தியாகம்

தியாகம் எனில் துறத்தல் அல்லது கைவிட்டுவிடுதல் என்று பொருள் படும். நாடு, இனம், சமூகம், மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவைகளின் உரிமைக்கான போராட்டத்தில் தன் உடல், பொருள், உயிர் ஆகியவைகளை ஒருவன் துறத்தலே தியாகம் ஆகும்.

இந்து சமய நோக்கில் தியாகம்

அனைத்து இல்லற இன்பங்களை துறந்தவனை துறவி என்பர். தியாகம் முக்குணத் தன்மை உடையது. முக்குணங்கள் அடிப்படையில் தியாகத்தை மூன்றாக பிரித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பகவத் கீதையில் பதினெட்டாவது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார்.

தாமசத் தியாகம்

ஒருவனுக்கு விதிக்கப்பட்ட செயலை (கர்மத்தை) முற்றிலும் துறந்துவிடுவது முறையல்ல. அவ்வாறு தாமச குணத்துடன், மதிமயக்கத்தினால் செயலை துறப்பது தாமசத் தியாகம் ஆகும்.

ராஜசத் தியாகம்

ஒரு செயல் செய்வதால் துக்கத்தைத் தருமென்று நினைத்து, உடலை வருத்த வேண்டி இருக்குமோ என்ற பயத்தால் அந்த கருமத்தை செய்யாது விட்டால் அத்தியாகம், இராட்சத குணத்துடன் தொடர்புடைய ராஜசத் தியாகம் ஆகும்.

சாத்வீக தியாகம்

ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை (செயலை) தான் செய்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன், பற்றுதலையும் கர்மத்தால் உண்டாகும் பலனையும் துறந்து செயலைச் செய்தால் அவ்வகையான தியாகம் சாத்வீக தியாகம் ஆகும். சத்துவ குணம் நிறைந்தவனும், அறிவாளியும், ஐயம் நீங்கிய தியாகியானவன், ஒரு செயலை நல்லது அல்ல என்று வெறுப்பதும் இல்லை. ஒரு செயலை நல்லது என்று அதில் நாட்டம் கொள்வதும் இல்லை.

உடலைத் தாங்குபவன் எவனும் செயல்களை துறந்து விடுவது என்பது முடியாத செயல். ஆகவே செயல்கள் செய்வதனால் உண்டாகும் புண்ணியம்-பாவம் எனும் கர்மபலன்களைத் தியாகம் (கைவிட்டுவிடுபவன்) செய்வனே தியாகி எனப் போற்றப்படுவான்.

தியாக பலன்கள்

தாமச தியாகம் அல்லது ராஜசத் தியாகம் செய்தவர்கள், தாம் இறந்த பின் இதமான, அல்லது இதமற்ற, அல்லது இரண்டும் கலந்த கர்ம பலனைகளை அனுபவிப்பார்கள். ஆனால் சாத்வீகத் தியாகம் செய்தவர்கள் அதைவிட மேலான பலனை அடைவார்கள்.

உதவி நூல்

  • பகவத் கீதை அத்தியாயம் 18, சுலோகம் 2 முதல் 13 முடிய
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.