நிலா

நிலா (மாற்றுப் பெயர்கள்: நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்) (Moon, இலத்தீன்: luna) என்பது புவியின் ஒரேயொரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது கதிரவ தொகுதியில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும்.

நிலா  
புவியின் அரைக்கோளத்திலிருந்து காணும் முழு நிலவின் தோற்றம்
தகுதி நிலை
பெயரடை நிலவு
சிறும வீச்சு 363,104 km (0.0024 AU)
பெரும வீச்சு405,696 km (0.0027 AU)
அரைப்பேரச்சு 384,399 km (0.002 57 AU)
சராசரி சுற்றுப்பாதை வேகம் 1.022 கிமீ/வி
சாய்வுக் கோணம் நீள்வட்டத்திற்கு 5.145°
(between to புவியின் நிலநடுக்கோட்டிற்கு 18.29° இலிருந்து 28.58° வரை)
நெடுவரை இறங்கு கணு 18.6 ஆண்டு சுழற்சிக்கு ஒன்று என குறைகின்றது
இறங்கு கணு சிறும வீச்சுக் கோணம் 8.85 சுழற்சிக்கு ஒன்றென அதிகரிக்கின்றது
இயற்பியல் பண்புகள்
சராசரி ஆரம் 1,737.10 கிமீ  (0.273 புவிகள்)
நடுவரை ஆரம் 1,738.14 கிமீ (0.273 புவிகள்)
துருவ ஆரம் 1,735.97 கிமீ  (0.273 புவிகள்)
சுற்றளவு 10,921 கிமீ (நிலநடுக்கோட்டில்)
நீள்கோள மேற்பரப்பளவு 3.793 × 107 கிமீ2  (0.074 புவிகள்)
கனஅளவு 2.1958 × 1010 கிமீ3  (0.020 புவிகள்)
நிறை 7.3477 × 1022 கிலோ  (0.0123 புவிகள்)
சராசரி அடர்த்தி 3.3464 கி/செமீ3
நடுவரை நில ஈர்ப்பு1.622 மீ/வி2 (0.165 4 g)
விடுபடு திசைவேகம்2.38 kமீ/வி
உடு சுழற்சிக் காலம் 27.321582 d (ஒருங்கிசைவான சுற்றல்)
நடுவரை சுழற்சி திசைவேகம் 4.627 m/s
கவிழ்ப்பச்சு 1.5424° (to ecliptic)
6.687° (to orbit plane)
எதிரொளிதிறன்0.136
மேற்பரப்பு வெப்பம்
   நிலநடுக்கோடு
   85°N
குறைநடுமிகை
100 K220 K390 K
70 K130 K250 K
கோணவிட்டம் 29.3 to 34.1 பாகைத்துளி
வளிமண்டலம்
மேற்பரப்பு அழுத்தம் 10−7 Pa (day)
10−10 Pa (night)
பொதிவு Ar 20%, He 25%, Na, K, H 23%, Ne 25%

    நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும். ஈர்ப்பு விசை பூட்டல் காரணமாக நிலவு புவியை நோக்கி எப்போதும் ஒரு பக்கத்தையே காட்டுகின்றது; இந்தப் பக்கத்தில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் விண்கல் வீழ் பள்ளங்களுக்கும் இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன. புவியின் வான்பரப்பில் அன்றாடம் தோன்றும் வானியல் பொருட்களில் (கதிரவனை அடுத்து) இரண்டாவது வெளிச்சமான வான்பொருள் நிலவாகும். இது மிகவும் வெண்மையாகத் தெரிந்தாலும் இதன் தரைப்பகுதி உண்மையில் இருட்டாகவே உள்ளது; அசுபால்ட்டை விட சற்றே கூடிய ஒளிர்வே உள்ளது.

    புவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா பிறை சுழற்சியாலும் தொன்மைக்காலத்திலிருந்தே மனித சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில், (இலக்கியம், நாட்காட்டிகள், கலை, தெய்வங்கள் ) நிலவு மிகுந்த தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசைத் தாக்கத்தால் ஓதங்களும் நாள் நீள்வதும் ஏற்படுகின்றன. புவியின் விட்டத்தைப் போல முப்பது மடங்கு தொலைவில் நிலவின் சுற்றுப்பாதை அமைந்திருப்பதால் வானத்தில் சூரியனின் அளவும் நிலவின் அளவும் ஒன்றே போலக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு அமைந்தது மிகவும் தற்செயலானதாகும். இதனால் முழுமையான சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவினால் முழுவதுமாக மறைக்க இயலுகின்றது. புவிக்கும் நிலவிற்கும் இடையேயான நேரோட்ட தொலைவு தற்போது ஆண்டுக்கு 3.82±0.07 செமீ அளவில் கூடிக் கொண்டு வருகின்றது; ஆனால் இந்த கூடும் வீதம் நிலையாக இல்லை.[1]

