விநாயக புராணம்

விநாயக புராணம் அல்லது பார்க்கவ புராணம் இந்து சமய நூல்களுள் ஒன்று ஆகும்.

திரு நந்தி தேவரை முதற்கொண்டு எழுவது புராணங்களின் பின்னணியாகும். சிவபெருமான் புராணங்களை பார்வதிக்கு உபதேசம் செய்ததாகவும், பார்வதி, விநாயகர், முருகன் முதலியோருக்கும் உபதேசிக்கப் புராணங்கள் முப்பத்து முக்கோடித் தேவர்களுக்கும் நாற்பத்து நாற்கோடித் தேவர்களுக்கும் தெரியவந்து பின்னர் பூமிக்கு வந்தது என்பது தொன்ம நம்பிக்கை. நந்திதேவர் சனக்குமாரர்களுக்கு உபதேசிக்க வியாசமுனிவர் அவர்களிடமிருந்து பெற்றார்.

புராணம் என்பது புரா+நவ் எனப்பிரியும். புரா என்றால் பழமை எனவும், நவ் என்றால் புதுமை எனவும் பொருளாகும். தமிழில் புராணம் என்னும் சொல் மணிமேகலையில்தான் முதன்முதலாகக் கையாளப் பெற்றிருக்கிறது. ‘காதலால் கடல்வண்ணன் புராணம் பாடினான்காண்’ என்று சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் குறிப்பிடப் பெறுகிறது. புராணங்கள் தொன்மங்களாகவும், மரபுவழியிலான கர்ணபரம்பரைக் கதைகளாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

புராணங்களில் குறிப்பிடத் தக்கது பார்க்கவ புராணம் ஆகும். இது விநாயக புராணம் எனவும் வழங்கப்படுகிறது. பிரமன் பரமசிவ நாயகரிடம் விநாயகபுராணத்தை உபதேசமாகப் பெற்று வியாசருக்கு வழங்கினார் என்பது மரபு. வியாசர் பிருகு முனிவருக்கு அதை உபதேசித்தார். பிருகு முனிவர் அதனை உபாசனா காண்டம், லீலா காண்டம் என்னும் இரண்டு காண்டங்களாகவும் இருநூற்றைம்பது பிரிவுகளாகவும் அமைத்துப் பன்னிரண்டாயிரம் சுலோகங்களால் உலகத்திற்கு வழங்கினார்.

இது பதினெண் உபபுராணங்களுள் ஒன்று

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.