கொங்கு நாடு

கொங்குநாடு (Kongu Nadu) என்பது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மண்டலம் ஆகும். இதை கொங்கு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. சேரர்களால் ஆளப்பட்ட இப்பகுதியானது, கிழக்கில் தொண்டை நாடும், தென் கிழக்கில் சோழ நாடும் மற்றும் தெற்கே பாண்டிய நாடு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

கொங்கு நாடு
கோயம்புத்தூர் இப்பகுதியின் மிகப்பெரிய நகரம்.

தமிழ்நாடு வரைபடத்தில் உள்ள கொங்கு மண்டலம்.
ஆள்கூறுகள்: 11°1′48.925″N 77°2′21.544″E
நாடு இந்தியா
பிரதேசம்தென்னிந்தியா
தலைநகரம்கோயம்புத்தூர்
மாவட்டங்கள்கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி
அரசு
  Bodyதமிழ்நாடு அரசு
பரப்பளவு
  மொத்தம்45
மக்கள்தொகை (2011)[1]
  மொத்தம்2,07,43,812
  அடர்த்தி607
மொழி
  அலுவல் மொழிதமிழ்
  மற்றவைகொங்குத் தமிழ்
நேர வலயம்நேர வலயம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635-642xxx
வாகனப் பதிவுTN 24, TN 27, TN 29, to TN 42, TN 47, TN 52, TN 54, TN 66,TN 70, TN 77-78, TN 88, TN 86, TN 94, TN 99
பெரிய நகரம்கோயம்புத்தூர்
எழுத்தறிவு75.55%

பெயர்க்காரணம்

கொங்கு என்ற சொல்லின் பெயர்க்காரணமாக கீழுள்ள காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன:

  1. கங்கு என்றால் ஓரம், எல்லை, வரம்பு என்று அர்த்தம். கிணற்றின் ஓரத்தையும் வயலின் ஓரத்தையும் கங்கு என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தற்கால காவிரிக்கு தென்கரையில் உள்ள கொங்கு பகுதிகளிலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களிலும் வழக்கில் உள்ளது. மேலும், கேழ்வரகின் உமிக்கும் மேல் உள்ள புறத்தோலை கொங்கு, கொங்க(கொங்கை) என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்ட கிராமங்களில் வழக்கில் உள்ளது. சங்ககால தமிழகத்தின் எல்லையில் ஆண்டதால் கங்கன் என்ற பெயர் வந்தது. எல்லையில் ஓடுவதால் கங்கை என்ற பெயர் வந்தது. அதன்படி, முடியுடை வேந்தர்களான சேர, சோழ, பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லை கங்கில்(ஓரத்தில்) அமைந்ததால் கங்கு, என்று இருந்து காலப்போக்கில் கங்கு>கெங்கு>கொங்கு என மருவியது.
  2. கொங்கு என்ற சொல்லுக்கு தேன், சாரல் என்று பொருள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்குச் சரிவுப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேன் மிகுந்திருந்ததால் இப்பகுதி கொங்கு எனவும், குடநாட்டில் (கேரளாவின் வட பகுதி) மிகுதியாய் பெய்யும் மழையின் சாரல் மிகுந்து பெய்ததால், இப்பகுதி கொங்கு எனவும் கூறுவார் உண்டு.

வரலாறு

கொங்கு மண்டலத்தில் நடக்கும் திருமண நிச்சயதார்த்தத்தில் நடக்கும் சடங்குகள். கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வெற்றிலை பாக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கங்க வம்சத்து மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் கங்கவாடி 96,000 என்ற பகுதி இருந்துள்ளது.[2] தஞ்சைச் சோழர்களான, இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது. பின்னர், இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்து வந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் நாயக்கர்களின் ஆட்சிக்கு வந்தது.[3] கொங்கு நாடு, 17ஆம் நூற்றாண்டில், மதுரை நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது.[3] தொடர்ந்து பாளையக்காரர்களின் கீழ் கொங்டு நாடு இருந்து வந்துள்ளது.[4]

உள்ளடக்க நாடுகள்

கொங்கு மண்டலத்தில் 24 நாடுகளும் இணைநாடுகள் சிலவும் இருந்ததாகக் கொங்கு மண்டல சதகம் 3-ஆம் பாடல் தெரிவிக்கிறது. அவற்றை உரைநூல் ஒன்று [5] குறிப்பிடுகிறது. அவற்றின் அகரவரிசை வருமாறு. 24 நாடுகள்:

