கெட்டி முதலிகள் மரபு

கட்டி அரசு மரபினர் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் உண்டு. "வல்வேற் கட்டியர்"(குறுந்தொகை:11) "போராடும் தானை கட்டி"(அகம்226), "பல்வேற் கட்டியர்" (சிலம்பு : 25 : 157 ) எனவே கட்டி அரசர்களின் காலம் கிமு முதல் நூற்றாண்டு என்கிறார் தமிழ் நாடன்( கெட்டி முதலி அரசர்கள் ப.13 ) கரிகால சோழனோடும் சேரன் செங்குட்டுவனோடும் இப்பாடல்கள் கட்டி அரசர்களை குறிப்பிடுகிறது . ஆனால் கி.பி 1274 போசாள மன்னன் வீரராமநாதன் காலத்தில் இருந்தே இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. .'தாரமங்கலத்து முதலிகள் ' என்ற தொடர் 13 நூற்றாண்டு முதல் கல்வெட்டுகளில் (7/25,24,23) காணப்படுகின்றன. கெட்டி அரசர்கள் பற்றி 21 கல்வெடுகள் சேலம்நாமக்கல் கல்வெட்டுத் தொகுதியில் கிடைக்கின்றன. கெட்டி முதலிகள் வரலாற்று குறிப்புகளில் உள்ள தாரமங்கலம், தோப்பூர் , அமரகுந்தி , பவானி ,ஈரோடு , இராசிபுரம் , சேலம் ஆத்தூர் ஆகிய ஊர்களில் செங்குந்தர்கள் முதலியார் என்று பட்டத்துடன் அழைக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் இவர்கள் அரசாட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்திருக்கின்றன. ஆத்தூர் கோட்டையை இவர்கள் கட்டினார்கள் என்றும் 14 தலைமுறை ஆட்சி ஆண்டார்கள் என்றும் சாம்பள்ளி கைபீது குறிப்பிடுகிறது. கெட்டி முதலி' மரபினர், சேர சோழ. பாண்டியர் என மூவேந்தர் மட்டுமின்றி போசாளர் விசயநகர அரசு நாயக்கர் மற்றும் மைசூர் மன்னர்களின் காலங்களிலும் அரசோச்சிய, கொங்கு நாட்டுச் சிற்றரசர்கள் அனைவரும் காவேரி, அமரகுத்தி, தாரமங்கம் ஆகிய இடங்களைத் தலமையிடங்களாகச் கொண்டு அரசாண்டவர்கள். இவ்வரசர்களில்

  • வேம்பன்கெட்டி
  • இனமன்கெட்டி
  • இம்முடிகெட்டி
  • மும்முடிகெட்டி
  • சீயாளிகெட்டி
  • வணங்காமுடிகெட்டி ஆகியோர் ஆவர்.

இந்த சிற்றரசர்களால், தற்பொழுதுள்ள சேலம் மாவட்ட மக்களின் வாழ்க்கைச் சீர்மை மேலோங்கியது. மைசூர் அரசப்படையினரால், இச்சிற்றரசர்களின் நிலை மாறியது.

தோற்றம்

கட்டி அரசர்களின் காலம் சங்க காலம் முதல் தொடங்குகிறது.போசாளர் பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் இவர்கள் செல்வாக்கு மிகுதி . நாய்க்கர் காலத்தில் அரியநாத முதலி என்பவர் மதுரையின் தலைவாயாகவும் பின்பு ஒரு பாளையத்திற்கு அரசனாகவும் இருந்திருக்கிறார் . தமிழகமானது நாயக்கர் காலத்தில், கீழ்கண்டப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது.

