பொழுது இந்த சட உலகமும் நீக்கப்படுகிறது. இவ்விதம் ஐந்து கோசஙகளும் நீக்கப்படும் பொழுது அனைத்துப் படைப்புகளும் உண்மையல்ல என்று உணர்த்தப்பட்டு, ஆனந்த வடிவாகவும், ஆத்மவாகவும் உள்ள பிரம்ம தத்துவம் விளக்கப்படுகிறது.

ஈஸ்வரனே மாயையின் துணைகொண்டு இப்படைப்பிற்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் விளக்கப்படுகிறது. பிரம்மம் அறியப்படாதபொழுது பயத்திற்கும், அறியப்படும்பொழுது அபயத்திற்கும் இருப்பிடமாகவும் விளங்குகிறது. இறுதியில் ஞானி பிரம்மத்தை அடைகிறான். ஆனால் அஞ்ஞானியோ பிரம்மத்தை அடைவதில்லை. இந்த விசாரணைக்கு ஆனந்த மீமாம்சை என்பர்.

மூன்றாவது வல்லியில்

அன்னதானம் வலியுறுத்தப்பட்டு, உணவை நாம் எவ்விதம் கொடுக்கிறோமோ அவ்விதமே நமக்கும் கிடைக்கிறது என்ற நியதி கூறப்படுகிறது. இறுதியாக சீவ பிரம்மம ஐக்கியம் கூறி இந்த ஆத்ம ஞானம் அடைந்தவன் ஆனந்தத்தில் களிக்கிறான் என்பதுடன் இந்த உபநிடதம் முடிகிறது.

மேற்கோள்கள்

  1. https://archive.org/details/TaittiriyaUpanishad
  2. https://ia700704.us.archive.org/14/items/UpanishadsTamil/06_Taittiriya_Upanishad.pdf

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.