கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம். இம்மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம், மாவட்டத் தலைநகரான் கரூர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 10,76,588 ஆகும். இவற்றில் கல்வியறிவு பெற்றவர்கள் 81.74 சதவிகதமாகும்.

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் கரூர்
மிகப்பெரிய நகரம் கரூர்
ஆட்சியர்
த.அன்பழகன் 02-07-2018 நடப்பு
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

சந்தோசுகுமார்
ஆக்கப்பட்ட நாள் செப்டம்பர் 30 1995
பரப்பளவு 2,904 கி.மீ² (வது)
மக்கள் தொகை
(2011
வருடம்
அடர்த்தி
1,064,493 (வது)
367/கி.மீ²
வட்டங்கள் 7
ஊராட்சி ஒன்றியங்கள் 8
நகராட்சிகள் 2
பேரூராட்சிகள் 11
ஊராட்சிகள் 157
வருவாய் கோட்டங்கள் 2
https://karur.nic.in

வரலாறு

கரூர் சேர சோழ மற்றும் நாயக்கர்களால் ஆளப்பட்டு இறுதியில் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது. தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் பணி இங்கு பழங்காலம் தொட்டே நடைபெற்றுள்ளது. மேலும் கரூர் பல்வேறு தமிழ் அரசர்களின் போர்களமாகவும் இருந்துள்ளது. இது கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வளம்மிக்க நாடாக விளங்கிற்று. மேலும் இதன் சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பம் மிகவும் இதமானதாகவும் உள்ளது. ஏறத்தாழ 2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ,பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சேரர்களால் தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு பிந்நாளில் பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.1793ல் கரூர் கோட்டையை அழித்து ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.

ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.

பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.[1]

கரூர் பசுபதீசுவரர் ஆலயம்

கரூர் மாவட்டத்தின் உருவாக்கம்

நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

கரூர்,குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம் அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது. மணப்பாறை தாலுக்கா திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர் மாவட்டத்துட்ன் இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி மாவட்டத்துடன் இணைந்தது.[2]

எல்லைகள்

வடக்கில் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களையும், கிழக்கில் திருச்சி மாவட்டத்தையும், தெற்கில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் திருப்பூர் மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2,904 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கரூர் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,064,493 ஆகும். அதில் ஆண்கள் 528,184 ஆகவும்; பெண்கள் 536,309 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.77% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 367 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 75.60% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 102,73 ஆகவுள்ளனர்.[3] நகர்புறங்களில் 40.82% மக்களும்; கிராமப்புறங்களில் 59.18% மக்களும் வாழ்கின்றனர்.

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 993,666 (93.35%) ஆகவும், கிறித்தவர்கள் 16,483 (1.55 %) ஆகவும், இசுலாமியர்கள் 53,292 (5.01%) ஆகவும், மற்றவர்கள் 0.10% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசப்படுகிறது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

கரூர் மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும், 20 உள்வட்டங்களும், 203 வருவாய் கிராமங்களும் கொண்டது.[4]

வருவாய் கோட்டங்கள் 2

  • கரூர்
  • குளித்தலை

வருவாய் வட்டங்கள் 7

உள்ளாட்சி நிர்வாகம்

கரூர் மாவட்டம் 2 நகராட்சிகளையும், 11 பேரூராட்சிகளையும் கொண்டது.[7]

நகராட்சிகள் 2

பேரூராட்சிகள்

ஊராட்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 8 ஊராட்சி ஒன்றியங்களையும், 157 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[8][9]

ஊராட்சி ஒன்றியங்கள் 8

அரசியல்

மக்களவைத் தொகுதிகள்

கரூர் மக்களவைத் தொகுதி மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகள் கரூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

சுற்றுலா

கரூர் பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை கொண்டுள்ளது. இது போர்களமாக விளங்கியதால் பல்வேறு மன்னர்களின் வீரத்தை பறைசாற்றும் சிலைகளை காணமுடிகிறது. சிறீ கல்யாண பசுபதீஸ்வரர், சிறீ கரூர் மாரியம்மன் கோயில், வெண்னை மலை சிறீ பாலதண்டாயுதபாணி கோயில், ஆத்தூர் சோழியம்மன் கோயில், மகாதானபுரம் மகாலக்ஷ்மி அம்மன் கோயில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லேஸ்வரர் கோயில், குழித்தலை கடம்பர் கோயில், ஐயர் மலை சிவன் கோயில், லால்பேட் ஐயப்பன் கோயில், தோகைமலை முருகன் கோயில், வியாக்கரபுரீஸ்வரர் கோயில், புகழிமலை அறுபடை முருகன் கோயில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில், மண்மங்களம் புது காளியம்மன் கோயில் மற்றும் பல கோயில்கள்[10] இங்கு சிறந்த வழிபாட்டு தலங்களாக உள்ளன.[11]

அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்

கரூர் நகரம் சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாகவும் புகழ் பெற்ற தொழில் மையமாகவும் விளங்கியது. குடிசைத் தொழில்களுக்கும் கைத்தறி நெசவுத் துணிகளுக்கும் புகழ்பெற்ற நகரமாக திகழும் இந்த நகரத்திற்கு பசுபதீஸ்வரர் கோயில் அடையாளச் சின்னமாக திகழ்கிறது. பசுபதீஸ்வரர் லிங்கம், பால் சுரக்கும் பசு மற்றும் இது போன்ற பல்வேறு சிற்பங்கள் இந்த கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

அருள்மிகு மாரியம்மன் கோயில்

கரூர் மாவட்ட நகரப் பகுதியின் மைய்யத்தில் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும் இங்கு அருள் மிகு மாரியம்மன் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வைகாசி திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிறது, இதில் சாதி சமய வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் பங்கேற்பதுடன், வழிபாட்டிற்காக ஒவ்வொரு பக்தா்களும் அமராவதி ஆற்றிலிருந்து புனித நீரை எடுத்து வந்து இந்த மகத்தான நிகழ்வில் பங்கேற்கின்றனா்.

