ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் (ஒலிப்பு ) (Ayurveda, சமக்கிருதம்: आयुर्वेद) என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். சமசுக்கிருதத்தில் ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேத என்பது கல்வி தொடர்பானது அல்லது அறிவுத்துறை என்று பொருள்படக்கூடியது.

எனவே ஆயுர்வேதம் என்பது நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்ற பொருள் தருவது. நீண்டகால வரலாறு கொண்ட இம் மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. சுஸ்ருத சம்கிதை, சரக சம்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுர்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.

மேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது.

மேலோட்டம்

திருமாலின் அவதாரமாக கருதப்படும் தன்வந்திரிக்கு மருந்துகளுக்கும், உடல் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தேவர்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய பங்குள்ளது.

சரகர், சுஸ்ருதர் மற்றும் வாக்பட்டர் ஆகிய முனிவர்கள் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலைசிறந்து விளங்கியவர்கள்.

சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கு, ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் இணையாகக் கூறப்படுகின்றது. வாதம் உடல் நலத்தை சமன்படுத்துவதுடன் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது.

ஆயுர்வேதத்தின் அங்கங்கள்

  1. சல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு
  2. சாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்
  3. காய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்
  4. பூதவித்யை- மன நலம் பேணுதல்
  5. குமார பிரியா- குழந்தை வளர்ப்பு
  6. அக்தம் – முறிமருந்துகள் அளித்தல்
  7. இரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்
  8. வாஜீகரணம்- புத்துயிர்ப்பு மருத்துவம்

ஜோதிடமும், ஆயுர்வேதமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஜோதிடம் போன்றே ஆயுர்வேதமும் வேதத்தின் ஓர் அங்கம்.[1]

மேற்கோள்கள்

  1. குமுதம் ஜோதிடம்; 6. செப்டம்பர் 2013;

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.