அனுமன்

அனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் இராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர், இவரே அனுமனுக்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு.

வைணவக் கோயில்களில் அனுமாருக்கு தனி சன்னதி உண்டு. அனுமாரை வைணவர்கள் திருமாலின் சிறிய திருவடி என்று பேற்றுகின்றனர்.

பெயர்க் காரணம்

சமஸ்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாடையும்", "மன்" என்பதற்கு "பெரிதானதது" என்பதால், "ஹனுமன்" என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. இன்னொரு வழக்கில் "ஹன்" என்பதற்கு "கொன்றவன்", "மானம்" எனபதற்கு "தற்பெருமை" என்பதல், "ஹன்மான்", என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. ஆண்மந்தி (ஆண் குரங்கு) என்பதுதான் அனுமன் என்றும் அதிலிருந்து தான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

அஞ்சனை மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பர்.

பிறப்பு

இந்து புனைவுகளின்படி அனுமான் அஞ்சனைக்கும் கேசரிக்கும் மகனாகப் பிறந்தார்..[1][2] அனுமன் வாயு (காற்றின் கடவுள்) என்ற இந்து தெய்வத்தின் மகனென்ற தொடர்புடைய புராணக்கதைகள் கூறப்படுகிறது. பொ.ச. 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஏசுநாதரின் 'பர்வத ராமாயானம்" என்ற கதையில் அஞசனை பகவான் சிவனை நினத்து வழிபட்டார் எனவும், இதேசமயம் அயோத்தியின் அரசன் தசரதனும் குழந்தை வரம் வேண்டிபுத்திரகாம வேள்வி செய்தான் எனவும், யாகத்தின் விளைவாக, அவருக்கு புனிதமான (பாயசம்) கிடைத்தது எனவும், அவர் அதை அவருடைய மூன்று மனைவியருக்கு பிரிந்த்து வழங்கியதாகவும், அதன் விளைவாக தசரதனுக்கு இராமர், இலட்சுமணன், பரதன், மற்றும் சத்துருக்கன் ஆகியோர் பிறந்தனர் என்றும் கூறுகிறது. தெய்வீக கட்டளை மூலம் பருந்து ஒன்று அந்தப் பாயசத்தின் ஒரு பகுதியை பருகிச்சென்று, அஞ்சனா வழிபாட்டில் ஈடுபட்டிருந்த காடுகளின் மீது பறக்கும் போது அதை தவறவிட்டது எனவும், இந்துக் கடவுள் வாயு பகவான், விழுந்த தெய்வீக பிரசாதத்தை அஞ்சனாவின் கைகளில் வழங்கினார், அவர் அதை உட்கொண்டதன் விளைவாக அனுமன் அவளுக்குப் பிறந்தான் எனவும் கூறுகிறது.[2]வார்ப்புரு:Vn

இராமாயணம் அனுமனின் பிறப்பிடம் கிட்கிந்தை எனக் கூறுகிறது. கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் கங்காவதி வட்டம், ஹம்பி அருகேயுள்ள அஞ்சனாத்திரி மலையே கிட்கிந்தை என்று பலராலும் கூறப்படுகிறது.[3][4][5]

சிறு வயது

குழந்தை அனுமன் ஒரு பழம் என்று நினைத்து சூரியனை அடைகிறான்.பவன்ராவ் ஸ்ரீனிவாஸ்ராவ் பந்த் பிரதினிதி