  1. அண்ட நாடு
  2. அரையன் நாடு
  3. ஆறை நாடு
  4. ஆனைமலை நாடு
  5. இராசிபுர நாடு
  6. ஒருவங்க நாடு
  7. காங்கேய நாடு
  8. காஞ்சிக்கோயில் நாடு
  9. காவடிக்கன் நாடு
  10. கிழங்கு நாடு
  11. குறும்பு நாடு
  12. தட்டையன் நாடு
  13. தலையன் நாடு
  14. திருவாவினன்குடி நாடு
  15. தென்கரை நாடு
  16. நல்லுருக்கன் நாடு
  17. பூந்துறை நாடு
  18. பூவாணிய நாடு
  19. பொன்களூர் நாடு
  20. மணல் நாடு
  21. வடகரை நாடு
  22. வாரக்கன் நாடு
  23. வாழவந்தி நாடு
  24. வெங்கால நாடு

இணைநாடுகள்

  1. இடைப்பிச்சான் நாடு
  2. ஏழூர் நாடு
  3. சேல நாடு
  4. தூசூர் நாடு
  5. பருத்திப்பள்ளி நாடு
  6. விமலை நாடு

சங்க நூல்களில் கொங்கர்

"கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே"-புறநானூறு-பாடல்-373
"கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை"-புறநானூறு-பாடல்-160

'ஆ கெழு கொங்கர்' என்னும் பதிற்றுப்பத்து (22) பாடல் தொடர் ஆனிரைகளைப் பேணுவதில் கொங்கர்களுக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.

சமய இலக்கியங்களில் கொங்கு

"விரவியவீங்கோய் மலைமுதலாக விமலர்தம் பதிபலவணங்கிக்
குரவலர் சோலையணிதிருப்பாண்டிக் கொடு முடியணைந்தனர் கொங்கில்"- பெரிய புராணம்(-ஏயர்கோன்-85)

"காரூரு மலைநாடு கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலசுழியச்
சீரூரும் திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்"-பெரிய புராணம்(-சேரமான்-164)

கயிறு குறு முகவை

கெட்டியான பாறைகளைக் கணிச்சியால் உடைத்து ஆழ்கிணறுகள் தோண்டுவார்கள். 'பத்தல்' என்னும் வாளியைக் கயிற்றில் கட்டி அக்கிணற்றில் நீர் இறைப்பார்கள். நீர் இறைக்கும்போது பாடிக்கொண்டே இறைப்பார்கள். தண்ணீரை முகந்து பாடுவதால் இப்பாட்டை 'முகவை' என்றனர்.

மதுரை நாயக்கர்களின் பாளையக்காரர்

கொங்கு நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் ஆளுமை 1659 இல் தொடங்கி 1672 இல் முடிவடைந்தது.

கொங்குநாட்டில் உள்ள மாவட்டங்கள்

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களும் திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் கொங்கு நாட்டிற்கு உட்பட்டதாகும்.[7]

கொங்கு மண்டல ஆறுகள்

  1. ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி),
  2. காஞ்சி (நொய்யல்),
  3. வானி (வவ்வானி, பவானி),
  4. பொன்னி (காவிரி ஆறு),
  5. சண்முகநதி
  6. குடவனாறு (கொடவனாறு),
  7. நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு),
  8. மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
  9. மீன்கொல்லிநதி
  10. சரபங்காநதி
  11. உப்பாறு
  12. பாலாறு

மொழி

கொங்கு மண்டலத்தில், கொங்குத் தமிழ் என்னும் மொழியானது பேசப்படுகிறது. கொங்குத் தமிழ் என்பது ஒரு வட்டார வழக்கு மொழியாகும். இதை கோயம்புத்தூர் தமிழ் என்றும் அழைக்கப்படுகிறது.

