முழுநிலவு

முழுநிலவு, முழுமதி அல்லது பவுர்ணமி என்பது புவியில் இருந்து காணும் போது நிலவு முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளாகும். வானியலின்படி, கதிரவன் மற்றும் நிலவிற்கு இடையே புவி வரும் நாளே முழுநிலவு ஆகும். அப்போது கதிரவனின் வெளிச்சம் நிலவின் முற்பக்கத்தின் மீது முழுமையாகப் பதிகிறது. ஆகவே அது ஒளிர்ந்து புவியில் இருந்து காணும்போது வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. அப்போது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கம் இருளாக இருக்கும்.

14 நவம்பர் 2016 அன்று தோன்றிய பெருநிலவு, புவியின் நடுப்பகுதியில் இருந்து 356,511 km (221,526 mi) தொலைவில் இருந்தது

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே முழுநிலவு நாளன்று பெரும்பாலும் புவியின் நிழல் நிலவின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது ஏற்படும் நிகழ்வே நிலவு மறைப்பு ஆகும். முழுமையான நிலவு மறைப்பின் போது ராலே ஒளிச்சிதறல் காரணமாக நிலவு சிவப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் அது சிவப்பு நிலவு என்றும் குருதி நிலவு என்றும் அழைக்கப்படுகின்றது

இந்து சமயத்தில் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பவுர்ணமியும் ஒன்று.

இந்து சமயத்தில்

இந்து சமயத்தில் பல்வேறு சிறப்பு நாட்களும் பவுர்ணமி தினத்தன்றே வருகின்றன. 12 தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.

  1. சித்ரா பவுர்ணமி - அனுமன் ஜெயந்தி
  2. வைகாசி பவுர்ணமி - நரசிம்ம ஜெயந்தி, புத்த பூர்ணிமா
  3. ஆனிப் பவுர்ணமி - சாவித்திரி விரதம்
  4. ஆடிப் பவுர்ணமி - குரு பூர்ணிமா, ஹயக்ரீவ ஜெயந்தி
  5. ஆவணிப் பவுர்ணமி - ரக்சா பந்தன், ஓணம்
  6. புரட்டாசி பவுர்ணமி - உமா மகேசுவர விரதம்
  7. ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
  8. கார்த்திகைப் பவுர்ணமி - கார்த்திகை விளக்கீடு
  9. மார்கழிப் பவுர்ணமி - திருவாதிரை
  10. தைப் பவுர்ணமி - தைப்பூசம்
  11. மாசிப் பவுர்ணமி- மாசி மகம்
  12. பங்குனிப் பவுர்ணமி - ஹோலி, பங்குனி உத்திரம்

பௌத்தமும் முழுநிலவும்

இலங்கையில் பௌத்தர்களுக்கு முழுநிலவு புனித நாளாக விளங்குகின்றது. பௌத்தர்கள் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த தினமாக ஒவ்வொரு முழுநிலவன்றும் வழிபாடு, தான தர்மங்கள் செய்கின்றனர். ஆகவே ஒவ்வொரு முழுநிலவு நாட்களும் இலங்கையில் அரசு விடுமுறை தினமாகும்.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.