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில்

தாந்தோணிமலை 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள தான்தோன்றிமலையின் சிறுகுன்றில் அருள்மிகு கல்யாண வேங்கடரமணர் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் கரூா் மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் தென் திருப்பதி என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

வெண்ணெய்மலை

கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள வெண்ணெய்மலை கோயிலில் அருள்மிகு பாலசுப்பிரமணியர் எழுந்தருளியுள்ளார். இக்கோயில் கரூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் சேலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இறை நேசர்களாகிய அருணகிரிநாதர் மற்றும் அவ்வையார் இக்கோயிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை போற்றி பாசுரங்கள் பல பாடியுள்ளனர்.

நெரூர்

நெருர் அருள்மிகு சதாசிவ பிரேமேந்திராள் திருக்கோயில் கரூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் கரூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

புகழிமலை

புகழிமலை கோயில் புகழூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் 17 கி.மீ, தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறிய மலையின் மீது சுவாமி சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். இங்கு அமைந்துள்ள சமணர்படுக்கை மற்றும் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். கரூர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அய்யர்மலை

57 கி.மீ தொலதைவில், கரூர் மாவட்டத்தில் குளித்தலையிலிருந்து 8 கி.மீ தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோட்சவம் திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது மற்றும் சித்திரை திருவிழா, தைப்பூசத் திருவிழா, கார்த்திகை திருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா ஆகியவை பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. மேலும், குளித்தலை தாலுகாவின் மையப்பகுதியில் அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோயில், 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

திருமுக்கூடலூர்

15 கி.மீ தொலைவில், திருமுக்கூடலூரில் அமைந்துள்ள அருள்மிகு அகஸ்த்தீசுவரர் திருக்கோவில் இந்து அறநிலையங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவிரி, அமராவதி, மணிமுத்தாறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியே திருமுக்கூடலூர் ஆகும். சோழ வம்சத்தைச் சார்ந்த முதலாம் இராஜேந்திர சோழனால் இக்கோயில் கட்டப்பட்டதாகவும் அகத்திய முனிவர் இங்குள்ள சிவனை வழிபட்டதாகவும் கருதப்படுகிறது.

திருக்காம்புலியூர் செல்லாண்டியம்மன் திருக்கோயில்

கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் கிராமத்தில், 23 கி.மீ தொலைவில், இத்திருக்கோயில் செல்லாண்டியம்மன் வீற்றிருக்கிறார். இந்தவூர் மக்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள இந்து மதத்தை பின்பற்றும் கிராம மக்களுக்கும் ஒரு முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

அரசு அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம் கரூர் மாவட்டம் பழைய திண்டுக்கல் ரோட்டில் ஜவஹர் பஜாரில் அமைந்துள்ளது. இது மக்களின் பார்வைக்காக 2000 ஆண்டில் துவங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இங்கு வெண்கல சிலைகள், உலோக பொருட்கள், இசைக்கருவிகள், நாணயங்கள், பாறைகள் மற்றும் தாதுக்கள் உட்பட மாதிரிகள் பல உள்ளன. மேலும் படிமங்கள், தாவரவியல் மாதிரிகள், மெல்லுடலிகளின் ஓடுகள் மற்றும் பிற கடல் மாதிரிகள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் சிறந்த விரிவுரைகள், வழிகாட்டி சேவைகள் மற்றும் பிற நிகழ்வுகளும் கல்வி தொடர்பாக செயல்படுத்தப்படுகின்றன.

பொன்னணியார் அணை

கரூர் மாவட்டத்தில், 60 கி.மீ தொலைவில், கடவூர் மலைப்பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தின் அருகில் அமைந்துள்ள பொன்னணியார் அணைக்கட்டு சுற்றுலா தலமாகும். இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைப் பகுதி பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது.

மாயனூர் கதவணை

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாயனூர் கதவணை சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

அம்மா பூங்கா

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்காம்புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள அம்மா பூங்கா சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. கரூர் மாவட்ட அதிகாரபூர்வ அரசு வலைப்பக்கம்
  2. தமிழக அரசு வலைப்பக்கம்
  3. Karur District : Census 2011 data
  4. Karur District Revenue Administration
  5. Manmangalam taluk carved out of Karur Taluk
  6. Reference about Pugalur Taluk In Karur District Official Website
  7. Karur District Local Bodies Administration
  8. Karur District Development Administration
  9. கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்
  10. https://karur.nic.in/tourism/places-of-interest/
  11. http://www.tn.gov.in/district_details/28326

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.