சமுத்திர மந்தனம்

சமுத்திர மந்தனம் என்பது தேவர்களாலும், அசுரர்களாலும் பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வாகும்.[1] [2] இந்நிகழ்வு இந்து தொன்மவியலில் பெரும் நிகழ்வாக அமைந்துள்ளது.

புராண வரலாறு

பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வானது அமுதத்திற்காக தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தார்கள் எனவும், தேவர்களின் நிதிநிலை ஆதாரங்கள் தீர்ந்தமையால் பாற்கடலை கடைந்தார்கள் எனவும் இரண்டு விதமாக கூறப்படுகிறது.


இந்து தொன்மவியலில் பாற்கடல் கடைதல் பெரும் நிகழ்ச்சியாகும். அமுதத்திற்காக வேண்டி பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாக கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள்.

மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது. அவ்விசம் தேவர்களையும், அசுரர்களையும் துரத்தியது. எனவே அதனைக் கண்டு பயம் கொண்டு சிவபெருமான் இருக்கும் கைலாயத்திற்கு சென்றாரகள். கைலாயத்தினை வலம் வருகையில் எதிர்நின்று அவ்விசம் விரட்டியமையால், மறு திசையில் சென்றாரகள். இவ்வாறான வலம் வரும் முறை சோம சூக்தப் பிரதட்சணம் என்று அழைக்கப்படுகிறது. அந்த விசத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தேவர்களும், அரக்கர்களும், இன்னபிற தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அவருடைய வயி்ற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விசம் அழிக்காமல் இருக்க, பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது. அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள்.

பாற்கடலில் இருந்து தோன்றியவை

  • ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி,சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, இரதி, இலக்குமி, அகலிகை, இந்திராணி, ஸகேசி, மஞ்சுகோஷ், சித்திரலேகை என அறுபதாயிரம் (60,000) அரம்பையர்கள்
  • உச்சை சிரவஸ் எனும் வெள்ளைக்குதிரை (உச்சைச்சிரவம்)
  • ஐராவதம் என்ற வெள்ளை யானை, புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என எட்டு யானைகள்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. "Page:பதினெண் புராணங்கள்.pdf/718 - விக்கிமூலம்".
  2. "என்றுமுள்ள இன்று".

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.