முக்குணங்கள்

முக்குணங்கள் Guṇa (சமக்கிருதம்: गुण) என்பது சாங்கிய தத்துவத்தின்படி சாத்விக குணம், இராஜச குணம், மற்றும் தாமச குணம் ஆகியவைகளைக் குறிப்பதாகும். சாத்வீகம் வெள்ளை நிறத்தையும், இராஜசம் சிவப்பு நிறத்தையும், தாமசம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும் என்பர். இக்குணங்களின் அடிப்படையிலேயே உயிர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பது பொதுவான கருத்து. சாங்கியர்கள் முக்குணங்களின் சேர்க்கையினாலேயே உலகமானது உருவாகியது என்பர். முக்குணங்கள் சமநிலையில் இல்லாத போது பிரளயம் தோன்றுகிறது.

சத்வ (சாத்விகம்) குணம்

சத்வ குணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்- நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.

சத்வ குண பலன்கள்

சத்வ குணத்திலிருந்து தர்மச்செயல்கள்; தன் செயல்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது; பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத்தன்மையும், நிவிருத்தி மார்க்கமும்; விழிப்பு நிலையும் மற்றும் மேலுலகங்களை அடைகிறான்.

ரஜோ (இராஜசம்) குணம்

ரஜோ குண இயல்புகள்- ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும்.

ரஜோ குண பலன்கள்

ரஜோ குணத்திலிருந்து இன்பப் பற்று; ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், செயல் புரிவதில் ஆர்வம், கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலையும் அடைகிறான்.

தமோ (தாமசம்) குணம்

தமோ குண இயல்புகள்- காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.

தமோ குண பலன்கள்

தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிகின்றது. தமோ குணத்தினால் தூக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.