வங்கிபுரத்தாய்ச்சி

வங்கிபுரத்தாய்ச்சி மணக்கால் நம்பியின் சீடர்களில் ஒருவர். நாதமுனிகள் 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், ஆளவந்தார் 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பரமபதம் எய்தினர். எனவே இவரது காலம் 10 ஆம் நூற்றாண்டு. வங்கிபுரம் என்பது ஊரின் பெயர். வங்கிபுரத்து ஆய்ச்சி [1] என்றும், வங்கிபுரத் தாய்ச்சி [2] என்றும் கொள்ளும் வகையில் இந்தப் பெயர் அமைந்துள்ளது.

இவர் நீண்ட கலிப்பா ஒன்றைப் பாடியுள்ளார்.[3] இதில் ஆழ்வார்களின் பெயர்களும், 108 திருப்பதிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.[4]

இந்த நூலின் பெயர் நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை.[5]

கடலலைகள் தோற்றும் கடும்பிறவி வெள்ளத்
தொடரலைகள் தோன்றி நில் லாதே – மடநெஞ்சே
ஆழ்வார்கள் பாயிரத்தால் அலங்கரித்த மால்பதிகள்
மூவாறு முப்பத்து மூன்று – என்னும் வெண்பாப் பாடலுடன் இந்த நூல் தொடங்குகிறது.

செய்யசுட ராழியான் சேவடிக்குச் சொன்மாலை
சூட்டிய பொழ்கையார், நாரணற்கு ஞானச்
சுடர்விளக் கேற்றிய ஞானமொழி பூதத்தார் – என்று தொடங்கி பாடல் வளர்கிறது.

முன்னும் இராமனாய்த் தானே பின்னும்
இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் ஆனான் தன்னைக் கண்ணபுத்
தடிகள் கலியன் கலியன் உரைசெய்யத்
தேனார்ரும் சொல் தமிழ்மாலை
செய்ய பாவம் நில்லாவே
ஆர் வங்கிபுரத்தாய்ச்சி ஆழ்வார்கள் பாசுரத்தால்
சேரும் திருப்பதிகள் நூற்றெட்டும் – சீராய்
உரைப்பார் உரைசொல்வார் ஒருவார் உள் மகிழ்வார்
தரைப்பால் தமக்குச் சரண்.

– என முடிகின்றது.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. ஆய்ச்சி ஆயன் என்பதன் பெண்பால்
  2. தாய்ச்சி என்பது தாயைக் குறிக்கும் சொல்
  3. இது தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையக் குறிப்பு தொகுதி 2, பக்கம் 238-239
  4. மணவாள மாமுனி பாடிய ‘நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி’ வேறு. காலத்தால் பிற்பட்டது.
  5. ஆழி யான் பதி நூற்றெட்டும் ஓதுவார்
    அன்று செய்வினை அன்றே அகலுமே – இந்த நூலில் வரும் பாடல் அடிகள்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.