தக்காணப் பீடபூமி
தக்காணப் பீடபூமி (Deccan Plateau) (தக்காண மேட்டுநிலம்)என்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் உள்ளதாகும். தென்னிந்தியாவின் பெரும்பகுதி தக்காண பீடபூமியை சேர்ந்தது.[1]

கங்கைச் சமவெளிக்கு தென்புறம் தக்காணப் பீடபூமி அமைந்துள்ளது. இதன் மேற்குப்பகுதி உயரம் கூடியும் கிழக்குப்பகுதி உயரம் குறைந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக தக்காணப் பீடபூமியில் பாயும் ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் உயரமாக இருப்பதால் தென்மேற்கு பருவக்காற்று மூலம் வரும் ஈரப்பதத்தை தடுத்து விடுகிறது. இதனால் தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றும் கோதாவரியும் அதன் துணையாறுகளும் தக்காணப் பீடபூமியின் மேற்பகுதியையும் கிருஷ்ணாவும் அதன் துணையாறுகளும் தக்காணத்தின் நடுப்பகுதியையும், காவிரி அதன் துணையாறுகளும் தக்காணத்தின் கீழ்ப்பகுதியையும் வளம்பெறச் செய்கின்றன.