சுவேதாசுவதர உபநிடதம்

சுவேதாசுவதர உபநிடதம் (Shvetashvatara Upanishad) என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 14வது உபநிஷத்து. தைத்திரீய சாகையின் 33 உபநிஷத்துக்களில் இது ஒன்று என்று தொன்றுதொட்டு கருதப்பட்டு வருகிறது. வித்யாரண்யர் தன்னுடைய "சர்வோபநிஷத் அர்த்தானுபூதிப் பிரகாசகத்தில்" இதை 12 வது உபநிஷத்தாக சேர்த்திருக்கிறார். பத்து முக்கிய உபநிஷத்துக்களைத் தாண்டி ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதியிருக்கும் நூல்களில் இதுவும் ஒன்று. இந்த பாஷ்யத்தை ஆதி சங்கரர் செய்ததல்ல என்ற கருத்தும் உள்ளது. (Narayana Sastry: p. 81).

வீடு பெறச்செயல்முறை

ஆண்டவனுக்கு அர்ப்பணமாக எல்லாக் கருமங்களையும் செய்து அதனாலேயே கருமத்தினின்று ஒழிவடைந்து தத்துவத்தின் தத்துவத்தால் யோகத்தைக் கைக்கொண்டு ஒன்றாலோ, இரண்டாலோ, மூன்றாலோ, எட்டாலோ, நுட்பமான ஆத்மகுணங்களால் நாளடைவில் ஒருவன் வீடு பெறுகிறான்.(6.3)

அத்வைத வேதாந்த தத்துவப்படி இதன் விளக்கம்:ஆண்டவனுக்கு அர்ப்பணமாகச்செய்யப்படும் எந்த வினையும் செய்பவரை பந்தப்படுத்தமாட்டா.இவ்விதம் பந்தப்படாமல் செய்யப்படும் கருமம் செய்பவரின் வாசனை மூட்டையோ கரும மூட்டையோ அதிகப்படுத்தப்படாது. இவ்விதம் கருமம் செய்வதால்தான் வினைகளைக்குறைத்து கருமத்திலிருந்து ஒழிவுபெறமுடியும். 'தத்துவத்தின் தத்துவத்தால்' என்ற சொற்பிரயோகத்தில் தத்துவம் இருமுறை வருகிறது. முதல் தத்துவம் 24 தத்துவங்கள் கொண்ட படைப்பனைத்தையும் குறிக்கும். அதாவது, பஞ்ச பூதங்கள், மனது, புத்தி, அகங்காரம், அவியக்தம் முதலிய நான்கு, கருமப்புலன்கள் ஐந்து, ஞானப்புலன்கள் ஐந்து, புலன்களை இழுக்கும் ஓசை முதலிய ஐந்து ஆக 24. இரண்டாவது தத்துவம் ‘தத்வமஸி’ (அதுவே நீ) என்ற வேதாந்தக் கூற்றைக் குறிக்கிறது.
ஒன்றாலோ: மனத்தாலோ.
இரண்டாலோ: மனது, புத்தி இவையாலோ, அ-து, புத்தியால் மனதையடக்கி.
மூன்றாலோ: மனது, புத்தி, அகங்காரம் இவற்றாலோ. அ-து, புத்தியால் மனதை அடக்கி, அகங்காரத்தை வென்று.
எட்டாலோ: எட்டு பாகமாகச்சொல்லப்பட்ட ‘அபரா பிரகிருதி’யின் உதவி கொண்டு. பஞ்ச பூதங்களும், மனது, புத்தி, அகங்காரம் இவைகொண்டது அபரா பிரகிருதி. (பகவத் கீதை: 7வது அத்தியாயம்).

வேண்டுதல்

சிலந்திப்பூச்சி அல்லது பட்டுப்பூச்சி தனது நூல்களால் தன்னை மறைத்துக்கொள்வதுபோல் இயற்கையாகவே பிரகிருதியில் தோன்றும் பொருள்களால் எந்த தேவன் தானொருவனாகவே தன்னை மறைத்துக் கொள்கிறானோ அவன் நமக்கு பிரம்ம சாயுஜ்யத்தை அளிக்கட்டும்.(6.10)

ஆதியில் பிரம்மாவைப்படைத்து அவனுக்கு வேதங்களைக்கொடுத்தருளியவன் எவனோ நமக்குள்ளிருந்து நமது புத்தியைப் பிரகாசிக்கச் செய்பவன் எவனோ அந்த தேவனை மோட்சத்தில் விருப்பமுடைய நான் சரணமடைகின்றேன்.(6.18)

முடிவு

எவனுக்கு தெய்வத்தினிடம் சிறந்த பக்தியும் தெய்வத்தினிடம் போலவே குருவினிடமும் பக்தியும் உண்டோ அந்த மகாத்மாவிற்கு உபதேசிக்கப்பட்டால்தான் இப்பொருள்கள் விளங்கும். அவருக்கு, வாய்விட்டுச் சொல்லாமலிருக்கும் ரகசியப் பொருள்களும் தாமாகவே விளங்கிடும். (6.23)

துணை நூல்கள்

  • T.S. Narayana Sastry. The Age of Sankara 1971 B.G. Paul & Co. Madras.
  • S. Radhakrishnan.The Principal Upanishads.1969. George Allen & Unwin Ltd. London. SBN 04 294047 8
  • "அண்ணா". உபநிஷத்ஸாரம். 1989 ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.