மாண்டூக்ய காரிகை

மாண்டூக்ய காரிகை என்பது மாண்டூக்ய உபநிடதத்தின் விளக்கமாக அமைந்த ஒரு வடமொழி உரை நூலாகும். இது எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடபாதர் என்பவரால் இயற்றப்பட்டது. மாண்டூக்ய உபநிடதத்தின் சாரம், 215 வரிகள் மூலம் இந் நூலில் விளக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ஆதி சங்கரரால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட அத்வைத வேதாந்தக் கொள்கையின் அடிப்படைகள் இந்நூலில் எடுத்தாளப் பட்டுள்ளன. இதனால், அத்வைதச் சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்திய முதல் நூல் மாண்டூக்ய காரிகையே எனக் கூறப்படுகின்றது. இந்நூலில் கௌடபாதர் கையாண்டுள்ள மொழியும், தத்துவங்களும் அவருக்குப் பௌத்த தத்துவங்களில் இருந்த அறிவை எடுத்துக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நூலின் அமைப்பு

மாண்டூக்ய காரிகை, பகுத்தறிவுக்கு ஒத்த அநுபவத்தின் மூலமும், தருக்க முறையினாலும் பிரம்மன் (இறைவன்) ஒன்றே ஒன்றுதான் என்றும், அதற்கு அப்பால் இன்னொன்று கிடையாது என்றும் கூறும் அத்துவைத நிலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்நூல் பிரகரணங்கள் எனப்படும் நான்கு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள்:

  1. ஆகமப் பிரகரணம்
  2. வைதத்யப் பிரகரணம்
  3. அத்வைதப் பிரகரணம்
  4. அலதசந்திப் பிரகரணம்

என்பனவாகும். இவை முறையே 29, 38, 48, 100 ஆகிய எண்ணிக்கையான சுலோகங்களால் ஆக்கப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்

முதல் பிரிவான ஆகமப் பிரகரணம், மாண்டூக்ய உபநிடதத்தின் சுருக்கமான விளக்கமாக அமைந்துள்ளது. இரண்டாவது பகுதியான வைதத்யப் பிரகரணம், உலகப் பொருட்கள் அனைத்தும் மாயையே என நிறுவ முயல்கிறது. கனவில் காண்பன எல்லாம் எவ்வாறு மாயையோ அதுபோலவே விழித்திருக்கும்போது தோன்றுவனவும் மாயையே என்கிறார் நூலாசிரியர். மூன்றாவது பகுதியில், இறைவனும், உயிர்களுமாக இருக்கின்ற ஒன்றே உண்மையானது என்றும், ஏனையவை எல்லாம் மாயையே என்னும் அத்துவித (இரண்டற்ற) நிலை விளக்கப்படுகிறது. கடைசிப் பகுதியில் இருமைத் தன்மையாகத் தோன்றும் மாயையை அகற்றும் வழிமுறைகள் விளக்கப்படுகின்றன.

ஆதாரநூல்கள்

  • மாண்டூக்ய உபநிடதம்

வெளி இணைப்புகள்

  • மாண்டூக்ய காரிகையை தமிழில் கேட்க: []
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.