புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். ஜனவரி 14, 1974இல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை (புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம்
புதுகை மாவட்டம்
மாவட்டம்
மன்னர் அரண்மணை, புதுக்கோட்டை

தமிழ்நாட்டு வரைபடத்தில் புதுக்கோட்டை மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
தொடக்கம்14 ஜனவரி 1974
தலைநகரம்புதுக்கோட்டை
வட்டங்கள்புதுக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி வட்டம், அறந்தாங்கி, திருமயம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, ஆவுடையார் கோயில், மணமேல்குடி, குளத்தூர், இலுப்பூர்.
அரசு
  Collector & District MagistrateS. Ganesh IAS
பரப்பளவு
  மொத்தம்4,663
மக்கள்தொகை (2011)
  மொத்தம்1
  அடர்த்தி350
Languages
  Officialதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்622xxx
Telephone code04322
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு[[ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்|]]
வாகனப் பதிவுTN-55
Coastline42 கிலோமீட்டர்கள் (26 mi)
Largest cityபுதுக்கோட்டை
Nearest cityதிருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்
Sex ratioM-50%/F-50% /
Literacy80%%
Legislature typeelected
மக்களவை (இந்தியா)0 (Defunct)
பொழிவு827 மில்லிமீட்டர்கள் (32.6 in)
Avg. summer temperature40.9 °C (105.6 °F)
Avg. winter temperature17.8 °C (64.0 °F)
இணையதளம்pudukkottai.nic.in

அமைவிடம்

புதுகை மாவட்டம் கிழக்கு நிலைக்கோட்டில் 78.25' மற்றும் 79.15'க்கு இடையேயும் வடக்கு நேர்க்கோட்டில் 9.50' மற்றும் 10.40'க்கு இடையேயும் அமைந்துள்ளது. புதுகை மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் திருச்சி மாவட்டமும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், வட கிழக்கில் தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளன. புதுகை, ஏறக்குறைய ஒரு கடற்கரை மாவட்டமாகும். மாவட்டத்தின் மேற்குப் பகுதி கீழ் கடற்கரைப் பகுதியைக் காட்டிலும் கடல் மட்டத்திலிருந்து சரிவாக 600 அடி உயரத்தில் உள்ளது. நிலப்பரப்பு ஏறத்தாழ சமமானதே, பொன்னமராவதி பகுதி மட்டும் சிறிது ஏற்றயிரக்கம் கொண்டதாக இருக்கும்.அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள நார்த்தாமலை குன்றுகள் மற்றும் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள பிரான்மலை தவிர்த்து பெரிய மலைகள் ஏதும் இம்மாவட்டத்தில் இல்லை.இம்மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் மட்டும் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன்வழியாக விவசாயம் செய்யப்படுகின்றது. பலாப்பழம் உற்பத்தியில் அந்த பகுதியே மிகவும் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக வடகாடு, மாங்காடு, அனவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், நெடுவாசல் கிழக்கு ஊராட்சி, புள்ளான்விடுதி குளமங்கலம் போன்ற பகுதிகளாகும்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.

"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271)

"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44)

"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.

"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலகட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலகட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.

பிராமிக் கல்வெட்டு

பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.

"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"

என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).

சமணமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.

தொல் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுக் குறிப்புகள் செறிந்து காணப்படும் புதுக்கோட்டையின் பன்முக பாரம்பரியத்தை புரிந்து கொள்ள, புதுக்கோட்டையின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது. புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதத்தக்கது. புதுக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொல் மனிதக் குடியிருப்புகளின் எச்சங்களும் தென்னிந்தியாவில் காணக்கிடைக்கும் மிகப்பழமையான கல்வெட்டுக்களில் சிலவும் காணக்கிடைக்கின்றன. பாண்டியர்கள், சோழர்கள்,முத்தரையர்கள், பல்லவர்கள், விஜய நகர ஆட்சியாளர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் ஹய்சாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர். அவர்கள், புதுக்கோட்டையின் வர்த்தக, சமூக அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவியதோடு, தனிச்சிறப்பு வாய்ந்த பல கோயில்களையும் நினைவுச்சின்னங்களையும் அங்கு கட்டினர்.

சங்ககாலம்

சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.

"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமிழ் பன்னிரு நாடென்"

என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.

பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூற்றில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும்.

சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சங்க இலக்கியத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒலியமங்கலம் (திருமயம் வட்டம்), ஒல்லையூர் என்று புறநானூற்றில் குறிப்படப்பட்டுள்ளது. ஒலியமங்கலம், சங்கக் கவிஞர் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான் மற்றும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆகியோரின் பிறந்த இடமாக விளங்கியுள்ளது. அகநானூற்றிலும் ஒல்லையூர் குறிப்படப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஒல்லையூர் முக்கியமான நகரமாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இன்னும் 4 ஊர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. அவையாவன: அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ள அம்புக்கோவில் (பண்டைய அலும்பில்); ஆவூர்கிழார், ஆவூர் முலம்கிழார் ஆகிய புலவர்களின் ஊரான ஆவூர்; எரிச்சி (பண்டைய எரிச்சலூர்) - புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் உள்ள எரிச்சி கிராமம் (எனினும், அண்மைய ஆய்வுகளின்படி இவ்வூர் இலுப்பூர் அருகே இருப்பதாக கருதப்படுகிறது.) இவ்வூர் மடலன் மதுரைக் குமரனார் என்ற புலவரின் ஊராக இருக்கக்கூடும்; ஔவையாருடன் தொடர்புப்படுத்தி பார்க்கத்தக்க அவயப்பட்டியில் ஔவையார் சிறிது காலம் வாழ்ந்திருக்ககூடும்; பொன்னமராவதி அருகே உள்ள பரம்பு மலையில் (தற்பொழுது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது) கடையேழு வள்ளல்களில் முதலாமவரான பாரியின் நிலமாகும். கபிலர், பாரியின் கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர். இங்கு, செந்தமிழ் கல்லூரி என்ற தமிழ் மொழிக்கான கல்லூரி ஒன்று அமைந்திருக்கிறது.

