பஞ்ச பிராணன்

பிராணன் (Prana) பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், ஆகியவைகளே ஐந்து பிராணன்கள் (வாயுக்கள்) ஆகும்.

பிராணன்

மேல் நோக்கிச் செல்வதும் மற்றும் மூக்கின் நுனியிலிருக்கும் வாயுவிற்குப் பிராணன் என்பர்.

அபானன்

கீழ் நோக்கிச் செல்லும் (நாபிக் கமலத்திலிருந்து) மற்றும் குதம் போன்ற இடங்களில் உள்ள வாயுவிற்கு அபானன் என்று பெயராகும். பிறப்புறுப்புக்களில் இவ்வாயு இருக்கும். நம் உடலில் கழிவுப் பொருட்கள் வெளியேற்றுவதற்கும் இந்த வாயுதான் காரணமாக உள்ளது.

வியானன்

உடலிருந்து எல்லாப் பக்கங்களிலிருந்து செல்கின்ற மற்றும் உடலில் எல்லாப் பக்கங்களிலும் உள்ள வாயுவிற்கு (உயிர்ச் சத்திற்கு) வியானன் என்று பெயர். `எது பிராணன் – அபானன்களின் இடையே உள்ளதோ அது வியானன் எனும் வாயு ஆகும். அக்கினியை கடைதல், இலக்கை நோக்கிப் பாய்தல், உறுதியாக உள்ள வில்லை வளைத்தல் போன்ற மிகவும் முயற்சியுடன் செய்ய வேண்டியுள்ள வேறு செயல்களை மூச்சு விடாமல், மூச்சை இழுத்துக் கொள்ளாமல் செய்கிறான்` என சாந்தோக்கிய உபநிடதத்தில் (சுலோகம் 1. 3. 3 மற்றும் 5) கூறப்பட்டுள்ளது.

உதானன்

மேல் நோக்கிச் செல்லும் மற்றும் வெளியிலும் செல்லும் தன்மையுடையது உதானன் எனும் வாயு. இது தொண்டையில் நிலை பெற்றுள்ளது. உடலைவிட்டு உயிர் பிரிந்து செல்லும் பொழுது உதவிபுரியும் (உயிர் சத்திற்கு) உதானன் என்று பெயர்.

மரணம் ஏற்படும் பொழுது சீவன் (உயிர்), உடலைவிட்டு வெளியேறுவதற்கு உத்கிரமணம் அல்லது உத்கிராந்தி என்று பெயராகும். சீவன் (உயிர்) கண் போன்ற எந்த துவாரத்தின் மூலமாகவும் வெளியேறலாம். இருப்பினும் தொண்டையானது பொதுவாக சீவன் (உயிர்) உடலை விட்டு வெளியேறும் இடமாக உள்ளது.

சமானன்

சமானன் எனும் இவ்வாயு உடலின் நடுப்பகுதியில் உள்ளது. உண்ட உணவையும் குடித்த நீர் போன்றவற்றை சமமாக்க் கலந்து உணவை செரிக்க வைக்க உதவும் இவ்வாயுவை சமானன் என்பர்.

மனம் - உறக்கம் - நரம்பியல் சார்ந்த மூளையின் இயக்கங்களில், பாதிப்பின்றிப் பணியாற்ற உதவும் சடாமாஞ்சில், வாலுளுவை, நீர்ப்பிரம்மி, சங்கு புஷ்பம் முதலான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு.

உப பஞ்ச பிராணன்கள்

சாங்கியக் கோட்பாளர்கள் நாகன், கூர்மன், கிருகலன், தேவதத்தன், தனஞ்செயன் என்னும் வேறு ஐந்து வாயுக்கள் உள்ளன என்பர். அவற்றில் நாகன் என்பது வாந்தி அல்லது ஏப்பத்தை உண்டாக்குகிறது. கூர்மன் எனும் வாயு கண்ணிமைகளை மூடித் திறக்குமாறு செய்கிறது. கிருகலன் எனும் வாயு தும்மலை ஏற்படுத்துகிறது. தேவதத்தன் எனும் வாயு கொட்டாவி விடுமாறு செய்கிறது. தனஞ்செயன் எனும் வாயு உடலை நன்கு வளர்க்க உதவுகிறது.

சாங்கியர்கள் கூறும் இந்த ஐந்து வாயுக்களும் முன்பு கூறிய பஞ்ச பிராணன்களிலேயே அடக்கமாகி உள்ளன. நாகன் எனும் வாயு உதானன் எனும் வாயுவிலும், கூர்மன் எனும் வாயு வியானன் எனும் வாயுவிலும், கிருகலன் எனும் வாயு சமானன் எனும் வாயுவிலும், தேவதத்தன் எனும் வாயு அபானன் எனும் வாயுவிலும், தனஞ்செயன் எனும் வாயு மீண்டும் சமானன் எனும் வாயுவிலும் அடக்கமாகி உள்ளன.

நூல் உதவி

  • வேதாந்த சாரம், சுலோகம் 78 முதல் 87 முடிய, நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.

வெளி இணைப்புக்ள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.