கபால மோட்சம்

கபாலம் எனில் தலை. மோட்சம் எனில் வாழ்கை எனும் தொடர் சக்கரத்திலிருந்து விடுதலை பெற்று, மீண்டும் பிறப்பில்லா பெருவாழ்வு எனும் வீடுபேறு அடைதல். இந்துத் தொன்மவியலில் இவ்வுலக வாழ்விலிருந்து வெளியேற முடிவு செய்த துறவிகள், யோகிகள், ஞானிகள் மற்றும் தவசிகள் தங்களின் சட உடலை இவ்வுலகிலே விட்டுவிட்டு, தங்களின் உயிர் சக்தி என்ற பிராணனை (ஆத்மா) உச்சந்தலையில் உள்ள பிரம்மரந்திரம்என்ற துவாரம் வழியாக வெளியேற்றுவதே கபால மோட்சம் எனப்படும்.

கபால மோட்சம் குறித்தான விளக்கங்கள்

இந்த நிகழ்வின் போது கபாலம் வெடித்து பிரம்மரந்திரம் என்ற துவாரம் திறந்து கொண்டு பிராணசக்தி வெளியேறி, ஞானியின் பிராணன் பிரம்மத்திடம் ஐக்கியமாகி விடுகிறது. இதனை விதேக முக்தி என்பர். பின் ஞானிக்கு பிறப்பில்லை, என்றும் பேரானந்தத்துடன் பிரம்ம நிலையை (பிரம்ம சாயுட்சம்) அடைந்து விடுகிறார்.

மூலாதார சக்கரத்திலிருந்து, சுசும்ன நாடி மேலே எழுந்து கபாலத்தினை துளைத்துக் கொண்டு பிராணசக்தி என்ற உயிர்ச்சக்தி பிரம்மரந்திரம் வழியாக மேலே வெளியேறிச் செல்வதே கபால மோட்சம் என சுவாமி சின்மயானந்தா கூறுவார்.

கபால மோட்சம் குறித்து கடோபநிடதம் விரிவாக கூறுகிறது. ஒரு சீவன் பிறக்கும் போது பிராணன் உச்சந்தலையில் உள்ள பிரம்மரந்திரம் எனும் துளை வழியாக சட உடலில் குடிகொண்டதால், பிராணன் இந்த சட உடலை விட்டு நீங்கும் போது, அது முன்னர் வந்த வழியான உச்சந்தலையில் உள்ள பிரம்மந்திரம் வழியாக மீண்டும் வெளியேற வேண்டும். உடலின் வேறு துவாரங்கள் வழியாக பிராண சக்தி வெளியேறினால், அந்த சீவன் மீண்டும் மறு பிறப்பு எடுத்து வாழ்க்கை எனும் துன்பக் கடலில் உழன்று கொண்டே இருக்க வேண்டியது என கடோபநிடதம் கூறுகிறது.

பல ஞானிகள் தங்களின் உயிர் பிரியும் காலத்தை நாள் மற்றும் நேரத்துடன் முன் கூட்டியே சொல்லும் திறன் உடையவர்கள். உடலிருந்து உயிர் பிரியும் நேரத்தில் தியானநிலையில் அமர்ந்து கொண்டு, பிராணசக்தியை கபாலத்தில் உள்ள “பிரம்மரந்திரம்” எனும் உள்ள துவாரம் வழியாக மேலே கொண்டு வந்து வெளியே விட்டு விடுவார்கள்.

மரபுப்படி, நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ள துறவிகளின் தலையில் தேங்காயைகள் உடைத்து, பிராண சக்தியை ”பிரம்மந்திரம்” வழியாக வெளியேற்றுவார்கள். சட உடலை விட்ட ஞானியின் உடலை தியானநிலையில் அமர வைத்து சமாதி எழுப்பி, சமாதியின் மீது சிவலிங்கம் பிரதிட்டை செயவர். வைணவ துறவி என்றால் துளசி செடியை நட்டு வளர்ப்பர். மேலும் சமாதியைச் சுற்றி பூந்தோட்டம் அமைப்பர். துறவி சமாதி அடைந்த நாளை நினைவு கூறும் வகையில் குருபூசை விழா நடத்துவர். மேலும் துறவிகளின் சட உடலை எரிப்பதில்லை, படுக்கை நிலையில் கிடத்தி புதைப்பதும் இல்லை, தியான நிலையில் அமர்த்தி சமாதி கட்டுவர்.

ஆதாரங்கள்

  • Indian Heritage
  • பகவத்கீதை, அத்தியாயம் இரண்டு, சுலோகம் 71 மற்றும் 72.
  • கடோபநிடதம், இரண்டாவது அத்தியாயம், இரண்டாவது வல்லி, சுலோகங்கள் 1,3 மற்றும் 4

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.