திண்டல் முருகன் கோயில்

திண்டல் முருகன் கோயில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில், திண்டல், ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை மீது 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படும் திருத்தலம். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.

திண்டல் முருகன் கோயில்
பெயர்
வேறு பெயர்(கள்):அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல் மலை
பெயர்:திண்டல் முருகன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:ஈரோடு மாவட்டம்
அமைவு:திண்டல், ஈரோடு
கோயில் தகவல்கள்
மூலவர்:வேலாயுத சுவாமி, முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்

கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில் கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு சிறப்பாக நடைபெறும்.

மூலவர்

இக்கோயிலின் மூலவர், குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு ஒரு சிறப்பு உள்ளது. பூந்துறை நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட போது வேளாளர்கள் ஒன்று கூடி இடும்பக் குமரனை வேண்டி அவர் மூலம் நாட்டில் மழை பெய்ய வேண்டிக் கொண்டனர். வேண்டுதலுக்கு பின் மழை பெய்து வளம் ஏற்பட்டது என்ற வரலாறு உண்டு. இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

திருவிழா

மாதம்தோறும் கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது

சிறப்பு

கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

பிரார்த்தனை

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய எண்ணங்களை எண்ணியபடியே வேலாயுதசாமி நிறைவேற்றுகிறார். புதிய வாகனங்கள் வாங்குவோர் திண்டல் மலைக்கு சென்று வேலாயுதசாமி கோயிலில் சிறப்பு பூசை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்

வேண்டுதல் நிறைவேறியதும் முருகனுக்கு திருமுழுக்கு செய்தும், புது ஆடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தல சிறப்பு

நெடுஞ்சாலையின் தொடக்கத்தில் அழகிய நுழைவாயிலும், ஓங்கி உயர்ந்த வளைவின் முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம், சிவன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் பக்தர்களை வரவேற்கின்றனர். முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். மெய்யறிவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட்டு செல்லும் பக்தர்களின் குறைகள் தீர்கிறது.

அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்மண்டப முகப்பில் வேலாயுதசாமி சிலை அமையப்பெற்றுள்ளது. அங்கிருந்து தொடங்கும் படிகளை கடந்தால் இடும்பன் கோயிலை அடையலாம். காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வேலாயுதசாமி கருவறையில் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை போக்குகிறார்.

மலைமகள் மகனாக, மாற்றார் கூற்றாக வேல் தாங்கி வேலாயுதசாமி உள்ளார். தீராவினை தீர்க்கும் வேலுடன் காட்சி தரும் திண்டல்மலை முருகனை வழிபடுவோர் எல்லாம் தெளிவடைகின்றனர்.கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்று தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது. இதில் சமய பெரியார்களான சன்னியாசிகள் வாழ்ந்த சிறப்பு பெற்றது. இந்த தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழகிய இயற்கைச்சுனையில் வற்றா நீரூற்று ஆண்டவனின் அபிஷேகத்திற்கும், பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.

பூசை

ஒரு நாளைக்கு மூன்றுகாலப் பூசை நடக்கிறது. காலை 7 மணிக்கு காலை சந்தி பூசையும், 12 மணிக்கு உச்சிக்கால பூசையும், மாலை 6 மணிக்கு சாயரட்சை பூசையும் நடக்கிறது. காலை 6 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணியளவில் அபிடேக ஆராதனை நடக்கிறது.

முகவரி

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல் மலை - 638 009. ஈரோடு மாவட்டம்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.