ஆதிசேஷன்

ஆதிசேஷன்(சமஸ்கிருதம்:शेष, சேஷா) என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில், காசிபர்-கத்ரு தம்பதியரின் மகன். மேலும் பாற்கடலில் விஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகமாகும். ஆதிசேசன் சிவபெருமானது கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பின் சகோதரனாகவும் அறியப்படுகிறார். [1]

ஆதிசேசனை பஞ்சனையாகக் கொண்ட விஷ்ணு. பூதேவி மற்றும் ஸ்ரீதேவி மற்றும் நாபிக் கமலத்தில் பிரம்மனுடன் கூடிய மகாவிஷ்ணுவின் பஞ்சலோக சிலை
ஆதிசேஷன்
தன் மனைவியருடன் ஆதிசேஷ இருக்கையில் அமர்ந்திருக்கும் விஷ்ணு, ராஜா ரவிவர்மா ஓவியம்
வகைவிஷ்ணு
நாகம்
இலட்சுமணன்
பலராமன்

கருத்துரு

பாற்கடலில் விஷ்ணுவின் படுக்கையாக ஆதிசேசன்

ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, அவரது ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். உதாரணமாக, விஷ்ணு இராமபிரானாக அவதரித்த காலை, அவருக்குத் தம்பியாக, இலக்குவனாக உருவெடுத்தவர் ஆதிசேஷனே. இதன் காரணமாகவே, இலக்குவனார், தனது தமையன் இராமபிரானுக்கு நேரெதிராக, வேகம் மிகக் கொண்டவராகவும், முன்கோபம் மிகுந்தவராகவும் காணப்பட்டார் என்பர்.

ஆதிசேஷன் பற்றிய சில மரபு நம்பிக்கைகள்

  • உலகினைக் காக்கும் ஸ்ரீமன் நாராயணனையே தாங்கி நிற்கும் ஆதிசேஷன் ஒரு முறை உடல் நலிவுற சிவபெருமான் திருவுளப்படி, மகா சிவராத்திரி நாளன்று, முதலாம் சாமத்தில் கும்பகோணத்தில் குடி கொண்டுள்ள திரு நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேசுவர நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரத்துப் பாம்புர நாதரையும் வழிபட்டு உய்வடைந்ததாகப் புராண வரலாறு கூறுவதுண்டு.
  • ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேஷாசலம் எனப்படுவதும் உண்டு.
  • நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிசேஷன். தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில் எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தன் தம்பியான இலக்குவனிடம் ராம பிரான் கூறியிருந்தான். அவ்வேளை அங்கு துர்வாச மாமுனியை அனுமதிக்க இலக்குவன் தயங்கவே, அவர் அவனைப் புளிய மரமாகப் பிறப்பெடுக்கும்படி சபித்து விட்டார். அவ்வாறு, ஆழ்வார் திருநகரி என்னும் திருத்தலத்தில் இலக்குவன் புளிய மரமாகி விட, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி ராமபிரான் பின்னாளில் தாமே நம்மாழ்வாராக அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால், இத்தலம் சேஷ ஷேத்திரம் என விளங்குவதாகவும் கூறுவர்.

ஆதிசேஷன் பற்றிய திருப்பாடல்கள்

எம்பிரானைக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி திருப்பாடல்களைப் புனைந்த அவனது அடியார்கள் அனைவருமே அவனது படுக்கையாக விளங்கிப் புவியைக் காத்து நிற்கும் ஆதிசேஷனையும் பாடியுள்ளனர். அவற்றில் சில பாடல்களைக் கீழே காணலாம்:

பெரியாழ்வார் திருமொழி

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன; சூடும் இத்தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்*
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

திருப்பாணாழ்வார் திருமொழி

கையினார் சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல்
மெய்யனார் துளபவிரையார்கமழ் நீள்முடி எம்
ஐயனார் அணியரங்கனார் அரவினணைமிசை மேயமாயனார்
செய்யவாய் ஐயோ ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.

காண்க

ஆதாரங்கள்

  1. http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=2960 சங்கன் - பதுமனுக்கு சங்கர நாராயணனாகக் காட்சி தந்த சிவன்!
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.