அரையர்

அரையர் என்போர் வைணவக் கோயில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர்.இவர்கள் முத்தரையர் சமூகத்தை சார்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஆடவரே. இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை என்று அழைக்கப்படுகிறது[1]. அரையர் என்பவர் கோயில் மூலவருக்கான பலவித சேவையில் தினசரி ஈடுபட்டாலும் நாதமுனிகள் ஏற்பாட்டுக்கிணங்க பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப்பூரம் உள்ளிட்ட திருவத்யயனம் உற்சவங்களில் இறைமுன் அரையர் சேவை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர்.[2]

தொடக்கம்

திராவிட வேதம் தொகுத்த நாதமுனிகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவையை துவக்கி வைக்கபட்டது[3]. மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் எனும் தன்னுடைய இரண்டு மருமகன்களுக்கும் நாதமுனிகள் நாலாயிர பிரபந்தங்களைப் பண் மற்றும் தாளத்துடன் கற்பித்ததாகவும் இவர்கள் வழி வந்தவர்களும் இவர்களிடம் கற்றவர்களுமே இன்று தமிழகமெங்கும் உள்ள அரையர்கள் என நம்பப்படுகிறது. முதன் முதலில் இச்சேவை திருவரங்கத்தில் துவக்கப்பட்டது.

அரையர் சேவை

வைணவ ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழிபாடுகளில் ஒன்று அரையர் சேவையாகும். திருக்கோயில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்சகச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும் இறைவனுக்குச் சாத்தப்பட்ட மாலையோடு வழக்கமான வைணவ சின்னங்களையும் அணிந்திருப்பர். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். இத்தகு அரிய கலை வைணவ கோயில்களில் மட்டும் காணப்படும்.

உற்சவர் முன்பு நிகழ்த்தப்படும் இச்சேவையானது மூன்று பகுதிகளைக் கொண்டது. பிரபந்தத்தின் குறிப்பிட்ட பாடலை பாடுவது முதலாவதாகவும், பாடப்பெற்ற பிரபந்தத்தின் பொருளுக்கு ஏற்றாற்போல் அபிநயம் பிடித்து ஆடுவது இரண்டாவதாகவும், பாடலின் உட்பொருளை விளக்கிக் கூறுவது மூன்றாம் பகுதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இச்சேவை. இது கதையைத் தழுவியமையாமல் ஒரு பாடலுக்கான பொருள் விளக்கம் தரும் நிலையில் அமைகிறது.

இந்நிலையில் அரையர் ஒருவரே பல்வேறு பாத்திரங்களாக வேடப்புனைவு மாறுதல் இன்றி அவிநயிப்பர். காட்சி மாற்றங்களை, மாந்தர் கூற்று வழியே பாகுபடுத்துவர். பாசுரத்தின் ஒரு தொடருக்குப் பல நிலைகளில் அபிநயம் செய்யும் சிறப்பினை இக்கலையில் காணலாம்.

சிறப்பு

பலநாட்கள் பயிற்சிக்கு பின்னே அரையர்களை இச்சேவையை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் நிரம்பிய மொழிப்புலமை இச்சேவைக்கு அடித்தளம் என்பதால் பொதுவாகவே அரையர்கள் தமிழ்மொழியிலும், பிரபந்தத்திலும் மிகுந்த புலமை மிக்கவர்களாகவும் உள்ளனர். அரையர், அறையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர், தம்பிரான்மார் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.பிரபந்தங்களில் அரையர்கள் தமிழ்ச் சூர்ணிகைகளைச் சேர்த்துள்ளனர்.[4]

ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் பாடி அனுபவித்து அவற்றின் விளக்கங்களை அழகுறப் பேசி நடிக்கும் முத்தமி்ழ்க்கலையே அரையர்சேவையாகும். பாசுரத்தைப் பண்ணுடன் பாடுதல், பாசுரத்திற்கு அபிநயம் செய்தல்,பாசுரத்திற்கு உரை கூறுதல் என்னும் முறையில் இக்கலை ஆழ்வார் பாசுரங்களுக்கு இயற்பா, இசைப்பா எனப் பகுப்போடு அமையாது, முத்தமி்ழின் மூன்றாம் கூறான நாடகத் தமிழையும் இணைத்துப் முத்தமிழ் வடிவம் கொடுத்துள்ளது.

தற்காலம்

ஓதுவார்களைப் போல அரைய‌ர்களைப் புரப்போர் இல்லாது போனமையால் அரையர் குடும்பங்கள் நசிந்து போயின. இன்று திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகிய தமிழக வைணவக் கோயில்களிலும் தென்கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலில் மட்டுமே அரையர் சேவை வழக்கில் உள்ளது. மார்கழி மாத பகல் பத்து மற்றும் இராப்பத்து உற்சவங்களில் அரையர் சேவை சிறப்பாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.