கணாபத்தியம்

கணாபத்தியம் என்பது விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் இந்துசமயப் பிரிவாகும்.[1]

இந்து சமயத்தில் விநாயகரை வழிபடுதல் என்பது ஏனைய பிரிவுகளிலும் காணப்படும் நடைமுறையாகும். அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த இந்துக்களும், வழிபாடுகள், பணிகள் மற்றும் சமய நிகழ்வுகள் ஆகியவற்றை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவர்.

கணபதி வழிபாடு, சைவ சமயத்தின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகிறது. காணாபத்தியப் பிரிவு பெரும்பாலும் ஆறாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோற்றம் பெற்றிருக்கலாம். இது பற்றிய குறிப்பு சிறீ ஆனந்திகிரியால் எழுதப்பட்ட சங்கர திக்விஜய (ஆதிசங்கரரின் வாழ்வு) எனும் நூலில் காணப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டில் இப்பிரிவு அதன் உச்ச நிலையை அடைந்தது. இதன்போது விநாயகருக்காக கோயில்களும் கட்டப்பட்டன. இவற்றுள் மிகப்பெரியது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் (ஆயிரங்கால் மண்டபம்) ஆகும். இப்பிரிவில் விநாயகரே முழுமுதற் கடவுளாக வழிபடப்பட்டார்.

பின்னர், மொரயா கோசாவி என்பவரால் இப்பிரிவு பிரபலமடைந்தது. ஒரு ஆதாரத்தின் படி, இவர் மனிதக் கைகளால் உருவாக்கப்படாத விநாயகர் சிலையொன்றை உருவாகியதாகவும், மோர்கான் கோவிலைக் கட்டியதாகவும் அறிய முடிகிறது. புனேக்கு அருகில் உள்ள இக்கோவில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இன்னொரு ஆதாரத்தின் படி, இவர் மோர்கான் கோவிலில் விநாயகரைத் தரிசித்ததாகவும், பின்னர் 1651ல் இவரது பிறந்த ஊரான சின்வாத்திலுள்ள விநாயகர் கோவிலொன்றில் சமாதியடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.[2]

இவரைத் தொடர்ந்து, சின்வாத்தைச் சுற்றியுள்ள மேற்கிந்தியாவின் மகாராஷ்டிரப் பகுதிகளில் 17ம் நூற்றாண்டுக்கும், 19ம் நூற்றாண்டுக்கும் இடையில் காணாபத்தியப் பிரிவு முதன்மை பெற்றது. தற்போதும் இப்பிரிவு மகாராஷ்டிராவின் மராத்தி மொழி பேசும் பகுதிகளில் வசிக்கும் உயர்சாதி இந்துக்களிடையே முக்கிய பிரிவாகக் காணப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவிலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பக்தர்கள் ஆண்டுதோறும் சின்வாத்துக்கும் மோர்கானுக்கும் இடையில் யாத்திரை மேற்கொள்வர்.

இப்பிரிவைச் சேர்ந்தோர் தமது சமயக் குறியீடாக நெற்றியில் குங்குமப் பொட்டிடுதல், தமது தோள்களில் யானை முகம் மற்றும் தந்தங்களின் உருவங்களை பொறித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்துவர்.

மேற்கோள்கள்

  1. Ganapatyas Article from PHILTAR, Division of Religion and Philosophy, St Martin's College
  2. GĀṆapatyas Article from BookRags.com
  • அருண் நிலையம் வெளியிட்ட இந்தியாவில் சமயங்கள் புத்தகம். ஆசிரியர்-முனைவர் வெ. சுயம்பு.

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.