வால்மீகியின் ராமாயணத்தின்படி, தனது குழந்தைப் பருவத்தில் ஒரு நாள் காலையில், அனுமனுக்குப் மிகுந்த பசி ஏற்பட்டது. வானில் சிவப்பு நிறத்தில் ஞாயிறு (விண்மீன்). உயர்ந்து வருவதைக் கண்டார். அது ஒரு பழுத்த பழம் என்று அதை தவறாகப் புரிந்துகொண்டு, அதைச் சாப்பிட வானில் தாவினார். இந்து புராணங்களில் சொல்லப்படும் தேவர்களின் தலைவனான இந்திரன் அனுமனைத் தடுத்து தனது வஜ்ராயுதத்தால் அவரது முகத்தில் தாக்கினார். அது அனுமனை அவரது தாடையில் தாக்கியது, உடைந்த தாடையுடன் அவர் இறந்து பூமியில் விழுந்து விடுகிறார். இதனால் அவரது தந்தை, வாயு (காற்று), (பிரிவு 4.65 இல் ராமாயணம் கூறுகிறது), வருத்தமடைந்து. காற்றை நிறுத்தி விடுகிறார். காற்று பற்றாக்குறை காரணமாக அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் துன்பத்தை உருவாக்கியது. அனைவரும் இந்தப் பிரச்சினையை சிவனிடம் கொண்டுச் செல்கின்றனர்.

அவர் தலையிட்டு அனுமனை உயிர்ப்பிக்க, வாயு மீண்டும் அனைத்து உயிர்களுக்கும் காற்றினை அளித்தார். இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டதனால் அனுமானின் உடலும் அதைப் போலவே மிகவும் வலிமையாக இருக்கும் என கடவுள் வரம் அளித்தார். மீண்டும் அவருக்கு வஜ்ராயுதத்தால் தீங்கு ஏற்படாது என வாயு வரம் அளித்தார். இந்திரனுடன் சேர்ந்து மற்ற கடவுளான அக்னிதேவனும் அனுமனுக்கு நெருப்பினால் எவ்வித திங்கும் ஏற்படாது எனவும், வருணன் நீரினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வாயு காற்றினால் எவ்வித திங்கும் ஏற்படாது எனவும், வரமளித்தனர். கடவுள் பிரம்மா அனுமன் தன்னால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லலாம் எனவும் அவரை எவரும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் வரமளித்தார். கடவுள் விஷ்ணு "கதா என்னும் ஆய்தத்தை வழங்கினார். எனவே இந்த வரங்களினால் அனுமனை ஒரு சிரஞ்சீவியாகவும், தனித்துவமான சக்திகளையும் பலத்தையும் கொண்டவரகவும் மாறுகிறார்.[6]

இந்த நிகழ்வுக்குப் பிறகு சிறிது காலம் கழித்து, அனுமன் தனது சக்திகளை அப்பாவி மக்களின் மீது சிறு சிறு சேட்டைகளக பயன்படுத்தத் தொடங்குகிறார். ஒரு நாள் அவர் ஒரு தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முனிவரிடம் இவ்வாறு சேட்டைகளில் ஈடுபடும் போது அநத முனிவர் கோபமுற்று அனுமனது வரங்கள் அனைத்தும் மறக்க சபிக்கிறார்.

இராமாயணத்தில் அனுமன்

சுந்தர காண்டம் எனப்படும் இராமாயணப் பகுதியில் அனுமனின் பின்வரும் வீரதீரச் செயல்கள் பேசப்படுகின்றன. அனுமன் இராமனை பிரிந்து தவிக்கும் சீதையைக் காண வான் மார்க்கமாக கடல் கடந்து இலங்கைக்கு சென்றதாக இராமாயணம் கூறுகிறது. சீதையை அசோக வனத்தில் சந்தித்து, இராமன் சீதையைத் தேடி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியையும், இராமனின் அடையாளமாக அவரது கணையாழியையும் அனுமன் தருகிறார்.[7] பின்னர் சீதையைச் சிறைப் பிடித்து வைத்திருக்கும் இலங்கை வேந்தன் இராவணனை அவனது அரசவையில் சந்தித்து, சீதையை விடுவிக்குமாறும் இல்லாவிட்டால் இராமன் போர் தொடுக்க வேண்டி இருக்கும் என்பதனையும் தூதுவனாகத் தெரிவிக்கிறார். தூதுவனை மதியாத இராவணன், அனுமனின் வாலில் தீ வைக்க, அங்கிருந்து தப்பிய அனுமன் இலங்கைத் தலைநகரத்தையே தன் வாலில் இருந்த தீயால் எரிந்து சாம்பலாகும்படி செய்து விட்டுத் திரும்புகிறார்.[8] இலங்கையில் இருந்து திரும்பியவுடன் இராமனைச் சந்தித்து, "கண்டேன் சீதையை" என்கிற நற்செய்தியையும், இராவணன் சமாதானத்திற்கு உடன்படாததையும் தெரிவிக்கிறார்.அனுமன் "சொல்லின் செல்வன்" எனவும் அழைக்கப்படுகிறார். பின்னர் போர் மூள்கிறது. போரில், சஞ்சீவினி மலையையே தனது கரத்தால் தூக்கி வந்து போரிலே மயக்கமுற்றவர்கள் நினைவு திரும்பிட வழி வகுத்ததாகவும் இராமாயணம் சொல்கிறது.