  • மதுரை நாயக்கர் பகுதி
  • தஞ்சை நாயக்கர் பகுதி
  • செஞ்சி நாயக்கர் பகுதி

இதில் மதுரை நாயக்கர் பகுதி விரிவான ஆளுகைக்கு உட்பட்ட நாடாக இருந்தது. சேலம் உள்ளிட்ட கொங்கு நாடு, மதுரை நாயக்கர் பகுதியோடு இணைந்திருந்தது. அப்பகுதி பாளையக்காரர்கள் அனைவரும், மதுரையின் எழுபத்திரெண்டு பாளையப்பட்டுகளோடு சேர்ந்திருந்தார்கள்.

கொங்குப் பகுதிகளில் வாழ்ந்த தாரமங்கலம் கெட்டி மரபினர் தொண்டைமண்டல சைவ வெள்ளாளர் முதலியார் இவர்கள்.'[1][2] தாரமங்கலத்தை அரசு புரிந்த கெட்டி முதலிகள் என்னும் அரசர்கள் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் தம் பெயரு்க்கு முன்னால் நீருணி என்ற பெயரைச்சேர்த்து வழங்கியுள்ளனர்.இதனை கி.பி.1274-ஜ சேர்ந்த வீரராமனாதன் காலத்து கல்வெட்டு ஓன்று தாரமங்கலத்து முதலிகளில் நீருணி பெரிய இளமன் என்பவன் முதலாகன ஆறுவர் இளமீகரமுடைய நாயனார்க்கு தேவதானம் விட்டதையும்,

கி.பி.1281-ல் சேர்ந்த சடையவர்சந்தாபாண்டியன் இரண்டாம் காலத்து கல்வெட்டு ஓன்று முதலிகளில் நீருணி இளையான் நல்ல உடையப்பன் என்பவன் தனது பிதாக்கள் போரில் இலட்சுமண சதுர்வேதி மங்கலம் அமைத்ததையும் குறிப்பிடுகின்றன்.

மேலும், இளமீகரன் கோயில் காணப்படும் சுந்தர பாண்டியனின் காலத்துக் கல்வெட்டுக்களில் ஓன்று இலட்சுமண சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்களுக்கு உடைப் பெடுத்த காரைகளத்தினைப் பழது திருத்தி இறையிலியாகக் கொடுத்த எட்டு முதலி அரசர்களின் ஓருவராக மேற்குறிப்பிட்ட இளையான் நல்லுடையப்பனைக் குறித்துள்ளது.

இவ்வாறே, மற்றொரு கல்வெட்டு இலட்சுமணன் சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்களுக்கு அமரகுந்தி முதல் வெள்ளரைப்பள்ளிஈறாக ஓன்பது ஊர்களையும் செய்ய பெருமாள் ஏரி நீர் பாயும் நான்கெல்லை நிலங்களையும் இறையிலியாக கெடுத்த ஓன்பது முதலிகளில் ஓரு வராகவும் அவரைக் குறித்துள்ளது.

நீருணியர் இன்றைய நீருண்ணியக் கூட்டமே கல்வெட்டுகளில் நீருணியர் எனப்படுகின்றனர் இக்கூட்டம் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுகள் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து கிடைக்கப்பெற்றதாகும்.

இக்கூட்டத்தைக் குறிக்கும் ஆட்பெயர்களில் வேளாளன் என்ற சாதிப்பெயருக்குப் பதில் முதலி என்ற சாதிப்பெயர் வருகிறது.எடுத்துக் காட்டாக 'முதலிகளில் நீருணி பெரிய இளமன்' .இங்கும் வேளான் என்ற சொல் காணப்படவில்லை. வேளான் என்பதும் முதலி என்பதும் அக்காலத்தில் ஓரு பொருள் கொண்டதே என்பது இதன் மூலம் அறியலாம்.[3][4][5][6]