இம்மாவட்டம் சங்க காலத்தில் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்தாலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய சில பகுதிகள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சில ஊர்களின் பெயர்களின் தொடக்கத்தில் காணப்படும் கிள்ளி, வளவன் ஆகிய சோழர்களின் பட்டங்களைக் கொண்டு இதனை அறியலாம்.

புதுக்கோட்டை தொண்டைமான்கள்

சென்னை மாகாணத்தில் 1913ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பகுதியைக் காட்டும் வரைபடம்

இராமநாதபுர மன்னர் இரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி, இரகுநாதராயத் தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டதால், புதுக்கோட்டைப் பகுதியை, இரகுநாதராயத் தொண்டைமான் தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு செய்தார்.

மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் புதுக்கோட்டை என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து விஜயரகுநாதத் தொண்டைமான் (1730-1769). இராய ரகுநாதத் தொண்டைமான் (1769-1789), விஜயரகுநாதத் தொண்டைமான் (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர்.

கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் சந்தா சாகிப்பும், பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும், ஆங்கிலேயர்கள் ஐதர் அலியுடன் போர்புரிந்தபொழுதும் புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உதவியாக இருந்தார்.

பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து தப்பிவந்த வீரபாண்டிய கட்ட பொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானின் படைகள் உதவின.

பின்னர் மன்னரான விஜயரகுநாதராயத் தொண்டைமான் (1807-1825), தமது 10-வது வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு பிளாக்பர்ன் என்ற ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து இரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத் தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய் இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை சேஷய்ய சாஸ்திரி என்ற திவான் கவனித்தார்.

இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் புதுக்கோட்டையின் மன்னரானார் (1886). 1912ஆம் வருடம் புதுக்கோட்டை நகரத்தில் நகராட்சி மன்றம் நிறுவப்பட்டது. 1948இல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுச் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர் இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார்.

மக்கள்தொகை பரம்பல்

4,644 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 16,18,345 ஆகும். அதில் ஆண்கள் 803,188 ஆகவும்; பெண்கள் 815,157 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 10.88% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1015 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 960 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 348 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 77.19% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,79,688 ஆகவுள்ளனர்.[1]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 14,28,784 (88.29%), கிறித்தவர்கள் 72,850 (4.50%), இசுலாமியர்கள் 1,14,194 (7.06%) ஆகவும் உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம்

வருவாய் நிர்வாகம்

இம்மாவட்டம் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் என மூன்று வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 45 உள்வட்டங்களும், 763 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[2]

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களையும்[3] , 499 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[4] மேலும் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி என இரண்டு நகராட்சிகளையும் மற்றும் 8 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.[5]இதில் கறம்பக்குடி பெரிய பேரூராட்சியாகும்.


கல்வி

2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரம் பின்வருமாறு[2]

வரிசை எண்கல்வி நிறுவனங்கள்மாணவர்கள்மாணவிகள்மொத்தம்ஆண் ஆசிரியர்கள்பெண் ஆசிரியர்கள்மொத்தம்
1கலை அறிவியல் கல்லூரிகள்54041247917883295437732
2பொறியியற் கல்லூரிகள்94604273136696194181037
3பல்தொழில்நுட்பக் கல்லூரிகள்1160896512255641279920
4கல்வியியல் கல்லூரிகள்40411891593148105263
5வேளாண் கல்லூரிகள்879217912921
6ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்32449481452570
7செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள்3319923221416
8தொடக்கப்பள்ளிகள்300702946959539117616882864
9நடுநிலைப்பள்ளிகள்240862235946445109311662259
10உயர்நிலைப்பள்ளிகள்333583202565383115220673219
11மேல்நிலைப்பள்ளிகள்240862235946445109311662259
12சிறப்புப் பள்ளிகள்50358551419
13தொழிற்பயிற்சி நிலையங்கள்1160172133210416120
மாவட்டத்தில்மொத்தம்1398381260652655216385740413799

மேலும் இங்கு சிறப்பாக செயல்படகூடிய மகளிர் கல்லுரிகளும் அமைந்துள்ளது. பாரதி மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை. நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரி, ராஜேந்திரபுரம்.

அரசியல்

இம்மாவட்டம் 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் கரூர், திருச்சி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது.[6]

சுற்றுலாத் தலங்கள்

மேற்கோள்கள்

  1. Pudukkottai District : Census 2011 data
  2. புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகம்
  3. புதுக்கோட்டை மாவட்ட 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்
  4. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  5. புதுக்கோட்டை மாவட்ட நகராட்சிகளும்; பேரூராட்சிகளும்
  6. புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள்

வெளி இணைப்புகள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.