மேட்டூர் அணை

மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது மற்றும் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.

மேட்டுர் அணை
அமைவிடம்மேட்டூர், சேலம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
புவியியல் ஆள்கூற்று11°48′00″N 77°48′00″E
திறந்தது1934
அணையும் வழிகாலும்
உயரம்120 ft.
நீளம்1700 meters
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்ஸ்டான்லி நீர்த்தேக்கம்
கொள்ளளவு: 93.4 பில்லியன் கன அடி (2.64 km³)

மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.[1] அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. மேட்டூர் அணையில் 2 நீர் மின் நிலையங்கள் உள்ளன, முதல் பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் இரண்டாவது இந்தியக் குடியரசிலும் கட்டப்பட்டது.

மேட்டூர் அணையிலுருந்து 16 கண் மதகு வழியாக வெளியேறும் காவிரி

அணை கட்டுமான வரலாறு

அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் உயரம் 120 அடிகள். மேலும் இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. (1 டி.எம்.சி = 100 கோடி கன அடி)1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்பு 1835 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரைத் திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.

1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர் , அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார். அதன்படி மேட்டூரில் 1924ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்து வந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் மூலம் அணைகட்ட ஆரம்பிக்கப்பட்டது.

மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.[2]

மேட்டூர் அணையின் உயரம் 124 அடி நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம் 120 அடி முழுக் கொள்ளளவு 124 அடிக்கு 9,347 கோடி கண அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

1 tmc தண்ணீர் குறைந்தால் அணையில் 1.25 அடி தண்ணீர் குறையும்
1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 tmc குறையும்

இக்காலபகுதியில் கர்நாடகா தண்ணீரால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்படும் என மேற்கொள்ளப்பட்ட போராட்டம் பின்னர் கர்நாடக - தமிழ்நாடு தண்ணீர் பிரச்சினைக்கும் ஒரு காரணியாக அமைந்தது.

தமிழக மன்னர்கள் மைசூர் மன்னருக்கு கப்பம் கட்டிய காலம் அது வெள்ளையருக்கு ஒரு பகுதி வரி வசூல் தானே தவிர முழுஆளுமையுமில்லை. மேலும், ஒரு இடத்தில் அணைகட்டினால் பல கிராமங்களை தூக்க வேண்டி வரும் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் பல கிராமங்களும் கோவில்களும் உள்ளன. இன்றும் தண்ணீர் குறைந்ததும் அந்த கோவில்கள் தெரியும் அங்கிருந்த கிராமத்தை வேறு இடங்களுக்கு மாற்றி இருப்பர். பல்லாயிரக்கணக்காண நஞ்சை புஞ்சை நிலங்களும் தற்போது நீரில் மூழ்கியிருக்கும்.

மேட்டூர் அணை தொடருந்து நிலையம்

சேலம் மற்றும் ஈரோடு நகரங்களிலிருந்து மேட்டூர் அணை தொடருந்து நிலையத்திற்கு இரண்டு பயணிகள் வண்டி செல்கிறது.[3]

மேற்கோள்கள்

  1. பக் 70, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. பக். 87. ISBN 81-87371-07-2.
  2. பக் 70, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. ஸ்நேகா பதிப்பகம். பக். 87. ISBN 81-87371-07-2.
  3. Mettur Dam Railway Station
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.