அரியநாத முதலி

விசவநாத நாயக்கர் 1529 முதல் 1564 வரை, மதுரையைத் தலைநகராகக் கொண்டு, மதுரை நாயக்க நாட்டை வல்லமையுடன் ஆண்டார். இவரின் தந்தை நாகம நாயக்கர் தென்மண்டல அதிபதியாக, விசயநகரப் பேரரசில் இருந்தபோது அவருக்கு கணக்குப்பிள்ளையாகவும், பின்னர் நம்பிக்கையான படைத்தலைவனாகவும்(தளவாய்) இருந்தார். விசுவநாத நாயக்கரை, மதுரைக்கு அரசராக நியமித்தவுடன், அவருக்கு துணையாக அனுப்பப்பட்டவர் தான் அரியநாத முதலி. இவர் விசுவநாத நாயக்கருக்குத் தளவாயாகவும், தளபதியாகவும், அமைச்சராகவும் இருந்து செயல்பட்டார். பாளையப்பட்டு அமைப்பு முறை உருவாகத் துணையானார்.

முதலிகளின் குடியமர்வு

இந்த அரியநாத முதலி, தொண்டை மண்டலச் சைவ வேளாளராகிய, முதலியர்கள் வகுப்பைச் சேர்ந்தவர். மேலும், இவர் முதலாம் கிருஷ்ணப்பர் (1564-72) காலத்தும், வீரப்ப நாயக்கர் காலத்தும் (1572-95), இரண்டாம் கிருஷ்ணப்பர் (1595-1601) காலத்தும் தளவாயாக இருந்தவர். நாயக்கர் நாட்டில் மன்னர்களுடைய ஆதிகத்தைவிட, இவருடைய ஆதிக்கம் தான் பெரியதாக இருந்தது.இவர் என்ன சொன்னாலும் நாயக்க மன்னர்கள் கேட்டனர். ஆகவே, தனக்குப் பலம் சேர்க்க வேண்டி, தன்னுடைய இன மக்களை, தொண்டை மண்டலத்திலிருந்து, அரியநாத முதலி மதுரை நாட்டில் குடியமர்த்தினார். சோழவந்தானிலும், திருநெல்வேலியிலும், காஞ்சிபுரத்திலிருந்தும் முதலியார்களைக் குடியமர்த்தினார்.[7]

கொங்கு நாட்டுக்கு ஓடுதல்

தொண்டைமண்டல முதலியார்களின் வசதியும் வாயப்பும், திருமலை நாயக்கர் காலத்திலும் இருந்திருக்கிறது. மன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டபோது. மன்னன் திருமலைக் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக அரசர்க்குரிய ஆபரணங்களைக் களைந்து விட்டுச் சென்றிருக்கிறான். கெட்டிமுதலிக்கு ஒர் ஆசை, இச்சமயத்தில் அரசர்க்குரிய கோலத்தில் இருக்க நினைத்து ஆபரணங்களையும், முடியையும் அணிந்து அரசனுடைய கட்டிலில் துயில் கொள்கிறான். அச்சமயத்தில் மன்னன் திரும்பி வருகிறான். இவனைப் பார்த்துவிட்டு உணவருந்த சென்று விடுகிறான். மன்னன் சென்றவுடன் அண்ணன் கொமர முதலி அங்கு வருகிறான். தம்பியின் நிலையைக்காண்கிறான், மன்னன் பார்த்திருப்பான், உறுதியாக தண்டனை கிடைக்கும். இனி இங்கு இருக்க கூடாது என்று சொல்லி, தம்பியை எழுப்பி அரண்மனையை விட்டு யாரும் அறியாதிருக்க ஓடிவிடுகின்றனர். வந்த இடத்தில், ஒரு நந்தவனத்தில் களைப்பால் தூங்கி விடுகின்றனர். அந்த இடம் கொங்கு நாடு ஆகும். மேலும், அவ்விடம் மதுரை நாயக்க மன்னர் ஆளுகைக்குட்பட்ட பாளையப்பட்டு ஆகும்.

