சுவாமி தயானந்த சரசுவதி

சுவாமி தயானந்தர் அல்லது தயானந்த சரசுவதி சுவாமி(15 ஆகத்து 1930 - 23 செப்டம்பர் 2015) தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டத்தில், மஞ்சக்குடி கிராமத்தில் பிறந்தார். தயானந்தர் மரபுவழி வந்த அத்வைத வேதாந்த ஆசிரியர். சுவாமி சின்மயானந்தரிடம் 1952-ல் துறவற தீட்சை பெற்று, விஜயவாடா அருகில் உள்ள குடிவாடா எனுமிடத்தில் உள்ள சுவாமி பிரவானந்தரிடம் குருகுலக் கல்வி பயின்ற வேதாந்த மாணவர். சுவாமி தயானந்தர் 1972ஆம் ஆண்டு முதல் நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி, தொடர்ந்து அத்வைத வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இவரிடம் வேதாந்தம் பயின்ற இருநூறு மாணவர்கள் தலைசிறந்த வேதாந்த ஆசிரியர்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அத்வைத வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

சுவாமி தயானந்த சரசுவதி
பிறப்பு15 ஆகத்து 1930 (1930-08-15)
மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்புசெப்டம்பர் 23, 2015(2015-09-23)
இரிசிகேசம்
இயற்பெயர்நடராசன் கோபால ஐயர்
நிறுவனர்அர்ச வித்யா குருகுலம்
குருசின்மயானந்தா
தத்துவம்அத்வைதம்
மெய்யியலாளர்

சாதனைகள்

  • சுவாமி தயானந்தர் தலைசிறந்த வேதாந்த சொற்பொழிவாளர் மற்றும் பல வேதாந்த நூல்களை எழுதிய எழுத்தாளர். மேலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றியவர்.
  • ஆச்சார்ய சபா என்ற அமைப்பை நிறுவி, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மடாதிபதிகளை ஒருங்கிணைத்து இந்து சமய கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து கருத்தரங்குகளை நடத்தியவர்.
  • ஓதுவார்கள் நலனுக்காக சுவாமி தயானந்த சரஸ்வதி குரல் கொடுத்தார். திருவிடைமருதூர் தேர்த் திருவிழாவை மீண்டும் நடத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. அவரது கவிதைகள் பல பக்திப் பாடல்களாக வெளியாகியுள்ளன.
  • முன்னுரிமை தரப்பட வேண்டிய ஒடுக்கப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களின் கல்வி மற்றும் மருத்துவ மேம்பாட்டிற்கு உதவும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனை தலைவராகக் கொண்டு எய்ம் பார் சேவா என்ற அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் இந்தியா முழுவதும் 120 இடங்களில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச உண்டு உறைவிடப் பள்ளிகல் தொடங்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆனை கட்டி எனும் மலைக்கிராமத்தில் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்காக 2 இடங்களில் ஆசிரமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[5]

மறைவு

ஐக்கிய அமெரிக்காவில் மூன்று மாதங்களாக உடல்நலம் குறைவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த சுவாமி தயானந்த சுரசுவதி, 13 ஆகஸ்டு 2015 அன்று இந்தியாவுக்கு திரும்பி டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனது இறுதிக் காலத்தை கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷ் ஆசிரமத்தில் கழித்தார். இந்நிலையில் 23 செப்டம்பர் 2015 அன்று காலமானார். 25 செப்டம்பர் 2015 அன்று அவரது உடல் ரிஷிகேஷில் அடக்கம் செய்யப்பட்டது.[6][7][8]

பத்ம விருது

சுவாமி தயானந்தரின் ஆன்மீக சேவைக்காக, 2016-ஆம் ஆண்டிற்கான பத்ம பூசண் விருது, அவரது மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது.[9]

மேற்சான்றுகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.