கற்பகம் (மரம்)

கற்பக மரம் அல்லது கற்பக விருட்சம் (Kalpavriksha) (சமசுகிருதம்: कल्पवृक्ष), என்பது இந்து சமய நம்பிக்கைப்படி தேவ லோகத்தில் இருக்கும் மரமாகும். கல்ப தரு, கல்ப விருட்சம், கற்பக விருட்சம் என்றும் அழைக்கப்பெருகிறது. இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வேண்டும் என்று நினைத்தாலும் அது உடனே கிடைக்கும் என நம்பினர். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீதிநூல்கள் பாடிய பிற்கால ஔவையார் பழவினையின் வலிமையை விளக்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

தெய்வீக மரமான கற்பகத்தை காக்கும், கின்னரர்கள், கின்னரிகள், அரம்பையர்கள் மற்றும் தேவர்கள். எட்டாம் நூற்றாண்டு பாவோன் கோயில், ஜாவா, இந்தோனேசியா.

தன் நெஞ்சுக்கு நீதி கூறுவதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.

நெஞ்சே! உன் தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும். நீ ஆசைப்பட்டதெல்லாம் உனக்குக் கிட்டாது. அரிதின் முயன்று கற்பக மரத்தடிக்குச் சென்று நீ ஏதேதோ ஆசைப்படும்போது அந்த மரம், உண்டால் சாகும் நச்சுத்தன்மை வாய்ந்த எட்டிக்காயை (காஞ்சிரங்காயை) தருமேயானால் அது நீ முற்பிறவியில் செய்த தீவினையின் பயன் என எண்ணிக்கொள்க.[1]

தோற்றம்

பாற்கடலை கடைந்து அமிர்தம் பெறுவதற்காக மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு அசுரர்கள் பாம்பின் தலையின்புறமும், தேவர்கள் வாலின் புறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். அப்பொழுது கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை பஞ்ச தருக்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.

நம்பிக்கை

இம்மரம் இந்திரனை அரசனாக் கொண்ட தேவ லோகத்தில் இருப்பதாகவும், இம்மரத்தின் கீழ் அமர்ந்து நினைப்பதெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. [2]

பூலோக கற்பக விருட்சம் என்று பனை மரம் அழைக்கப்படுகிறது.

மேற்கொண்டு படிக்க

ஆதாரம்

  1. எழுதிவா றேகாண் இரங்குமட நெஞ்சே
    கருதியவா றாமோ மருமம் - கருதிப்போய்க்
    கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
    முற்பவத்தில் செய்த வினை. - மூதுரை என்னும் வாக்குண்டாம் - பாடல் 22

  2. http://temple.dinamalar.com/new.php?id=628 "தேவலோகத்து கற்பக மரம், கேட்டதைக் கொடுப்பதைப்போல"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.