திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். இது பழைய செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, சனவரி 1, 1997 அன்று உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவள்ளூர் ஆகும்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் திருவள்ளூர்
மிகப்பெரிய நகரம் ஆவடி
ஆட்சியர்
கே.வீரராகவராவ் இஆப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்


பரப்பளவு 3,394 சகிமீ
மக்கள்தொகை
37,28,104
வட்டங்கள் 7
ஊராட்சி ஒன்றியங்கள் 14
நகராட்சிகள் 5
பேரூராட்சிகள் 9
ஊராட்சிகள் 526
வருவாய் கோட்டங்கள் 3
வருவாய் கிராமங்கள் 792
திருவள்ளூர் மாவட்ட இணையதளம் https://tiruvallur.nic.in

வரலாறு

இம்மாவட்டமானது, 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆளுமையில் இருந்தது அதன் பின் ஆற்காடு நவாப்பின் ஆளுமைக்கு வந்து 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்தது. 1687 ஆம் ஆண்டில், முகலாயர்களால் கோல்கொண்ட ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்ட பின் இந்த பிராந்தியம் டெல்லியின் முகலாய பேரரசர்களின் கீழ் வந்தது. இந்த பிராந்தியத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் கர்நாடகப் போர்கள் நடந்த காட்சிகளை காண முடிகிறது. இந்த பிராந்தியத்தில் ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சுகாரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்ததாக கூறப்படுகிறது. 1609 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பழவேற்காடு நகரம் டச்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் பின் 1825 ஆம் ஆண்டில் பிரிட்ஷார் இந்த நகரத்தை தங்கள் வசம் ஆக்கிக்கொண்டனர்.[1]

திருவள்ளூர் வீரராகவ கோவிலில், விஷ்ணு என்ற புனித இறைவனின் தூக்க நிலையை குறிப்பிடுகின்ற வகையில் திருவல்லூரு என்ற பெயரில் திருவள்ளூர் முதலில் அறியப்பட்டது. பின்னர் மக்கள் திரிவல்லூர் மற்றும் திருவள்ளூர் போன்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், முன்னாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் (1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது செங்கல்பட்டு-எம்.ஜி.ஆர் / காஞ்சிபுரம் என மறுபெயரிடப்பட்டது) இருந்து பிரிக்கப்பட்டது. திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பொன்னேரி மற்றும் கும்மிடிபூண்டி உள்ளிட்ட வட்டங்களை செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பிரித்து இந்த புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்பொழுது இந்த மாவட்டத்தில் கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆவடி ஆகிய 8 வட்டங்கள் உள்ளன்.செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டம் புதிய மாவட்டமாக, சூலை 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது, என்றாலும் 1997 சனவரி மாதம் முதல் தேதியிலிருந்து தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.

மக்கள்தொகை பரம்பல்

3,394 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 3,728,104 ஆகும். அதில் ஆண்கள் 1,876,062 ஆகவும்; பெண்கள் 1,852,042 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 35.33% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,098 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 84.03% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 405,669 ஆகவுள்ளனர்.[2] இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 3,325,823 (89.21 %), இசுலாமியர் 143,093 (3.84 %), கிறித்தவர்கள் 233,633 (6.27 %), ஆகவும் உள்ளனர்.

மாவட்ட நிருவாகம்

மாவட்ட வருவாய் நிருவாகம்

மாவட்ட வருவாய் துறையின் 1 மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் 4 வருவாய் கோட்டங்கள், 10 வருவாய் வட்டங்கள், உள்வட்டங்கள், 792 வருவாய் கிராமங்கள் கொண்டது.[3]

வருவாய் வட்டங்கள்

  1. கும்மிடிப்பூண்டி வட்டம்
  2. திருவள்ளூர் வட்டம்
  3. பொன்னேரி வட்டம்
  4. பூந்தமல்லி வட்டம்
  5. திருத்தணி வட்டம்
  6. பள்ளிப்பட்டு வட்டம்
  7. ஊத்துக்கோட்டை வட்டம்

ஊராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம்

உள்ளாட்சித் துறையின் கீழ் 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் உள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 14 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 526 கிராம ஊராட்சிகள் உள்ளது. [4]

நகராட்சிகள்

  1. திருவள்ளூர்
  2. ஆவடி
  3. திருத்தணி
  4. பூந்தமல்லி
  5. திருவேற்காடு

பேரூராட்சிகள்

  1. செங்குன்றம்
  2. பொன்னேரி
  3. திருநின்றவூர்
  4. ஊத்துக்கோட்டை
  5. மீஞ்சூர்
  6. கும்மிடிப்பூண்டி
  7. பள்ளிப்பட்டு
  8. பொதட்டூர்பேட்டை
  9. திருமழிசை

ஊராட்சி ஒன்றியங்கள்

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  1. திருத்தணி
  2. பள்ளிப்பட்டு
  3. வில்லிவாக்கம்
  4. புழல்
  5. சோழவரம்
  6. மீஞ்சூர்
  7. கும்மிடிப்பூண்டி
  8. எல்லப்புரம்
  9. பூண்டி
  10. திருவள்ளூர்
  11. பூந்தமல்லி
  12. கடம்பத்தூர்
  13. திருவாலஙகாடு
  14. ஆர்.கே. பேட்டை

அரசியல்

இம்மாவட்டத்தின் பகுதிகள் திருவள்ளூர், சென்னை வடக்கு, சிறீபெரும்புதூர் மற்றும் அரக்கோணம் என நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ளது. இம்மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.[5]

அரசுத்திட்டங்கள்

தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை தனது துறை வழியாக நிறைவேற்றுகிறது. அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுவது யாதெனில், தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகும். அத்திட்டத்தின் படி, இம்மாவட்ட கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களின் எண்ணிக்கை அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக – தாய் 2011 – 12 முதல் 2015 – 16 வரை 526 ஊராட்சிகளை சேர்ந்த 3861 குக்கிராமங்களில் ரூ. 3680.00 கோடி ஒதுக்கீட்டில் பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இரண்டாம் தாய் திட்டம் வழியாக, தமிழக அரசின் அரசாணை எண் 129 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (SGS-1) நாள் 25.10.2016-ன் படி, தாய் – II 2016-17-ன் திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் சிறுபாசன ஏரிகளை மேம்படுத்துதல், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை எற்படுத்துதல் மற்றும் சாலை வசதிகள் எற்படுத்துதல் ஆகிய பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.[6] தாய் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் உள்ள சிறுபாசன ஏரிகள் விரிவான முறையில் புனரமைப்பு செய்யப்படும். இந்த ஏரிகளில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு, இயந்திரங்களின் மூலம் ஏரிகள் தூர்வாரப்பட்டு, மதகு மற்றும் கலங்கல்கள் புதிதாக கட்டப்பட்டு, கரைகள் பலப் படுத்தப்படும். இதன் மூலம் குக்கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாட்டினை களையவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், சிறுபாசன ஏரிகளின் முழு கொள்ளளவினை மீட்கவும், குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கான நீரினை சேமித்து முறைபடுத்தவும் வழிவகை ஏற்படும். இம்முயற்சியால் கீழ் ரூ.1344.930 இலட்சம் மதிப்பீட்டில் 60 சிறுபாசன ஏரிகள் மேம்படுத்தும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதில், ரூ.1108.900 இலட்சம் மதிப்பீட்டில், 45 சிறுபாசன ஏரிகள் மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முடிவடைந்த வடகிழக்கு பருவமழையின் போது, 2017க்கு முன்னதாக மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்ட சிறுபாசன ஏரிகளில், தண்ணீர் நிரம்பியதோடு, நிலத்தடி நீர் மட்டமும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. சாலை வசதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 48 சிறப்பு சாலை பணிகள் ரூ.1345.00 இலட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அதில் 40 சாலை பணிகள் முடிக்கப்பட்டு ரு.1123.42 இலட்சம் மதிப்பீட்டில் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.