இராசசூய வேள்வி

இராஜசூய வேள்வி (Rajasuya) என்பது இந்து தொன்மவியல் படி, மாமன்னர்களால் அதிகப் பொருட் செலவுடன் செய்யப்படும் ஒரு வகை வேள்வி ஆகும். தான் ஒரு மாமன்னர் என்பதை மற்ற மன்னர்களுக்கு உணர்த்துவதற்காகவும், நாட்டிற்கு புதிதாக பட்டம் சூட்டிக்கொள்ளும் பொருட்டும் ஒரு மன்னரால் இராசசூய வேள்வி செய்யப்படுகிறது. [1] ஆபஸ்தம்ப சூத்திரத்தில் இராச்சூய வேள்வி செய்முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது. 18.8–25.22.[1] இராசசூய வேள்வியின் போது சோம பானம் பிழிதல், சொக்கட்டான் ஆடுதல், தேர் ஓட்டுதல், வில்லிருந்து அம்பு எய்துதல், கால்நடை மந்தையை வேட்டையாடுதல் போன்ற செயல்கள் வேள்வி நடத்தும் மன்னரின் தலைமையில் நடைபெறும்.[1]

இராசசூய வேள்வி செய்யும் மாமன்னர் தருமன்

இராசசூய வேள்விக்கான நிதி திரட்ட, மற்ற நாடுகளின் போர் தொடுத்து திறை வசூலிப்பர். மேலும் இராசசூய வேள்வியில் கலந்து கொண்ட பிற நாட்டு மன்னர்கள், இராசசூய வேள்வியை செய்த மன்னரை வாழ்த்திப் பரிசளிப்பார்கள்.

மகாபாரதக் குறிப்புகள்

நாரதரின் ஆலோசனையின் படி[2] , இந்திரப்பிரஸ்தம் எனும் புது நகரை நிறுவிய கையுடன் பாண்டவர்களின் மூத்தவன் தருமன் இராசசூய வேள்வி நடத்த, தனது சகோதரர்கள் மற்றும் கிருஷ்ணரிடம் ஆலோசனை செய்தான். [3]பின்னர் வேள்விக்கான நிதி திரட்ட, வீமன், அருச்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் பரத கண்டத்தின் நான்கு திசைகளில் உள்ள நாடுகளுடன் போரிட்டு திறை வசூலித்தனர் என்பதை மகாபாரதம், பருவத்தின் இறுதிப் பகுதிகளில் குறிப்பிட்டுள்ளது.[4] [5]

மேலும் தருமரின் இராசசூய வேள்வியில் கலந்து கொண்ட பரத கண்ட நாட்டு மன்னர்களின் பெயர்களும் மற்றும் பல்வேறு இன மக்களின் தலைவர்களின் பெயர்களும்; அவர்கள் தருமரை வாழ்த்தி வழங்கிய பரிசுப் பொருட்கள் விவரம் குறிக்கப்பட்டுள்ளது.[6]

இராசசூய வேள்விக்கான முதல் மரியாதையை கிருஷ்ணருக்கு தரக்கூடாது என மறுத்துப் பேசிய சேதி மன்னர் சிசுபாலன், தொடர்ந்து கிருஷ்ணரை நூறு முறைகளுக்கு மேல் தகாத சொற்களால் திட்டினார். இதனால் கோபங் கொண்ட கிருஷ்ணர் தனது சக்கராயுதத்தால் சிசுபாலனை கொன்றார். [7]

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

  • Knipe, David M. (2015), Vedic Voices: Intimate Narratives of a Living Andhra Tradition, Oxford: Oxford University Press
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.