அனுமன்-இராமன் முதற் சந்திப்பு

இராமனும் இலக்குவனும் சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்து கொண்டு இருக்கையில், அவர்கள் உண்மையில் யாரெனக் கண்டுகொள்ள, சுக்ரீவன் அனுமனை அனுப்புகிறான். அனுமன் அந்தண வேடத்தில் இராம இலக்குவனை அடைந்து அவர்கள் யாரென வினவுகிறான். இராமன் தாங்கள் யாரெனக் கூறத் தொடங்கியதுமே, அனுமன் இராமன் காலில் வீழ்ந்து தன்னை அனுமன் என அறிவிக்க, இராமன் அனுமனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். அப்போது தொடங்கும் இராமன் - அனுமன் நட்பு எப்போதும் என்றென்றும் நிலைத்து திகழ்கிறது.[9] அனுமனின் இதயத்தில் இராமன் எப்போதும் ஒளி வீசித் திகழ்கிறார்.

அனுமனது உருமாறும் திறன்

இராமயணத்தில் பல இடங்களில் அனுமன் தனது உருவினை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவராக சொல்லப்படுகிறது. இராவணனின் மாளிகையில் சீதையைத் தேடும்கால் பூனை வடிவினில் தனது உருவினை மாற்றிக் கொள்கிறார். பின்னர், சீதையைக் கண்ட பின், ஒரு பெரிய மலை போல் தன் உருவினை மாற்றித் தனது திறனை சீதைக்கு காட்டுகிறார். இது போன்று உருவினை மாற்றிக் கொள்ளும் சித்திகளை அனுமன் தனது இளமைப் பிராயத்தில் சூரியக் கடவுளிடம் இருந்து பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

அனுமன் சஞ்சீவினி மலையைக் கொணர்ந்தது

அஹி மற்றும் மஹியை வதைத்த கையுடன் சஞ்சீவனி மலையை கொண்டு வரும் அனுமார்

போரில் இராமனது தம்பி இலக்குவன் காயங்களுடன் மூர்ச்சை அடைய, இலக்குவனைக் காப்பாற்ற சஞ்சீவினி மலையில் இருந்து மூலிகை மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுப்பப் படுகிறார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறான். அனுமன் அவற்றைக் கடந்து சஞ்சீவினி மலையை அடைந்தார். ஆனால் அங்கு குறிப்பிட்ட மூலிகையினை அவரால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. அன்றைய தினம் முடிவடையும் முன் மூலிகையினைக் கொணர்ந்தால் தான் இலக்குவனைக் காப்பாற்ற இயலும் என்கிற தறுவாயில், அனுமன் பெரியதோர் உருக்கொண்டு, சஞ்சீவினி மலையினை அப்படியே அடியோடு பெயர்த்தெடுத்து, வானத்தில் பறந்து போர்க்களத்தினை வந்தடைகிறார். பின்னர் மலையில் இருந்து மூலிகை மருந்து இலக்குவனுக்குத் தரப்பட, இலக்குவன் உயிர் பிழைக்க, இராமன் பெருமகிழ்ச்சி கொண்டு, அனுமனை கட்டித் தழுவுகிறார். அனுமனைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்பொடு அறிவிக்கிறார்.
அனுமன் சஞ்சீவினி மலையைத் தூக்கிக் கொண்டு அயோத்தி வழியே வானத்தில் பறந்து வருகையில் இராமனது தம்பி பரதன் யாரோ அரக்கன் ஒருவன் அயோத்தியைத் தாக்க வருகிறான் என்று நினைத்துக் கொண்டு அனுமனை நோக்கி அம்பினைத் தொடுகிறார். அம்பினில் இராமன் பெயர் இருப்பதைக் கண்டு, அனுமனைச் சும்மா இருக்க, அவ்வம்பு அனுமனது காலைத் துளைக்கிறது. உடனே வானத்தில் இருந்து கீழிறங்கி, பரதனிடம் அவன் தமையன் இலக்குவனைக் காக்கவே மலையைத் தூக்கிச் செல்வதாகச் சொன்னதைக் கேட்டதும் பரதன் தன் தவற்றை நினைத்து வருந்துகிறார். பதிலுக்குப் பரதன் தான் ஒரு அம்பினை இலங்கையை நோக்கி செலுத்தினால் அதில் அனுமன் அமர்ந்து எளிதாக இலங்கையை அடையலாமே என்கிறார். அனுமனோ அதை மறுத்துவிட்டு, அடிபட்ட காலுடனே இலங்கையை நோக்கி விரைகிறார்.

