தரிகொண்ட வேங்கமாம்பா

தரிகொண்ட வேங்கமாம்பா (English:Tarikonda Venkamamba) (Telugu:తారికొండ వెంకమాంబ) ; கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் எண்ணற்ற தெலுங்கு இலக்கியங்கள் படைத்து திருமலை வேங்கடவன் மீது பக்தி செலுத்திய வைணவ பெண் அடியார்களுள் ஒருவர்.

தரிகொண்ட வேங்கமாம்பா
பிறப்பு1730
தரிகொண்டா, ஆந்திரா
இறப்பு1817 (87ஆம் அகவையில்)
திருமலை
மற்ற பெயர்கள்வேங்கமாம்பாள்
பணிவைணவ அடியார், கவிஞர்

வாழ்க்கைக் குறிப்பு

கிபி 1730 ம் ஆண்டு, ஆந்திராவில் உள்ள தரிகொண்டா எனும் கிராமத்தில் கிருஷ்ணய்யமத்யா, மங்கமாம்பா எனும் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர். சிறுவயது முதலே திருமலை வேங்கடவன் மீது அளவில்லா பக்திக் கொண்ட இவர், திருமலை வேங்கடவனே தன்னுடைய கணவனாக வரித்துக்கொண்டு வாழ்ந்துவந்தார்.ஆயினும் அக்காலத்து வழக்கப்படி மிகச்சிறுவயதிலேயே பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இவருக்கு வேங்கடாசலபதி என்பவருடன் திருமணம் நடந்தேறியது. இளம்பிராயத்திலே கணவர் இறந்தபோது கூட சுமங்கலி பெண்களுக்குண்டான மங்கள சின்னங்களை நீக்காது வாழ்ந்தது அக்காலத்திலேயே மிகப்பெரிய புரட்சியாகும். திருமலை வேங்கடவனே தன்னுடைய கணவனாகக் கொண்டதால் இவர் இறுதிவரை மங்கள சின்னங்களோடே வாழ்ந்தார்.

இலக்கிய பணி

சுப்ரமண்யுடு என்ற ஆசானிடம் யோகக் கலை பயின்று திருமலையிலேயே வாழ ஆரம்பித்த இவர் பின்வரும் தெலுங்கு நூல்களை இயற்றி உள்ளார்.

  • தரிகொண்ட நரசிம்ம சதகம்
  • நரசிம்ம விலாச கதா
  • சிவ நாடகம்
  • பாலக்கிருஷ்ண நாடகம்
  • யக்‌ஷ கானம்
  • ராஜயோகம்ருத சாரம்
  • த்விபத காவியம்

மேலே குறிப்பிட்ட யாவும் முதல்முறை திருமலை வந்தவுடன் இயற்றியது. தும்புரு குகையிலிருந்து மீண்டும் வந்தபோது படைத்தவை கீழே

  • விஷ்ணு பாரிஜாதம்
  • செஞ்சு நாடகம்
  • ருக்மிணி நாடகம்
  • ஜலக்கீரட விலாசம்
  • முக்திகாந்தி விலாசம்
  • கோபி நாடகம்
  • ராம பரிநயம்
  • ஸ்ரீ பாகவதம்
  • ஸ்ரீ கிருஷ்ண மஞ்சரி
  • தத்வ கீர்த்தனலு
  • வசிஷ்ட ராமாயணம்
  • ஸ்ரீ வேங்கடாசல மகாத்மியம்
  • அஷ்டாங்க் யோகசாரம்

திருமலையும் வேங்கமாம்பாளின் ஆரத்தியும்

திருவேங்கடவன் நகை காணாமல் போக, அப்பழி தினமும் கோயில் நடைசாற்றியவுடன் வேங்கடவன் முன் பாடும் வழக்கத்தை கொண்டிருந்த இவர் மீது விழுந்தது. இதனால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இவர் தும்புறு குகையிலிருந்து திருமலை கருவறைக்கு ரகசிய பாதை அமைத்து தன்னுடைய பாமாலை பணியை யாருமறியவண்ணம் ஆறு வருடங்கள் தொடர்ந்து வந்தார்.

பின்னாளில் திருவேங்கடவன் மூலம் இவரின் பக்தி எல்லோராலும் அறியப்பட்டு மீண்டும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதோடு இவரின் பாடலோடும் கற்பூர ஆரத்தியோடும் நடைசாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இவ்வழக்கம் இன்றும் தொடர்ந்து ஏகாந்த சேவையில் அதாவது கோயில் நடைமூடப்படும் முன் செய்யும் உபசாரங்களில் இறுதியாக எடுக்கப்படும் கற்பூர ஆரத்திக்கு "வேங்கமாம்பா ஆரத்தி" என்றே பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

பெருமை

திருமலை மாடவீதிக்கு அருகிலுள்ள இவரின் பிருந்தாவன (உடல் புதைக்கப்பட்ட இடம்) வளாகத்தை உள்ளடக்கி SVBNR உயர்நிலைப் பள்ளியாக திருமலை கோயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ஆயினும் வேங்கமாம்பாளின் சமாதியை யாவரும் வணங்கும் வண்ணம் அடியார்கள் எப்போதும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் திருமலையை வணங்க வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் இடும் மூன்று பெரிய வளாகங்களுக்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" என்று இவரின் பெயரை இட்டு திருமலை கோயில் நிர்வாகம் பெருமைச் சேர்த்துள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.