மருத்துவம் கற்றல்

அவர்கள் தூங்கும் போது, பாம்பொன்று படமெடுத்து அருகில் நின்றது. அப்பொழுது அப்பக்கம் வந்த நாவிதன், அவர்களை பாம்பு தீண்டியதால் மயக்கம் வந்து விழுந்து விட்டனர் என்று கருதி அவர்களுக்கு மாற்றுமருந்து கொடுத்தான். பின்பு நிலையறிந்து அவர்களைத் தன்னுடன் இருக்குமாறு செய்து, அவர்களுக்கும் மருத்துவம் கற்றுத் தருகிறான். அவர்களும் சிறப்பாக அம்மருத்துவத் தொழிலைச் செய்தனர்.அக்காலத்தில் நாவிதர், மருத்துவம் கற்றனர். அதனால் அவர்களை மருத்துவர் என்றும், பண்டிதர் என்றும் அழைப்பர்.

மருத்துவத்தால் மாற்றம்

வேடர் பாளையப்பட்டின் மரபில் வந்தவனும், அமராவதிப் பட்டிணத்தில் ஆட்சி செய்தவனுமான, குன்னவேடர் என்பவனுக்கு, இராகபிளவை என்னும் நோயினால், அல்லல் பட்டான். அப்பொழுது இக்கெட்டி முதலி, அங்குச் சென்று மன்னனின் பிளவைக்கு மருத்துவம் பார்த்து, உடனே குணப்படுத்தினான். அதனால் மன்னனுக்கு கெட்டி மீது வாஞ்சை ஏற்பட்டு, அரசைக் கொடுக்க முன் வந்தான். எனக்கு வாரிசு உண்டுயென்றாலும் நீயே இப்பாளையபட்டை கட்டி ஆள வேண்டும். நான் வடக்கே செல்கிறேன். நீ இன்று போலவே, கெட்டியென்ற பெயருடனே அமராவதிப் பட்டணத்தைச் சேர்ந்த நாட்டை ஆள வேண்டும் என்று சொல்லிப் புறப்பட்டான்.

திருமலைநாயக்கரின் ஆணை

மன்னர் திருமலை நாயக்கர், தனக்கு கீழ் சேவகம் செய்து வந்தவனாகிய கெட்டி முதலி, பாளையகாரர் ஆகியவர்களோடு சேர்ந்து தனித்துச் செயல்படுகிறான் என்று கேள்விபட்டு, அவனை உடனே பிடித்துவர ஆணையிட்டான். தளபதி இராமப்பய்யன் படைகளோடு சென்று மோதிப் பார்த்தான். பிடிக்க இயலவில்லை, திரும்பிவிட்டான், இதனால் மன்னன் திருமலை நாயக்கர் அவனுக்கு ஓலை ஒன்று அனுப்பினான். உன்னுடைய ஆட்சியை கண்டு பெருமிதம் அடைகிறேன், நீ என்னை வந்து பார்க்க வேண்டும். உனக்கு மா¢யாதை செய்ய வேண்டுமென்று எழுதியிருந்தான்.

இதனால் கெட்டி முதலி மதுரை சென்றான். மன்னர் திருமலை நாயக்கர் கெட்டி முதலியை பணியவைக்க வேண்டுமென்பதற்காக யானை மீது வரச் செய்தான். கோட்டை - அரண்மனை வாசலில் யானை மீது குனியாது வரச் செய்ய வேண்டுமென்பதே மன்னன் நினைப்பு. ஆனால் கெட்டி முதலி யானை மீது வரும் போது குனியாது முன்னுக்கு மல்லாந்து அரண்மனைக்குள் புகுந்தான், இதனால் திருமலை நாயக்கர் மகிழ்ந்தான். இது போன்ற செய்திகளெல்லாம் மெக்கன்சி தொகுப்பில் உள்ளன.[8]

ஆதாரங்கள்

  • பாளையப்பட்டுகளின் வம்சாவளி தொகுதி-1, சு.குழந்தைவேலன், 1981
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.