ஸ்ரீருத்ரம் (நூல்)

ஸ்ரீ ருத்ரம் (நூல்) யசூர் வேதத்தின் தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். சமசுகிருத மொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் ஸ்ரீ அண்ணா. இந்நூல் இராமகிருஷ்ண மடம், சென்னை, நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.[1]

ஸ்ரீருத்ரம்
நூலாசிரியர்யசூர் வேத பகுதி (மூல நூல்)
தமிழாக்கம், ஸ்ரீ அண்னா
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைருத்ர ஸ்தோத்திரங்கள்
வெளியீட்டாளர்இராமகிருஷ்ண மடம், சென்னை
வெளியிடப்பட்ட திகதி
பிப்ரவரி, 2011
பக்கங்கள்296
ISBN81-7823-177-8

ஸ்ரீருத்ரம் நூலின் சிறப்பு

ஸ்ரீருத்ரம் யசூர் வேத தைத்திரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது. இதனுடைய இருதய ஸ்தானத்தில் இருப்பது சிவாயநம எனும் பஞ்சாட்சர மந்திரம் கொண்டிருப்பதால் ஆத்திகர்களால் ஸ்ரீ ருத்ரத்தை தினசரி பூசையிலும், ஜெபத்திலும், ஹோமத்திலும், தியானத்திலும், பாராயணத்திலும் தொன்று தொட்டு சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஸ்ரீருத்ரம், “ருத்ரோபநிடதம்” என்றும் “சதருத்ரீயம்” என்றும் சிறப்புப் பெயர் வாய்ந்தது. வாழ்க்கை எனும் துயரக்கடலிருந்து நம்மை விடுவித்து முக்திக்கு கருவியானதால் இது உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான வடிவங்களில் ஸ்ரீ ருத்திரனை இந்நூலில் போற்றப்படுவதாலும் இதனை சதருத்ரீயம் எனப்படுகிறது.

ஸ்ரீருத்ரம் நூலின் உரையாசிரியர்கள்

ஸ்ரீ ருத்ரம் நூலுக்கு எழுதப்பட்ட உரைகளில் சாயாணாச்சாரியார், அபிநவ சங்கராச்சாரியார், பட்டபாஸ்கரர், விஷ்ணு சூரி ஆகியவர்கள் சமசுகிருத மொழியில் எழுதிய உரைகளே தற்பொழுது அச்சில் உள்ளது.

நூலின் அமைப்பு

நமகம் (ருத்ரனுக்கு நமஸ்காரங்கள் செய்தல்); சமகம் (ருத்திரனிடம் நமக்கு வேண்டியதை பிரார்த்தனை செய்து வேண்டுதல்); லகுந்யாசம் (தன்னை ஸ்ரீருத்ர வடிவான சிவனாகவே தியானம் செய்தல்; ஸ்ரீமகாந்நியாசம் (தலை முதல் பாதம் வரை பஞ்சாங்க ருத்ரர்களுக்கு நியாஸ பூர்வகமாக ஜெபம், ஹோமம், அர்ச்சனை மற்றும் அபிசேகம் ஆகியவற்றின் முறை எடுத்துக் கூறல்), சிவ அஷ்ட தோத்திரம், ருத்ர விதான பூஜை, ருத்ர திரிசதீ செய்தல் போன்ற செய்யும் முறைகள் குறித்து வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

ஸ்ரீருத்ரம் நூலைப் செபித்தலின் பயன்

இந்நூலில் ஸ்ரீருத்ரத்தை செபித்தலின் பயன் கூறப்பட்டுள்ளது. யார் யார் எந்தப்பயனை விரும்பினாலும் ஸ்ரீருத்ரம் நூலில் உள்ள மந்திரங்களைத் தொடர்ந்து செபித்தால் நினைத்த காரியங்கள் ஈடேறும். ருத்ர ஜெபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைகின்றனர் என்று சூதசம்ஹிதை கூறுகிறது. மேலும் இந்த ஜெபமே அனைத்து பாவங்களுக்குச் சிறந்த பிராயசித்தமாகவும் (பரிகாரமாகவும்) விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீருத்திரத்தின் சிறப்பு மந்திரம்

திரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்|
உர்வாருகமிவ பந்தனான் - ம்ருத்யோர் - முக்ஷீயமாம்ருதாத்|
பொருள்: (சுகந்திம்) இயற்கையான நறுமணமுடையவரும் (புஷ்டிவர்த்தனம்) கருணையால் அடியார்களைக் காத்து வளர்ப்பவரும் ஆகிய (திரியம்பகம்) முக்கண்ணனை (யஜாமஹே) பூஜித்து வழிபடுகிறோம். (உர்வாருகம் இவ) வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுவது போல (ம்ருத்யோர்) இறப்பின் (பந்தனாத்) பிடிப்பிலிருந்து (முக்ஷீய) உமதருளால் விடுபடுவோமாக. (மா அம்ருதாத்) மோட்ச மார்க்கத்திலிருந்து விலகாமலிருப்போமாக.

ஸ்ரீருத்ரம் பாராயணம் எவ்வாறு செய்வது

இந்நூலில் ஸ்ரீருத்ரத்தை எவ்வாறு பாராயணம் செய்வது குறித்து விளக்கப்படுகிறது. ஸ்ரீருத்ர மந்திரத்தின் முதல் அனுவாகத்தில் ஈசுவரனுடைய கட்டளையை மீறி நடந்தவர்களிடம் முன் கோபம் கொண்ட ருத்ரன் தோன்ற வேண்டுமென்ற பிரார்த்தனையும், இரண்டாவது அனுவாகம் முதல் ஒன்பதாவது அனுவாகம் வரை ருத்ரனின் சர்வேசுவர தத்துவம், சர்வ சரீர தத்துவம், சர்வ அந்தர்யாமி தத்துவம் முதலிய பெருமைகளை குறிக்கும் திருநாமங்களால் நமஸ்காரமும், பத்தாவது அனுவாகத்தில் நம்முன் தோன்றிய ருத்ரனிடம் நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடையவும், நமக்கு வேண்டாதவற்றை நீக்கவும் பிரார்த்தனையும், பதினோராவது அனுவாகத்தில் ருத்ர கணங்களுக்கு நமஸ்காரமும் கூறப்படுகிறது.

முதலில் ருத்ரத்தை ஜெபித்து அதற்குப் பின் சமகத்தையும் ஜெபிப்பது செய்வது சாதாரணமான முறை. இதனை லகு ருத்ரம் என்பர். ஒரு முறை ருத்ரத்தின் பதினொரு அனுவாகத்தையும் ஜெபித்துப் பிறகு சமகத்தின் முதல் அனுவாகத்தையும், இரண்டாம் முறை ருத்ரத்தை பதினோரு முறை ஜெபித்துச் சமகத்தின் இரண்டாவது அனுவாகத்தையும், அவ்வாறாகப் பதினோராவது முறை ஜெபித்து பதினோறாவது அனுவாகத்தையும் பாராயணம் செய்தால் அது “ருத்ரைகாதசினீ” (பதினோரு ருத்திரர்கள்) எனப்படும். இதனை மகா ருத்ரம் என்பர். பதினோரு லகு ருத்ரம் ஒரு மகா ருத்ரம். பதினோரு மகா ருத்ரம் ஒரு அதி ருத்ரம் ஆகும்.

இவற்றையும் காண்க

ஸ்ரீருத்ரம் கேட்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.