மணிமுத்தாறு (ஆறு)

மணிமுத்தாறு நெல்லை (திருநெல்வேலி) மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறு மற்றும் அணைக்கட்டு ஆகும். இயற்கையாகவே மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக இருப்பதாலும் அணைக்கட்டு அதன் குறுக்கே கட்டப்பட்டிருப்பதாலும் மேற்கண்டவாறு வழங்கப்படுகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் இன்னொரு கிளை கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.

திருநெல்வேலியில் உள்ள மணிமுத்தாறு அணையிலிருந்து

மணிமுத்தாறு அணைக்கட்டு

மணிமுத்தாறு திட்டத்தை விளக்கும் கல்வெட்டு

நெல்லை மாவட்டம் களக்காடு மலைப் பகுதியில் செங்காந்தேரி அருகே பச்சையாறின் பிறப்பிடத்திலிருந்து தனியாக பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. சாதாரண காலங்களில் இந்த நீரின் அளவை தாமிரபரணியுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவு என்பதால் இது வெறும் மழைக்கால வெள்ளநீர் வெளியேற்று ஆறாகவே இருந்து வந்தது. எனவே மழைக்காலங்களில் இந்த வெள்ளநீர் தாமிரபரணியில் கலந்து வீணாக கடலில் கலப்பதை தடுக்க காமராசரால் கொண்டு வரப்பட்ட திட்டமே மணிமுத்தாறு அணைக்கட்டுத் திட்டம். இதன் மூலம் சேமிக்கப்படும் நீர் நெல்லை மாவட்டத்தின் வறட்சிப் பகுதிகளான தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள் வழியாக மிகவும் வறட்சிப் பகுதிகளான திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு குடிநீராகவும் விவசாயத்திற்கும் பயன்படுகிறது.

மணிமுத்தாறு பேரூராட்சி

அணைக்கட்டு மற்றும் அருவி நல்ல சுற்றுலாத் தலங்களாக அமைகிறது. மேலும் தமிழ்நாடு காவல்துறையின் இரண்டு காவலர் பயிற்சி பள்ளிகள் இங்கு செயல்படுகின்றன. பொதுமக்கள் இங்கு சிறிதளவே வாழ்கின்றனர். மலைப் பகுதியான மாஞ்சோலை மற்றும் கோதையாறுக்கு மணிமுத்தாறே நுழைவு வாயில் என்பதால் மணிமுத்தாறு, மாஞ்சோலை, கோதையாறு பகுதிகளை இணைத்து மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.