பொருளாதாரம்

கொங்கு நாட்டில் பல தொழிற்சாலை நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகிறது. வேளாண்மை மற்றும் ஜவுளித் தொழில்கள் இப்பகுதியின் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்களிக்கின்றது.[8] இங்கு பருத்தி ஆடைகள், பின்னலாடை, உள்ளாடைகள் மற்றும் பால், கோழி, மஞ்சள், கரும்பு, அரிசி, வெள்ளை பட்டு, தேங்காய், வாழைப்பழங்கள் போன்ற விவசாய பொருட்களும் மற்றும் காகிதம், வாகன உதிரி பாகங்கள், நீர் விசையியக்கக் குழாய்கள், அரவை இயந்திரம், நகைகள், அலுமினியம் மற்றும் எஃகு ஆகிய பொருட்கள் தயாரிப்பதில் கொங்கு நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.[9][10][11][12][13][14][15] இங்கு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகிறது.[16][17] திருப்பூருடன், கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டில் காய்கறி உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மாவட்டமாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாகும். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், இந்தியாவின் நம்பர் 1 போக்குவரத்து மையமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய கோழி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகவும் உள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மரவல்லிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது.[18] சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழம் அதிகளவில் விளைகிறது.

சுற்றுலா தளங்கள்

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, ஒகேனக்கல், சத்தியமங்கலம், ஆனை மலை மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகள் சுற்றுலா தளங்களாகும்.

கோவில்கள்

பழனி, பண்ணாரி மாரியம்மன் கோயில், பவானி சங்கமேசுவரர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில், கொடுமுடி, மற்றும் மருதமலை ஆகிய கோவில்கள் கொங்கு நாட்டில் உள்ள முக்கிய கோவில்களாகும்.

மேற்கோள்கள்

  1. "Census of India". Government of India (2001). மூல முகவரியிலிருந்து 12 May 2008 அன்று பரணிடப்பட்டது.
  2. கொங்கு நாட்டு வரலாறு-பக்கம் -126 - ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்- அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954
  3. http://princelystatesofindia.com/Polegars/polegars.html
  4. http://princelystatesofindia.com/Polegars/palani.html
  5. முனைவர் ந. ஆனந்தி, கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் மூலமும் தெளிவுரையும், வெளியீடு சாரதா பதிப்பகம், சென்னை, 2008
  6. Francis, W. (24 August 1988). "Gazetteer of South India". Mittal Publications.
  7. "இது கொங்குநாட்டு ஸ்பெஷல்!". விகடன் (அக்டோபர் 08, 2016)
  8. "When the Gods came down". The Hindu Business Line. 8 May 2014. http://www.thehindubusinessline.com/catalyst/when-the-gods-came-down/article5989549.ece.
  9. "State wise number of cotton mills". Confederation of Textile Industry. மூல முகவரியிலிருந்து 25 January 2016 அன்று பரணிடப்பட்டது.
  10. Chakrapani, Saranya (20 November 2014). "Coimbatore: Rise of the self-made city". India Today. http://indiatoday.intoday.in/story/best-cities-2014-favourable-environment-entrepreneurs-coimbatore-on-top/1/402940.html.
  11. "Tamil Nadu Poultry Industry Seeks Export Concessions". Financial Express. http://archive.financialexpress.com/news/tamil-nadu-poultry-industry-seeks-export-concessions/88614.
  12. Yegya Narayanan, R. "Coimbatore's small auto component makers find the going tough". Business Line. http://www.thehindubusinessline.com/economy/coimbatores-small-auto-component-makers-find-the-going-tough/article5608873.ece.
  13. "Poor sales hit pump unit owners, workers". Times of India. 26 May 2015. http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Poor-sales-hit-pump-unit-owners-workers/articleshow/47423911.cms.
  14. "Poll code set to hit wet grinders business". Live Mint. 6 August 2015. http://www.livemint.com/Industry/r8UaiAN7APhsLubxdYWgOL/Poll-code-set-to-hit-business-of-Coimbatores-wetgrinder-ma.html.
  15. "India's Gems and Jewellery Market is Glittering". Resource Investor. http://www.resourceinvestor.com/News/2007/8/Pages/India-s-Gems-and-Jewellery-Market-is-Glittering.aspx.
  16. Sujatha, S (13 January 2010). "Coimbatore gears up for IT revolution, Tidel park to be ready by April end". The Economic Times. http://articles.economictimes.indiatimes.com/2010-01-13/news/27577011_1_tidel-park-coimbatore-elcot-salem-and-hosur.
  17. "Coimbatore: IT sector on the fast track". India Today. 22 April 2011. http://indiatoday.intoday.in/site/story/coimbatore-it-sector-on-the-fast-track/1/136030.html.
  18. Saqaf, Syed Muthahar (2014-09-13). "Good demand for tapioca in Salem" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/good-demand-for-tapioca-in-salem/article6406931.ece.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.