முருகன்

முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.

முருகன்
வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன்
அதிபதிதமிழ்
வகைவினை தீர்ப்பவர்
மந்திரம்ஓம் சரவணபவ
ஆயுதம்வேல்
துணைவள்ளி, தெய்வானை

இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார்.[1] மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.

தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.

பெயர்க் காரணம்

"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

வேறு பெயர்கள்

  • சேயோன்
  • அயிலவன் - வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
  • ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
  • முருகன் - அழகுடையவன்.
  • குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
  • குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
  • காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.
  • வேலூரவன் - வள்ளியை மணந்ததாலும், அசுரர்களை அழிக்க முதன் முதலில் வேல் கொண்டு தோன்றியதாலும் வேலூரான் என பெயர் பெற்றார் முருகப்பெருமான். அவ்விடம் தான் இன்று தமிழகத்தில் உள்ள வேலூர். வேலூரை சுற்றிலும் குன்றுகளும் குமரனின் கோவில்களாகவே காணப்படுகின்றன. வேலூர் -வள்ளிமலை என்ற இடத்தில் தான் வள்ளியை முருகன் மணந்தார்.
  • சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.
  • சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.
  • வேலன் - வேலினை ஏந்தியவன்.
  • சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
  • கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
  • கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
  • சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
  • தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
  • வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
  • சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
  • மயில்வாகனன்
  • ஆறுபடை வீடுடையோன்
  • வள்ளற்பெருமான்
  • சோமாஸ்கந்தன்
  • முத்தையன்
  • சேந்தன்
  • விசாகன்
  • சுரேஷன்
  • செவ்வேள்
  • கடம்பன்
  • சிவகுமரன் - சிவனுடைய மகன்.
  • வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
  • ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்
  • கந்தசாமி
  • செந்தில்நாதன்
  • வேந்தன் - மலை அரசன் , மலை வேந்தன்

போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.

முருகனின் சில பெயர்களுக்கான காரணங்கள்

  • விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
  • அக்கினியில் தோன்றியதால் அக்னி புத்திரன்
  • கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால் காங்கேயன்.
  • சரவண பொய்கையில் மிதந்ததால் சரவணபவன்.
  • கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
  • அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் கந்தன்
  • ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன் / சண்முகன்

இப்படி தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கு பின்பு ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது.

முருக புராணம்

பிறப்பு

பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். ஒருமுறை தட்சன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமல் அவமானப்படுத்தினார். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி அக்னியில் விழுந்து உயிர் துறந்தார். பிறகு சிவபெருமான் தம் அவதாரமான வீரபத்ரனை அனுப்பி யாகசாலையையும் தட்சனையும் அழித்தார். பிறகு சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட ஆரம்பித்தார்.

தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது. பிறகு அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு கண்களை உடையவர்.

ஞானப்பழம்

ஒருநாள் நாரதர், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஞானப்பழத்தைக் கொடுத்தார். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தம் மயில் வாகனம் கொண்டு உலகைச் சுற்ற புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் தாய் தந்தையரே உலகம் என்று கருதி அவர்களை மும்முறைை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது. மகிழ்ந்த முருகன் தமிழகத்திலேயே தங்கிவிட்டார் இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது.[2]

பன்னிருகரங்களின் பணிகள்

முருகனின் பன்னிருகரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. மூன்றாவது கை அங்குசத்தினைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.[3]

தெய்வானையுடன் திருமணம்

முருகப்பெருமானின் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பது. அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.

சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

வழிபாட்டு முறை

அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த முருகனை வேலன் என்று மக்கள் வழிபட்டதாகவும், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை மாவை அவருக்குப் படைத்ததாகவும், அதன் பின் வந்த சமஸ்கிருத வழிபாட்டு முறையில் முருகன் வழிபாடு சைவ வழிபாடாக மாறியதாகவும் முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.[4]

விழாக்கள்

கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மிக முக்கியமான விழா ஆகும்

நூல்கள்

கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்து உரைக்கிறது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியம் ஆகும்.

மேலும் சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி போன்ற நூல்களும் முருகனின் பெருமை சொல்வன.

முருகன் குறித்த பழமொழிகள்

  • வேலை வணங்குவதே வேலை.
  • சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
  • வயலூர் இருக்க அயலூர் தேவையா?
  • காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
  • அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
  • முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
  • சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
  • கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
  • கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
  • பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
  • சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
  • செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
  • திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
  • வேலனுக்கு ஆனை சாட்சி.
  • வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
  • செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
  • கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
  • கந்தசட்டி கவசம் ”விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து”

முருகன் ஆலய வழிபாடுகள்

தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:

திருமுருகன் பூண்டி தேர் திருவிழா

முருகனின் அடியவர்கள்

கோவில்கள்

முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் என தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவில்கள் பல அமைந்துள்ளன.

அறுபடை வீடுகள்

  • திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
  • திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
  • பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
  • சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
  • திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
  • பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.

மலேசியா

முருகனின் சிலை, மலேசியா

மலேசியா நாட்டில் பத்து குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.

தமிழ்

தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் குறிப்பிடப்படுகின்றார். "முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்" என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.[5]

ஒப்பிட்டு உணர்க

இவற்றையும் பார்க்க

ஆதாரங்கள்

  1. https://www.quora.com/Who-is-really-the-eldest-son-of-Lord-Shiva-Subramanya-or-Ganesha
  2. http://www.tnguru.com/2016/01/blog-post_47.html
  3. பன்னிருகரங்களின் பணி - சக்தி விகடன் ஏப்ரல் 14 2012
  4. http://murugan.org/tamil/shanmugampillai.htm சங்க இலக்கியங்களில் முருகன் பழங்குடி இன வெறியாட்டு வழிபாடு
  5. கலைமகள்; டிசம்பர் 2014; திருமுருகாற்றுப்படையும் திருப்புகழும்; பக்கம் 30-32

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.