    புவியினுடையதை விட சற்றே குறைவாக, நிலா ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாகியுள்ளதாக கருதப்படுகின்றது. இதன் உருவாக்கத்தைப் பற்றி பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன; தற்போது மிக விரிவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருதுகோளின்படி புவிக்கும் செவ்வாய் (கோள்)-அளவிலான வான்பொருளுக்கும் இடையேயான பெரும் மோதலின் துகள்களிலிருந்து நிலா உருவானது.

    புவியல்லாது மனிதர்கள் கால் பதித்த ஒரே வான்பொருள் நிலவாகும். சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டம் மனிதரில்லாத முதல் விண்கலத்தை 1959இல் நிலவில் இறக்கியது; இதுவரை மனிதர் சென்ற திட்டங்களை இயக்கிய ஒரே திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் நாசாவின் அப்பல்லோ திட்டம் ஆகும்; நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்த முதல் மனிதர்கள் 1968இல் அப்பல்லோ 8இல் சென்ற அமெரிக்க வானோடிகளாவர். 1969க்கும் 1972க்கும் இடையே ஆறு திட்டங்களில் நிலாவில் தரையிறக்கியுள்ளது. முதலில் நிலவில் தரையிறங்கிய மனிதர் அப்பல்லோ 11இல் சென்ற நீல் ஆம்ஸ்ட்றோங் ஆவார். இந்தத் திட்டங்கள் மூலம் 380 கிலோவிற்கும் கூடுதலான நிலவுப்பாறைகள் கொணரப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நிலாவின் தோற்றம், உள்கட்டமைப்பு, நிலவியல் வரலாறு ஆகியன ஆய்வு செய்யப்படுகின்றன.

    1972இல் அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு நிலவிற்கு ஆளில்லா விண்கலங்களே அனுப்பப்படுகின்றன. இவற்றில் நிலவுச் சுற்றுப்பாதைத் திட்டங்களே முதன்மையாக உள்ளன: 2004 முதல் ஜப்பான், சீன மக்கள் குடியரசு, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிலவுச் சுற்றுப்பாதையில் விண்கலங்களை அனுப்பி உள்ளன. இவற்றின் மூலம் நிலவின் முனையங்களில் (துருவங்களில்) நிரந்தரமாக இருட்டாக உள்ளப் பள்ளங்களில் நிலவு நீர் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அப்பல்லோவிற்குப் பின்பு இரு தேட்ட ஊர்திகள் அனுப்பப்பட்டுள்ளன: 1973இல் சோவியத் ஒன்றியத்தின் இறுதி லூனோகோட் திட்டம்; திசம்பர் 14, 2013இல் ஜேட் ராபிட் அனுப்பிய சீனாவின் நடப்பிலுள்ள சாங் ஈ 3 திட்டம்.

    நிலவு மறைப்பின் போது சிவப்பாகத் தோன்றும் நிலா.

    புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.

    ஆனால், நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் நிலவில் காற்று இல்லை. நிலவோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை சிறிது அதிகம். பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே சிறிதளவு காற்று உள்ளது. வியாழன் கோளின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அதன் மீது மோதுவது உண்டு.

    நிலவில் நீர்

    நிலவில் நீரினை முதன்முதலில் இஸ்ரோவின் சந்திராயன்-1 செய்மதி நாசாவின் கருவியைப் பயன்படுத்தி கண்டறிந்தது.

    இங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவிவேதியியலாளர் ஆல்பர்டோ சால் என்பவர் சில ஆண்டுகளாக "நிலவு வறண்டதாக பிறந்தது" என்ற பொதுவான கூற்றை உடைக்க முயன்றபொழுது நிலவில் ஆழமான பகுதியில் உருவாகிய நீரானது புவியில் உண்டான நீரின் ஆதாரம் போன்றதாக இருக்கிறது என்பதை கண்டறிந்தார். 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒளிர்மைமாறு (எதிர்பாராப் பொலிவு) விண்மீன் மோதலினால் (cataclysmic collision) கோள் உருவான பொழுது நிலவு பூமியிடம் இருந்து ஒரு திடமான நீர் வழங்கலை கைப்பற்றியதாக அவரது ஆய்வு கூறுகிறது.[2]