அனுமன் தனது இதயத்தைத் திறந்து காட்டுதல்

இராவண வதம் முடித்து இராமன் முதலானோர் அயோத்தி திரும்பி இராமன் முடி சூட்டிய பின், தனக்கு உதவி செய்தவர்களுக்கு தக்க பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது இராமன் அருகே யாதொரு பரிசினையும் எதிர்பாராத அனுமன் வர, இராமன் அனுமனை ஆரத் தழுவிக்கொண்டு, அனுமன் செய்த உதவிகளுக்கெல்லாம் எப்பரிசினாலும் ஈடுகட்ட முடியாது எனப் புகழ்கிறார். அக்கணம் சீதையோ ஏதாவது ஒரு பரிசினை தங்கள் நினைவாக அனுமனுக்கு தர வேண்டுமன விழைந்து, தன் கழுத்தில் அணிந்திருந்த இரத்திங்கள் பதித்த விலை உயர்ந்த மாலையைப் பரிசளிக்கிறார். அதை பெற்றுக்கொண்ட அனுமன், அந்த மாலையில் பதித்திருந்த இரத்தினங்களை வெளியே எடுத்து அதில் இராமர்-சீதை தெரிகிறார்களா எனப் பார்க்கிறார். ஏனெனில் இராமர் சீதையை விட அவருக்கு உயர்வானது வேறொன்றுமில்லை. இதை அறியாத ஒரு சிலர் அனுமனைப் பார்த்து நகைக்க, அனுமனோ அனைவரும் அறியும் வண்ணம் தனது மார்பினைத் திறந்து அதில், தன் இதயத்தில் இராமர் சீதை வீற்றிருப்பதைக் காட்டுகிறார்.