    1970களில் அப்பலோ விண்பயணிகளால் கொண்டுவரப்பட்ட நிலவின் இரண்டு பாறையின் நீரினைக் கொண்டு சாலும், அவரது குழு உறுப்பினர்களும் ஆய்வு நடத்தினர் என கடந்த மே 9 சயன்ஸ் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் பெரும்பாலும் நிலவின் வாழ்நாளின் முன்பகுதியில் ஏற்பட்ட எரிமலை உமிழ்வின் போது புதைந்த கற்குழம்பு வேறு பரப்புக்கு தள்ளப்படுவதால் உண்டானதாக இருக்கும் எனவும், நீரினை வான்வெளியில் அகலாமல் தடுக்கும் படிகங்களுடன் பிணைந்த அடர் எரிமலைக்குழம்பின் சிறு குமிழிகளை அது கொண்டுள்ளது. எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.[3]

    அந்தக் குழு பாறைகளின் நீரை அதிலுள்ள ஐதரசன் மற்றும் ஒரு அதிக கருவணுவை (நியூட்டிரான்) கொண்ட டியூட்டிரியம் ஆகியவற்றின் செறிவினை அளப்பதன் மூலம் பகுப்பாய்வு நடத்தியது. அதன் ஓரகத்தனிமங்களின் விகிதம் அந்நீரின் ஆதாரத்தை சூரியக் குடும்பத்திற்குள் உட்பட்டதுவாய் தெரிகிறது. சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள வாயுப் பெருங்கோள்கள் மற்றும் வால்வெள்ளிகள் மிக அதிக ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைக் கொண்டதாகும். பூமியின் நீரும் மிக குறைந்த விகிதத்தைக் கொண்டதாகும்.

    பூமி மற்றும் பிற நுண்விண்கற்களின் குறைந்த ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைப் போன்றே நிலவுப் பாறைகளின் நீரும் குறைந்த விகிதத்தைக் கொண்டிருப்பது சால் மற்றும் அவரின் குழுவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. இதனால், பூமியின் நீரும் நிலவின் நீரும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரே மாதிரியான நுண்விண்கற்களின் தாக்கத்தினால் ஏற்பட்டது என கூறலாம் என சாலின் அறிக்கை கூறுகிறது.[4]

    நிலவின் கலைகள்

    கலைகள் என்பது நிலவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும் தனித்தனி நிலைகளைக் குறிப்பன. இதனைப் பிறை என்று சொல்வது பெருவழக்கு. முதல் நாள் நிலாவே தென்படாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதனை புதுநிலவு என்றும் அமாவாசை என்றும் அழைப்பர். பிறகு ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக நிலவின் வெளிச்சம் தெரியும் பகுதி பெரிதாகிக் கொண்டே வரும். இவைகளை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்று சொல்வார்கள். பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து ஒரு நாள் முழு நிலா பெரிதாய் வட்ட வடிமாய்த் தெரியும். இதனை முழுநிலவு என்றும் பௌர்ணமி என்றும் அழைப்பர். பிறகு அடுத்த சில நாட்கள் நிலா சிறுகச் சிறுகத் தேய்ந்து கொண்டே போய், மீண்டும் புதுநிலவு நாளுக்கான நிலைக்கே திரும்பி விடும். புதுநிலவு முதல் முழுநிலவு வரை வளர்ந்து வருவதால் வளர்பிறை என்றும், பிறகு அடுத்த புதுநிலவு நாள் வரை தேய்ந்து வருவதால் தேய்பிறை என்றும் அழைப்பர். நிலா நம் புவியைச் சுற்றி வருகையிலே எப்படி கதிரொளி நிலாக் கோளத்தின் மீது பட்டு புவியில் தெரிகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.

    நிலாவின் கலைகள்/பிறைகள் தோன்றுவதைக் காட்டும் படம்

    இவற்றையும் பார்க்கவும்

    உசாத்துணை

    1. "The Lunar Orbit Throughout Time and Space" (September 2005).
    2. Moon's water may have earthly origins, சயன்ஸ் நியூஸ், மே 9, 2013
    3. A. Saal et al. Hydrogen isotopes in lunar volcanic glasses and melt inclusions reveal a carbonaceous chondrite heritage. Science. Published online May 9, 2013. doi: 10.1126/science.1235142.
    4. Moon's water may have come from Earth-bound meteorites, லாஸ் ஏஞ்சலிசு டைம்சு, மே 9, 2013

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.