மகாபாரதத்தில் அனுமன்

இராமயணத்தைப்போல மகாபாரதத்தில் அனுமன் முக்கிய கதைப்பாத்திரம் இல்லை. ஆனால் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு ஒரு வகையில் அண்ணன் உறவு வருகிறது. பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது, காட்டு வழியே பீமன் பயணிக்கும்போது, அங்கே வயோதிக குரங்கு ஒன்று படுத்துக் கொண்டிருக்க, அதன் வாலோ நீண்டு பீமன் நடந்து செல்லும் பாதையை அடைத்துக் கொண்டிருந்தது. பீமன் அதன் வாலை தள்ளி வைத்து விட்டு செல்லலாம் என எண்ணி, வாலைத் தூக்க யத்தனித்தான். ஆனால் சிறந்த பலசாலி எனப்பெயர் பெற்ற பீமனாலேயே அக்குரங்கின் வாலினை அப்புறப்படுத்த இயலவில்லை. பின்னர் பீமன், அது சாதரணக் குரங்கில்லை என உணர்ந்து, அக்குரங்கிடம் மிகுந்த மரியாதையுடன் யாரென வினவிட, அனுமன் தான் யாரென்பதை பீமன் அறியச் செய்கிறார்.
குருக்ஷேத்திரப் போரில், அர்ஜூனனின் தேரில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இது மானசீகமாக தேரின் பலத்தினைக் கூட்டியதாகச் சொல்வார்கள். கண்ணன் போர்க்களத்தில் பகவத் கீதையினை அர்ஜூனனுக்கு உபதேசித்தபோது, அனுமனும் கொடி வழியாக கேட்டதாகச் சொல்லப்படுகிறது. போர் நிறைவடைந்தபின், அர்ஜூனனும், கண்ணனும் தேரில் இருந்து கீழே இறங்கியபின், கண்ணன் அனுமனிடம் இதுவரை தேரின் கொடியாக இருந்தமைக்கு நன்றி சொல்லிட, உடனே அனுமன் தன் உருவினைக் காட்டி, கண்ணனை வணங்கி விட்டு, கொடியில் இருந்து மறைந்து விடுகிறார். அனுமன் மறைந்தவுடனேயே, தேர் எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அர்ஜூனனைப் பார்த்து கண்ணன், "அர்ஜூனா, இதுவரை போரினில், இத்தேரின் மேல் வீசப்பட்ட அனைத்து கொடிய பாணங்களையும் தாங்கி நின்றது என்றால், அதற்கு நானும் அனுமனும் இத்தேரினில் இருந்ததுவே காரணம். இல்லாவிட்டால், இத்தேர் எப்போதோ அப்பாணங்களின் சக்தியினால் எரிந்து போயிருக்கும்" என்றார்.

அனுமர் உருவங்கள்

அனுமர் உருவச் சிலைகள் பல்வேறு உருவங்களில் வணங்கப்படுகிறார். வீரகோலம், நின்றக் கோலம், யோகக் கோலம் போன்ற உருவங்களில் அனுமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.

அனுமனுக்கான கோயில்கள்

மட்டக்களப்பு,மயிலம்பாவெளி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள அனுமன் சிலை

இந்து சமயக் கோயில்களில் அனுமருக்கு தனிச்சன்னதிகளும், சிற்பங்களும் அமைந்துள்ளன. வைணவக் கோயில்களில் இராமர் சன்னதி முன்பு வணங்கியபடி இவரது உருவச்சிலைகள் அமைக்கப்படுகின்றன.

தனிக்கோயில்கள் பெருமளவு அனுமருக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவர் இராமாயணத்தில் விஸ்வரூபம் எடுத்தமையால், பல கோயில்கள் பெரிய சிலைகள் வைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் நாமக்கல்லில் இருக்கும் 18 அடி உயர அனுமன் சிலை மிகவும் புகழ் பெற்றது. காசியிலும் அனுமனுக்குத் தனியான கோயில் உண்டு.உலகிலேயே மிக உயரமான அனுமன் சிலை, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ளது .இது 135 அடி ஆகும்.

மேற்கோள்கள்

  1. Encyclopaedic Dictionary of Puranas Vol 2.(D-H) pp=628–631, Swami Parmeshwaranand, Sarup & Sons, 2001, ISBN 978-81-7625-226-3
  2. https://www.deccanchronicle.com/nation/current-affairs/201218/at-hampi-fervour-peaks-at-hanumans-birthplace.html
  3. http://hampi.in/anjaneya-hill
  4. https://www.karnataka.com/hampi/anjeyanadri-hill/
  5. Catherine Ludvik (1994). Hanumān in the Rāmāyaṇa of Vālmīki and the Rāmacaritamānasa of Tulasī Dāsa. Motilal Banarsidass. பக். 61–62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1122-5. https://books.google.com/books?id=KCXQN0qoAe0C.
  6. 5. சூடாமணிப்படலம்
  7. 13. இலங்கைஎரியூட்டு படலம்
  8. 3. நட்புக் கோட் படலம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.